'எவ்ளோ வாங்கினே?'-மேடையில் பாய்ந்த விஜயசாந்தி

'என்னைப் பேச விடாமல் தடுக்க எவ்வளவு பணம் வாங்கினீர்கள்?' என்றும் கோபத்துடன் கேட்டார் அவர்.
தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சி பொதுச் செயலாளரும் நடிகையுமான விஜயசாந்தி ஆந்திர மாநிலம் மேடக் மாவட்டம் டி.தர்மாராம் பகுதியில் நடந்த பொதுக் கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டார். அவர் மேடையில் பேசத் தொடங்கியதுமே எதிரே இருந்த தொண்டர்கள் 'ஜெய் தெலுங்கானா' என்று கோஷம் போட ஆரம்பித்தனர்.
ஆரம்பத்தில் இதை உற்சாகமாக எடுத்துக் கொண்ட விஜயசாந்தி, அவர்கள் கோஷம் ஓயும் வரை காத்திருந்தார்.
பின்னர் அவர் பேச முயன்றபோது மேடையில் இருந்த தெலுங்கானா ஆதரவாளர் ஒருவர் 'ஜெய் தெலுங்கானா' என்று கோஷம் போட்டார்.
அவ்வளவுதான்... விஜயசாந்தி, 'கோப'சாந்தியாகிவிட்டார். அந்தத் தொண்டரை மேடையிலேயே அடிக்கப் பாய்ந்தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. மேடையில் இருந்த மற்ற தலைவர்கள் விஜயசாந்தியை சமாதானப்படுத்தினர்.
அதன்பிறகு விஜயசாந்தி என் உயிர் இருக்கும் வரை தெலுங்கானாவுக்காக போராடுவேன் என்று பேசிக் கொண்டிருந்தபோது, மீண்டும் தொண்டர்கள் எழுந்து நின்று 'ஜெய் ஜெய் தெலுங்கானா' என்று கூச்சலிட ஆரம்பித்தனர்.
இதனால் எரிச்சல் அடைந்த விஜயசாந்தி, "என்னை பேசவிடாமல் தடுக்க எவ்வளவு பணம் வாங்கினீர்கள்?" என்று கூறியபடி மேடையில் இருந்து வேகவேகமாக இறங்கி காரில் ஏறிச் சென்றுவிட்டார்.
இச்சம்பவம் பற்றி விஜயசாந்தி கூறும்போது, "தெலுங்கானா கட்சியை சேர்ந்த சில தலைவர்கள்தான் தொண்டர்களுக்கு பணம் கொடுத்து என்னை பேசவிடாமல் தடுத்துள்ளனர். நான் இதுபற்றி சிறிதளவு கூட கவலைப்படவில்லை" என்றார்.
தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சியில் விஜய்சாந்தி தனி கோஷ்டி வளர்க்கிறார் என்று ஏற்கெனவே குற்றச்சாட்டுகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications