விலைவாசி உயர்வு - பிப். 6ல் முதல்வர்கள் மாநாடு!
டெல்லி: நாட்டில் விஷம் போல ஏறி வரும் விலை உயர்வைக் கட்டுக்குள் வைப்பது தொடர்பாக ஆலோசனை நடத்த முதலமைச்சர்கள் மாநாட்டைக் கூட்டுகிறார் பிரதமர் மன்மோகன் சிங்.
அடுத்தமாதம் 6ம் தேதி நடக்கும் இந்த மாநாட்டில் இந்தியாவின் அனைத்து மாநில முதல்வர்களும் பங்கேற்று விலைவாசி உயர்வை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கை குறித்து விவாதிக்கிறார்கள்.
குறிப்பாக உணவுப் பொருள்களின் விலை கற்பனை செய்ய முடியாத அளவு கிட்டத்தட்ட 100 சதவிகித உயர்வைக் கண்டுள்ளது. இரண்டு மாதங்களில் இரு மடங்கு விலை ஏற்றம் கண்டுள்ளன சர்க்கரை, அரிசி போன்ற பொருள்கள். அரசுகளோ நடைமுறை நிஜத்தைக் கணக்கில் கொள்ளாமல் ஏதேதோ புள்ளிவிவரங்களைச் சொல்லி வருகின்றன.
இந்த நிலையில் பால், சர்க்கரை விலை மேலும் உயரும் என்று மத்திய அமைச்சர் சரத்பவார் குண்டு போட்டுள்ளார்.
எனவே நடைமுறை விலையை விவாதித்து, கட்டுப்பாட்டு முறை பற்றிப் பேச முதல்வர்கள் மாநாடு அவசியம் என்று அனைத்து தரப்பிலிருந்தும் வந்த நெருக்குதலையடுத்தே இந்த மாநாடு கூட்டப்பட்டுள்ளது.
மாநாட்டுக்கு பிரதமர் தலைமை வகிக்கிறார். விவசாயத் துறை அமைச்சர் சரத்பவார், விலை நிலை குறித்துப் பேசுகிறார். அனைத்து மாநில முதல்வர்கள் கருத்துக்களைக் கேட்டறிந்த பின்னர், பிரதமர் விலைக்கடட்டுப்பாட்டு முறை குறித்து அறிவிக்க உள்ளார்.
முன்னதாக வரும் 27ம் தேதி இக்கூட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், 26ம் தேதி மாநில முதல்வர்கள் குடியரசு தினவிழாக்களை முடித்துவிட்டு மறுநாளே டெல்லியில் ஆஜராவதில் நடைமுறை சிக்கல் ஏற்படும் என தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து முதல்வர்களுடனான கூட்டம் பிப்ரவரி 6ம் தேதி நடக்கும் என மத்திய அமைச்சர் சரத் பவார் அறிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications