துபாயில் இந்திய குடியரசு தினம் உற்சாக கொண்டாட்டம்
இந்திய கன்சல் ஜெனரல் வேணு ராஜாமணி இந்திய தேசியக் கொடியை ஏற்றி வைத்து இந்திய ஜனாதிபதியின் குடியரசு நாள் உரையை வாசித்தார். விரைவில் தாம் துபாயில் இருந்து மாறுதல் பெற்று டெல்லிக்கு செல்ல இருப்பதாகவும், தமது பணிக் காலத்தில் ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் தனது நன்றியினை தெரிவித்துக் கொண்டார்.
அதைத் தொடர்ந்து பள்ளிக் குழந்தைகள் தேச பக்திப் பாடல்களைப் பாடினர்.
இவ்விழாவில் ஈடிஏ அஸ்கான் ஸ்டார் குழும மேலாண்மை இயக்குநர் செய்யது எம். ஸலாஹுத்தீன், வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் எம். அப்துல் ரஹ்மான், ஈமான் சங்கம், துபாய் தமிழ்ச் சங்கம், துபாய் இந்தியன் இஸ்லாமிக் சென்டர் நிர்வாகிகள் உள்ளிட்ட பல்வேறு அமைப்பின் நிர்வாகிகள், தொழிலதிபர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
அபுதாபி இந்திய தூதரகம், ஷார்ஜா, அஜ்மான், உம்முல் குவைன், ராசல் கைமா, புஜைரா உள்ளிட்ட பகுதிகளில் உள்ள இந்தியன் அசோஷியேஷன், அல் அய்ன் இந்தியன் சோஷியல் சென்டர் உள்ளிட்ட பல்வேறு இந்திய சங்கங்களின் சார்பிலும் இந்திய குடியரசு தினம் உற்சாகமாக கொண்டாடப்பட்டது.
பாகிஸ்தான்-நேபாளத்தில்..
அதேபோல பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமபாத்தில், இந்திய தூதரக வளாகத்தில் இந்தியக் குடியரசு தினம் கொண்டாடப்பட்டது.
இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய தூதரக வளாகத்தில், பலத்த பாதுகாப்புக்கு மத்தியில், குடியரசு தினம் கொண்டாடப்பட்டது.
இந்தியத் தூதர் சரத் சபர்வால் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.
பின்னர் குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல், நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையை வாசித்தார். தூதரக ஊழியர்களின் குழந்தைகள் தேச பக்திப் பாடல்களைப் பாடினர்.
இதேபோல நேபாளத் தலைநகர் காத்மாண்டுவிலும் இந்தியத் தூதரகத்தில் குடியரசு தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
தூதர் ராகேஷ் சூட், தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
இதேபோல உலகெங்கும் உள்ள இந்திய தூதரகங்களிலும் குடியரசு தினத்தை இந்தியர்கள் சிறப்பாக கொண்டாடினர்.













Click it and Unblock the Notifications