இரு டிவி5 ஆசிரியர்கள் கைது-ஜெகன் டிவி மீதும் வழக்கு

கடந்த ஆண்டு செப்டம்பர் 2ம் தேதி கடும் புயல்-மழையில் பயணித்த ரெட்டியின் ஹெலிகாப்டர் ஆந்திராவின் நல்லமலை மலைப் பகுதியில் விழுந்து வெடித்துச் சிதறி அதிலிருந்த அனைவரும் பலியாயினர்.
இந் நிலையில், ஆந்திராவின் கிருஷ்ணா-கோதாவரி படுகையி்ல் உள்ள எரிவாயுவை பகிர்ந்து கொள்வது தொடர்பாக அம்பானி சகோதரர்களுக்கு இடையே ஏற்பட்டுள்ள மோதலில் தான் ராஜசேகர ரெட்டி சதி செய்து கொல்லப்பட்டார் என்று ஒரு 'த எக்ஸைல்ட் மேகசீன்' என்ற ரஷ்ய இணையத் தளம் கூறியுள்ளது.
அமெரிக்க பத்திரிக்கையாளர் மார்க் ஆம்ஸ் என்பவர் அளித்த தகவலின்பேரில் இந்தச் செய்தியை எக்ஸைல்ட் மேகசீன் வெளியிட்டது.
இதை மேற்கோள் காட்டி டிவி5 செய்தி வெளியிட்டதால் ஆந்திராவில் பெரும் வன்முறை மூண்டது.
மாநிலம் முழுவதும் உள்ள அம்பானி சகோதரர்களுக்குச் சொந்தமான செல்போன் ஷோரூம்கள், காய்கறி கடைகள், பெட்ரோல் பங்க்குகள், தியேட்டர்கள் ஆகியவற்றை தாக்கப்பட்டன. நந்தியாலில் அரசு பஸ் ஒன்று எரிக்கப்பட்டது. கல்வீச்சில் 2 பஸ்கள் சேதமடைந்தன.
இதையடுத்து, அந்த டிவி சேனல் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்திய தண்டனைச் சட்டம் 153(ஏ), 505(2) (மக்களில் ஒரு பிரிவினரிடையே வன்முறையை தூண்டுதல்), கேபிள் நெட்வொர்க் ஒழுங்குமுறை சட்டத்தின் 16வது பிரிவு ஆகியவற்றின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்தத் தொலைக்காட்சியின் சீனியர் எக்சிகியூட்டிவ் எடிட்டர் பிரம்மானந்த ரெட்டி, இன்புட் எடிட்டர் வெங்கட கிருஷ்ணா ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
ஜெகன்மோகன் டிவி மீதும் வழக்கு:
மேலும் டிவி5 தொலைக்காட்சியின் செய்தியை மறுஒளிபரப்பு செய்த சாக்ஷி டிவியின் தலைமை செயல் அதிகாரி ராமி ரெட்டி மற்றும் என்டிவி ஆகியவை மீதும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்த சாக்ஷி டிவி மறைந்த ராஜசேகர ரெட்டியின் மகன் ஜெகன் மோகன் ரெட்டிக்கு சொந்தமானது என்பது குறிப்பிடத்தக்கது.
இது தவிர, இந்த ஒட்டுமொத்த விவகாரம் தொடர்பாக சிஐடி விசாரணைக்கும் ஆந்திர முதல்வர் ரோசய்யா உத்தரவிட்டுள்ளார்.
மேலும் ராஜசேகர ரெட்டியின் மரணம் குறித்த சிபிஐ விசாரணையை விரைந்து முடிக்குமாறு மத்திய உள்துறை அமைச்சகத்தையும், விமான போக்குவரத்து அமைச்சகத்தையும் ரோசய்யா கேட்டுக் கொண்டுள்ளார். இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்துடனும் அவர் பேசினார்.
மேலும் ரிலையன் நிறுவனங்கள் மீது தாக்குதல் நடத்தியது தொடர்பாக போலீசார் 96 வழக்குகள் பதிவு செய்து 289 பேரை கைது செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications