கலாமிடம் விருது படம்: 'மார்ஃபிங்'-பெண் டாக்டரின் 'பலே' மோசடி!
சென்னை: சென்னையைச் சேர்ந்த பெண் டாக்டர் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமிடமிருந்து விருது பெற்ற படத்தை திரித்து, அந்தப் பெண் டாக்டர் முகத்தில் தனது முகத்தை மார்ஃபிங் மூலம் மாற்றி தானே விருது பெற்றது போல விளம்பரப்படுத்தியுள்ளார் சேலத்தைச் சேர்ந்த பெண் டாக்டர்.
சேலத்தைச் சேர்ந்தவர் டாக்டர் உமா பாரதி. இவர் சிசு மருத்துவமனை இந்தியா லிமிட்டெட் என்ற மருத்துவமனையை நடத்தி வருகிறார்.
சமீபத்தில், ஒரு தமிழ்ப் பத்திரிக்கையில் விளம்பரம் ஒன்றைக் கொடுத்திருந்தார். அதேபோல திருவண்ணாமலையில், நடந்த மருத்துவ முகாம் ஒன்றில் துண்டுப் பிரசுரங்களையும் விநியோகித்திருந்தார்.
அதில் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமிடமிருந்து விருது பெறுவது போல படம் இடம் பெற்றிருந்தது.
இதை வேளச்சேரியைச் சேர்ந்த பெண் டாக்டர் உமா ரமேஷ் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். காரணம், கலாமிடமிருந்து விருது பெற்றவர் உண்மையில் உமா ரமேஷ்தான். கடந்த 2003ம் ஆண்டு இந்த விருதைப் பெற்றுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், எனது வேளச்சேரி கிளினிக்கில் இந்தப் படத்தை நான் மாட்டி வைத்துள்ளேன். ஆனால் அந்தப் படத்தை திரித்து, தனது முகத்தை பொருத்தி மார்ஃபிங் மூலம் மோசடியாக பயன்படுத்தியுள்ளார் உமா பாரதி என்று குற்றம் சாட்டுகிறார் உமா ரமேஷ்.
இதுகுறித்து தமிழ்நாடு மருத்துவக் கவுன்சிலிலும் அவர் புகார் கொடுத்துள்ளார். இதையடுத்து டாக்டர் உமா பாரதிக்கு மருத்துவ கவுன்சில் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. நேரில் வந்து தனது தரப்பு விளக்கத்தை அளிக்குமாறு அது உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து மருத்து கவுன்சில் தலைவர் டாக்டர் கே.பிரகாசம் கூறுகையில், இதுகுறித்து டாக்டர் உமா பாரதிக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளோம். டாக்டரின் செயல் சட்டப்படி குற்றமாகும்.
நோயாளிகளை கவருவதற்காக இதுபோல படங்களை பிரசுரிப்பதும், மோசடிகளில் ஈடுபடுவதும் தவறாகும்.
இதேபோல செயல்பட்ட சேலம் விநாயகா மருத்துவமனை மிஷன் டாக்டர் கே.ஆர்.பிரகாசத்திற்கும் இதுபோல நோட்டீஸ் அனுப்பியிருந்தோம். அவரும் கூட இன்னொரு படத்தில் தனது முகத்தைப் பொருத்தி மோசடி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது என்றார்.
டாக்டர் உமா பாரதியின் மோசடி குறித்து பிப்ரவரி மாதம் கவுன்சில் கூட்டம் நடைபெறவுள்ளது. அப்போது டாக்டர் உமா பாரதியிடம் விசாரணை நடத்தப்படவுள்ளது.
அவர் மீதான குற்றச்சாட்டு நிரூபணமானால் அவர் தொடர்ந்து டாக்டராக செயல்பட தடை விதிக்கப்படும்.












Click it and Unblock the Notifications