டெல்லியில் மூடு பனி: பல விமானங்கள் ரத்து
டெல்லி: கடும் பனிப்பொழிவு காரணமாக இன்றும் டெல்லியில் விமான போக்குவரத்து வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.
நேற்று இரவு 10 மணிக்கே, விமான நிலைய ஓடுதளத்தில் பனி படர்ந்து காணப்பட்டது. 50 மீட்டர் தொலைவுக்கு அப்பால் உள்ள காட்சி முற்றிலும் தெரியாத அளவுக்கு அடர்ந்த பனிப்பொழிவு காணப்பட்டது.
இதனால், 15 விமான சேவைகள் திட்டமிட்டபடி இயக்கமுடியாமல் ரத்து செய்யப்பட்டன. டெல்லியில் தரையிறங்க வேண்டிய 21 விமானங்கள் வேறு மார்க்கத்தில் திருப்பிவிடப்பட்டன.
சண்டிகர், சிம்லா, ஜெய்ப்பூர் போன்ற பகுதிகளுக்கு செல்ல வேண்டிய விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. சுமார் 10 சர்வதேச விமானங்கள் புறப்படுவதிலும் தாமதம் ஏற்பட்டது.
ஓடுதளத்தில் காட்சித் தெளிவு, 150 மீட்டர் தொலைவு வரை இருந்தால் மட்டுமே தி்ட்டமிட்டபடி விமானங்கள் தரையிறங்கவும், புறப்படவும் முடியும்.
ஆனால், நேற்று இரவு முதல் காலை வரை காட்சித் தெளிவு 50 மீட்டர் முதல் 100 மீட்டர் வரை ஏற்ற இறக்கமாக காணப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
ரேடார் திரைகள் முடங்கின:
கடந்த ஒரு மாதகாலத்தில் 2வது முறையாக டெல்லி விமான நிலைய கட்டுப்பாட்டு அறையில் உள்ள ரேடார் திரைகள் முடங்கின.
டெல்லி சர்வதேச விமான நிலைய கட்டுப்பாட்டுக்கு உட்பட்ட வான்வெளியில் விமானங்களின் போக்குவரத்து, பாதை, வேகம் போன்ற பல்வேறு அம்சங்களை கண்காணிக்கும் இரண்டு ரேடார் திரைகளில் பனிமூட்டம் காரணமாக ஒன்றுமே தெரியவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
கடந்த 14ம் தேதி இதே போன்று சிக்கல் ஏற்பட்டது. இதன்பின்னர் நேற்று அதிகாலை ரேடார் திரைகளில் எதையும் காண முடியாத அளவுக்கு பனிமூட்டம் ஏற்பட்டிருந்ததால் அதிகாரிகள் திணறினர்.












Click it and Unblock the Notifications