சென்னையில் ஒரு 'அடேங்கப்பா' ஆட்டோகாரர்!

சென்னையில் ஒரு ஆட்டோ ஓட்டுநர் இணையதளமே வைத்திருக்கிறார்... சும்மா பொழுதுபோக்குக்காக இணையதளம், வலைப்பூ என்று இல்லாமல், தனது தொழிலை அபிவிருத்தி செய்வதற்கான சாதனமாக அந்த இணையதளத்தை மாற்றியுள்ளார்.
அந்த ஓட்டுநர் பெயர் சாம்ஸன். சென்னை தாஜ் கோரமண்டல் நட்சத்திர ஹோட்டல் எதிரே உள்ள ஸ்டாண்ட்தான் இவரது ஆட்டோ நிறுத்துமிடம்.
இந்த ஹோட்டலுக்கு வரும் அநேக வெளிநாட்டு வாடிக்கையாளருக்கு சாம்ஸனைத் தெரிந்திருக்கிறது. காரணம் அவரது அணுகுமுறை அப்படி.
'டுக்-டாஸ்டிக்' எனும் பெயரில் இவர் ஆரம்பித்துள்ள இணையதளத்தில், முன் பின் தெரியாத பயணிகளுக்கு தனது ஆட்டோ எத்தனை பாதுகாப்பானது என்று சின்னதாக, ஆனால் கச்சிதமான ஒரு முன்னுரையை எளிய ஆங்கிலத்தில் தந்துள்ளார்.
கூடவே, சென்னையின் சிறப்பு, சென்னை மற்றும் அதன் சுற்றுப் புறங்களில் பார்க்க வேண்டிய இடங்கள், வெளிநாட்டுப் பயணிகளுக்கு தேவையான உணவு கிடைக்குமிடங்கள், ஷாப்பிங் போக வேண்டிய பகுதிகள் என ஒரு மினி சுற்றுலா கைடையே தந்துள்ளார்.
சென்னையைப் பற்றி ஒன்றும் தெரியாதவர்களுக்கு ஆட்டோ ஓட்டுநராக மட்டுமல்ல, ஒரு சுற்றுலா கைடாகவும் இருந்து உதவுவதாக அவர் தனது தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.
'எங்கு போக வேண்டுமானாலும் பாதுகாப்பாக அழைத்துச் சென்று வர நான் கியாரண்டி' என குறிப்பிட்டுள்ள சாம்சன், கூடவே தனது ஆட்டோ நண்பர்கள் சிலர் பெயரையும் இந்த தளத்தில் பரிந்துரைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
அதென்ன 'டுக்-டாஸ்டிக்'?
இவரது ஆட்டோவை 'டுக் டுக்' என்கிறார். இதில் பயணம் செய்வது 'ஃபென்டாஸ்டிக்' அனுபவமாக இருக்குமாம். அதுதான் இந்த 'டுக்-டாஸ்டிக்!'












Click it and Unblock the Notifications