பென்னாகரம் இடைத்தேர்தல் தேதியை தள்ளிவைக்க ஹைகோர்டில் மனு
சென்னை: பென்னாகரம் சட்டசபைத் தொகுதி இடைத்தேர்தலை தள்ளி வைக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மக்கள் சக்தி கட்சியின் மாநில தலைமைக் குழு உறுப்பினர் பிரபாகர் சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:
பென்னாகரம் சட்டசபை தொகுதிக்கு மார்ச் 27ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
ஏற்கனவே ஜனவரி 20 ந் தேதி பென்னாகரம் தொகுதிக்கு இடைத் தேர்தல் நடக்கும் என அறிவிக்கப்பட்ட போது, பொங்கல் பண்டிகை இருப்பதாகக் கூறி தேர்தல் தேதி ஒத்தி வைக்கப்பட்டது.
தற்போது அறிவிக்கப்பட்டுள்ள தேதி மாணவர்களின் எதிர்காலத்தை பாதிக்கக்கூடிய தாகும். மார்ச் 1ம் தேதி முதல் 22ம் தேதி வரை பிளஸ் 2 தேர்வும், மார்ச் 23ம் முதல் ஏப்ரல் 9ம் தேதி வரை எஸ்எஸ்எல்சி பொது தேர்வும் நடக்கிறது.
தேர்வு நேரத்தில் ஒலி பெருக்கி சத்தம், வீடு வீடாக பிரசாரம், பொதுக்கூட்டம், நடிகர்கள், அரசியல் தலைவர்களின் வருகை போன்றவற்றால் மாணவர்களின் கவனம் சிதறும். படிப்பும் பாதிக்கப்படும்.
எனவே பென்னாகரம் தொகுதியில் உள்ள சுமார் 8 ஆயிரம் பள்ளி மாணவர்களின் எதிர் காலத்தை கருத்தில் கொண்டு தேர்தலை தள்ளி வைக்க உத்தர விட வேண்டும். அல்லது பொது தேர்வை தள்ளி வைக்க வேண்டும் என்று மனுவில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications