சோனியா-ஜெ 'ஹலோ'வால் கூட்டணியில் பிரச்சனையில்லை: தங்கபாலு
டெல்லி: தேர்தல் ஆணைய வைர விழாவில் கலந்து கொண்ட ஜெயலலிதாவும், சோனியா காந்தியும் ஒருவருக்கொருவர் வணக்கம் கூறிக் கொண்டனர்.
தேர்தல் ஆணையத்தின் வைர விழா கொண்டாட்டங்கள் நேற்று டெல்லியில் தொடங்கின. இதில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவும் கலந்து கொண்டார்.
விழா தொடங்குவதற்கு முன் தனது வரிசையில் அமர்ந்திருந்த சோனியா காந்தியை ஜெயலலிதா சந்தித்து வணக்கம் கூறினார். பதிலுக்கு அவரும் வணக்கம் கூறினார்.
பின்னர் சென்னை திரும்பிய ஜெயலலிதா விமான நிலையத்தில் இதுகுறித்து செய்தியாளர்களிடம் கூறுகையில், நானும் சோனியா காந்தியும் பரஸ்பரம் நலம் விசாரித்துக் கொண்டோம். இருவரும் மகிழ்ச்சிகளையும் பகிர்ந்து கொண்டோம் என்றார்.
தலைமைத் தேர்தல் ஆணையரை சந்தித்தபோது வாக்களிக்கப் பணம் கொடுக்கப்படுவது குறித்துப் பேசினீர்களா என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, ஜெயலலிதா பதிலளிக்கவில்லை.
கூட்டணியில் மாற்றம் வராது: தங்கபாலு
இந் நிலையில் இன்று சென்னை சத்யமூர்த்தி பவனில் தமிழக காங்கிரஸ் சார்பில் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. மாநில காங்கிரஸ் தலைவர் தங்கபாலு தேசிய கொடி ஏற்றினார்.
அப்போது, டெல்லியில் சோனியாவை ஜெயலலிதா சந்தித்ததில் முக்கியத்துவம் உண்டா, தமிழ்நாட்டில் கூட்டணி மாற்றம் வருமா? என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு பதிலளித்த தங்கபாலு,
சோனியா காந்தியை ஜெயலலிதா சந்தித்தது சாதாரணமாக நிகழ்ந்தது. தேர்தல் ஆணைய விழாவில் பல தலைவர்கள் பங்கேற்றனர். தலைவர்கள் சந்தித்துக் கொள்ளும்போது மரியாதை நிமித்தமாக பேசிக்கொள்வது வழக்கமானதுதான். அதேபோலதான் இருவரும் பேசிக்கொண்டனர். இதில் வேறு எந்த முக்கியத்துவமும் இல்லை. ஊடகங்கள்தான் பெரிதுபடுத்துகின்றன.
தமிழ்நாட்டைப் பொறுத்த வரை திமுக-காங்கிரஸ் கூட்டணி வெற்றிக் கூட்டணி. எங்கள் கூட்டணி வலுவாக உள்ளது. இதில் எந்த பாதிப்பும் வராது என்றார்.












Click it and Unblock the Notifications