திகில் நகராகும் சென்னை அசோக் நகர் - மீண்டும் ஒரு பெண் கொடூரக் கொலை

சென்னை அம்பத்தூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஆடிட்டராகப் பணியாற்றி வருபவர் சுப்பிரமணி. இவரது மனைவி கலா (42). இவர்களுக்கு தியாகராஜன் என்ற மகன் உள்ளார். இவர் பொறியியல் கல்லூரியில் படித்து வருகிறார்.
சுப்பிரமணியின் வீடு அசோக் நகர் 18வது அவென்யூவில் 92வது தெருவில் உள்ளது. அங்குள்ள சாய் பிரசாந்த் என்ற அபார்ட்மென்ட்டில் அவரது குடும்பம் வசித்து வருகிறது.
தினசரி காலையில் கணவரும், மகனும் கிளம்பிச் சென்ற பின்னர் ஜிம்முக்குப் போவது கலாவின் வழக்கம். ஜிம்மில் உடற்பயிற்சியை முடித்து விட்டு பிற்பகலில் வீடு திரும்புவார்.
நேற்றும் வழக்கம் போல பிற்பகல் 1 மணியளவில் வீடு திரும்பினார். வந்த சிறிது நேரத்தில் அவரது வீட்டிலிருந்து அலறல் சத்தம் கேட்டது. இதைக் கேட்ட கீழ் தளத்தில் இருந்த பெண்மணி, தனது மகனை அனுப்பி என்ன என்று பார்க்கக் கூறினார். அந்த இளைஞரும் மேலே வந்து பார்த்தபோது கத்தியால் குத்தப்பட்டு போராடிக் கொண்டிருந்தார் கலா.
அந்த சமயத்தில் தியாகராஜனும் வீடு திரும்பினார். தாயார் கத்தியால் குத்தப்பட்டு ரத்த வெள்ளத்தில் மிதப்பதைப் பார்த்து அலறினார். சிறிது நேரத்தில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
போலீஸாருக்குத் தகவல் போய் விரைந்து வந்தனர். போலீஸார், மோப்ப நாயுடன் விரைந்து வந்து விசாரணையில் இறங்கினர்.
இந்த படுகொலை தொடர்பாக இணை கமிஷனர் சக்திவேலு கூறுகையில்,
கொலையாளி ஒருவன் மட்டுமே வந்தது தெரிய வந்துள்ளது. அவனை கொலை நடந்த அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர்கள் பார்த்துள்ளனர். எதிரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர்களும் பார்த்து இருக்கிறார்கள்.
அவனுக்கு 25 வயதில் இருந்து 30 வயது இருக்கும். அவன் கறுப்பு கலர் பேண்டும், அதே கலரில் டி-சர்ட்டும் அணிந்துள்ளான். கலா உடற்பயிற்சி கூடத்தில் இருந்து வரும்போதே கொலையாளியும் பின்தொடர்ந்து வந்துள்ளான். அவர் வீட்டிற்குள் சென்று சமையல் வேலையை பார்த்துள்ளார்.
கொலைகாரன் வீட்டில் இருந்த கத்தியை எடுத்து கலாவின் இடுப்பு, கை, வயிறு போன்ற இடங்களில் குத்தியுள்ளான். இடுப்பில் மட்டும் ஆழமான காயம் உள்ளது.
கலா உடற்பயிற்சி கூடத்திற்கு அணிந்து சென்ற டிராக் சூட், பனியனோடு கொலை செய்யப்பட்டு கிடந்தார். பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதற்கான தடயங்கள் இல்லை. உடற்பயிற்சி கூடத்தில் அவரோடு வாலிபர் ஒருவர் சண்டையில் ஈடுபட்டுள்ளார். அந்த வாலிபர்தான் கொலை செய்திருக்க வேண்டும் என்று கருதுகிறோம். கொலையாளியை பிடித்து விடுவோம்.
இதற்காக 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளன. கலா உடற்பயிற்சிக்கு செல்லும்போது, தான் அணிந்திருந்த நகைகளை எல்லாம் கழற்றி வைத்துவிட்டு சென்றுள்ளார். அவை அப்படியே உள்ளன. தாலி செயினை மட்டும் காணவில்லை. வேறு பணமோ, பொருட்களோ கொள்ளை போகவில்லை.
கொலையாளி தான் அணிந்து வந்த தோல் செருப்பை வீட்டுக்குள் விட்டு சென்றுள்ளான். கொலைக்கு பயன்படுத்திய கத்தியும் வீட்டில் கிடந்தது. கொலை செய்து விட்டு ரத்தக்கறையை பாத்ரூமில் கழுவி விட்டு கொலையாளி சென்றிருக்கிறான் என்றார் சக்திவேலு.
தொடர் கொலைகளால் மக்கள் பீதி...
அசோக் நகரில் தொடர்ந்து கொலைகள் நடந்து வருவது அப்பகுதி மக்களுக்கு பெரும் பீதியில் ஆழ்த்தியுள்ளது. போலீஸாருக்கு சவால் விடும் வகையில் இங்கு அடுத்தடுத்து கொலைகள் விழுகின்றன.
இதே 92வது தெருவில்தான் முன்பு மன நலம் பாதித்த ஒரு நபர் காவலாளி ஒருவரை எரித்துக் கொலை செய்த கொடுமை நடந்தது.
மேலும் மியூசிக் டீச்சர் அனந்தலட்சுமியும், அவரது மகன் சூரஜும் இதே அசோக் நகர் பகுதியில்தான் கொல்லப்பட்டனர்.
சில நாட்களுக்கு முன்பு நடன அழகி அஸ்மா என்பவர் கொலை செய்யப்பட்டார். அதேபோல விடுதலைச் சிறுத்தைகள் கட்சிப் பிரமுகர் ஒருவரும் அடித்துக் கொல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications