தெலுங்கானா- மேலும் 2 பேர் தற்கொலை-தொடரும் பந்த்
ஹைதராபாத்: உடனடியாக தனி தெலுங்கானா மாநிலம் அமைக்கக் கோரி மேலும் 2 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இதனால் தெலுங்கானா விவகாரம் மேலும் விஸ்வரூபம் எடுத்துள்ளது.
ஆந்திராவைப் பிரித்து தெலுங்கானா மாநிலம் உருவாக்க வேண்டும் என்று காங்கிரஸ், பா.ஜ.க., தெலுங்கு தேசம், தெலுங்கானா ராஷ்டீரிய சமிதி உள்பட எல்லா கட்சிகளும் ஒருங்கிணைந்து போராட்டம் நடத்தி வருகின்றன.
மத்திய அரசு தெலுங்கானா தலைவர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியதால் இடையில் சிறிது நாள் பதற்றம் தணிந்திருந்தது. இந்த நிலையில் மத்திய அரசு தனது முடிவை உடனே வெளியிட வேண்டும் என்று தெலுங்கானா கூட்டுப் போராட்டக்குழு கெடு விதித்தது. தெலுங்கானா மாணவர்களும் மத்திய அரசின் மவுனத்தால் அதிருப்தி அடைந்தனர்.
இதற்கிடையே எம்.சி.ஏ. இறுதியாண்டு படித்து வந்த வேணுகோபால் ரெட்டி என்ற மாணவர் தெலுங்கானாவுக்காக உஸ்மானியா பல்கலைக்கழக வளாகத்தில் கடந்த 19ம் தேதி அன்று உடலில் தீ வைத்து தற்கொலை செய்தார்.
இதைத் தொடர்ந்து தெலுங்கானாவின் 10 மாவட்டங்களில் மாணவர்கள் முழு அடைப்பு போராட்டம் நடத்தினார்கள். அப்போது மீண்டும் வன்முறை வெடித்தது.
மாணவர் வேணுகோபால் ரெட்டி உடலுக்கு அஞ்சலி செலுத்த 10 மாவட்டங்களில் இருந்து மாணவர்கள் வந்து ஹைதராபாத்தில் குவிந்தனர். வேணுகோபால் ரெட்டி உடலை சட்டசபை நோக்கி ஊர்வலமாக எடுத்துச் செல்ல முயன்றதால், அவர்களுக்கும் போலீசாருக்கும் மோதல் ஏற்பட்டது. துப்பாக்கி சூடு நடத்தி மாணவர்களை போலீசார் கலைத்தனர்.
இதற்கிடையே நல கொண்டா மாவட்டத்தைச் சேர்ந்த அனில், சொர்ணா ஆகியோர் தெலுங்கானாவுக்காக தற்கொலை செய்தனர். இது பதற்றத்தை மேலும் அதிகரித்தது. முழு அடைப்புப் போராட்டத்தை தொடர்ந்து நடத்த கூட்டுப் போராட்டக்குழு சார்பில் தீர்மானிக்கப்பட்டது.
போராட்டத்தைத் தீவிரப் படுத்துவது தொடர்பாக நேற்று கூட்டுப் போராட்டக் குழுவினர் ஹைதராபாத்தில் கூடி விவாதித்தனர். வாரங்கல் மாவட்டம் மேடாரம் நகரில் உள்ள சம்மக்கா கோவிலில் திரு விழா நடப்பதால் முழு அடைப்பை தள்ளி வைக்கலாமா? என்று ஆய்வு செய்தனர். தெலுங்கானா பகுதி மக்கள் இந்த சம்மக்காவை மிகவும் பயப்பக்தியுடன் வழிபடுவது வழக்கம்.
என்றாலும் முழு அடைப்பை தள்ளி வைக்க போராட்டக்குழு கூட்டத்தில் ஒருமித்த கருத்து ஏற்படவில்லை.
இதையடுத்து சம்மக்கா கோவிலில் இருக்கும் மேடாரம் பகுதிக்கு செல்லும் பஸ்கள், வாகனங்களை மட்டும் ஓட அனுமதிப்பது என்றும், மற்ற பகுதிகளில் முழு அடைப்பு போராட்டத்தை தொடர்வது என்றும் தீர்மானிக்கப்பட்டது. அதன்படி தெலுங்கானாவின் 10 மாவட்டங்களிலும் இன்று 2 வது நாளாக முழு அடைப்புப் போராட்டம் நடந்தது.
இதன் காரணமாக தெலுங்கானா பகுதியில் உள்ள பத்து மாவட்டங்களும், ஸ்தம்பித்துப் போயுள்ளன.
தெலுங்கானா மாவட்டங்களில் மாநில அரசின் போக்குவரத்துக் கழகம் பேருந்து சேவையை நிறுத்தி விட்டது. இருப்பினும் சில பகுதிகளில் மட்டும் பாதுகாப்புடன் பேருந்து சேவை நடத்தப்படுவதாக தெரிகிறது.
பள்ளிகள், கல்லூரிகள், வர்த்தக நிறுவனங்கள், கடைகள் உள்ளிட்டவை மூடிக் கிடக்கின்றன.
கடைகள் 2 வது நாளாக மூடப்பட்டதால் மக்களின் இயல்பு வாழ்க்கையில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஹைதராபாத்தில் மிகவும் குறைந்த எண்ணிக்கையில் பஸ்கள் ஓடின. பெட்ரோல் நிலையங்கள் தொடர்ந்து மூடப்பட்டுள்ளன.
இந்த நிலையில் உஸ்மானியா பல்கலைக்கழக மாணவர் வேணுகோபால் ரெட்டியின் தற்கொலை தெலுங்கானா போராட்டக்காரர்கள், மாணவர்கள் மற்றும் மக்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் இருவர் தற்கொலை...
இந்த நிலையில், வேணுகோபால் ரெட்டி தற்கொலையை தாங்க முடியாமல் வாரங்கல் மாவட்டம் வங்காபகடு என்ற இடத்தை சேர்ந்த கருணாகர் (17) என்பவர் தீக்குளித்து தற்கொலை செய்தார். தெலுங்கானாவுக்காக உயிர் துறப்பதாக அவர் கடிதம் எழுதி வைத்துள்ளார்.
வாரங்கல் மாவட்டம் சென்னாராவ் பேட்டை அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த ரவீந்தர் (38) என்பவரும் நேற்று மாலை தீக்குளித்து தற்கொலை செய்தார். அவர் எழுதி உள்ள கடிதத்தில், என் சாவுக்கு பிறகாவது மத்திய அரசு மனம் மாறி தெலுங்கானா மாநிலத்தை அமைக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். அவருக்கு மனைவியும், 3 மகள்களும் உள்ளனர்.
இவர்களது தற்கொலையையும் சேர்த்து தெலுங்கானாவுக்காக தற்கொலை செய்தவர்களின் எண்ணிக்கை கடந்த 2 நாட்களில் 5 ஆக உயர்ந்துள்ளதால் பரபரப்பும், பதட்டமும் அதிகரித்துள்ளது.












Click it and Unblock the Notifications