திமுகவுக்கு ஓடிய அதிமுக எம்.எல்.ஏக்கள் மனசாட்சி இல்லாதவர்கள் - வைகோ
சென்னை: தங்களை எம்.எல்.ஏக்களாக்கி அழகு பார்த்த ஜெயலலிதாவை விட்டும், அதிமுகவை விட்டும் பிரிந்து போனவர்கள் மனசாட்சி இல்லாதவர்கள் என்று சமீபத்தில் திமுகவின் பாதைக்குத் திரும்பிய கோவில்பட்டி, ஜெயங்கொண்டம் அதிமுக எம்.எல்.ஏக்களைக் கண்டித்துள்ளார் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ.
ஜெயலலிதாவின் 62-வது பிறந்தநாள் விழா வட சென்னை மாவட்ட அ.தி.மு.க. சார்பில் கொண்டாடப்பட்டு வருகிறது. அனைத்துக்கட்சி தலைவர்கள் கலந்து கொண்ட பொதுக்கூட்டம் தங்கசாலை மணிக்கூண்டு அருகில் நடைபெற்றது. இதில் வைகோ பேசுகையில்,
அ.தி.மு.க.பொதுச் செயலாளர் ஜெயலலிதா ஆற்றல்,அறிவு,திறமை, செயல்பாடு கொண்டவர். துணிச்சலின் அடையாளம் தான் புரட்சித்தலைவி. எம்.ஜி.ஆர். உருவாக்கிய இந்த இயக்கத்தை கோடிக்கணக்கான மக்கள் ஆதரவு கொண்ட இயக்கமாக மாற்றியவர். இது வீழ்த்த முடியாத ஒரு இயக்கம்.
எம்.ஜி.ஆர். மறைவுக்குப்பின் இந்த இயக்கம் சிதறி விடும். அழிந்து விடும் என கனவு கண்டார்கள். எம்.ஜி.ஆருக்கு பிறகு ஒரு அழிக்க முடியாத சக்தியாக ஜெயலலிதா உருவெடுத்தார். கோடிக்கணக்கான தொண்டர்களை கட்டிக்காத்து இயக்கத்தை கட்டுக்கோப்பாக நடத்திக்கொண்டு இருக்கிறார். 2 எம்.எல்.ஏ.க்களை தன் பக்கம் இழுத்து அ.தி.மு.க.வை அழிக்க தி.மு.க. திட்டம் போடுகிறது.
புரட்சித்தலைவியால் அடையாளம் காட்டப்பட்டு தேர்தலில் நிறுத்தப்பட்டு வெற்றிப்பெற்ற அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் 2 பேர் மன சாட்சியை மறந்து கட்சிக்கு துரோகம் செய்துள்ளனர். புரட்சித்தலைவி அடையாளம் தெரியாதவர்களையும் அமைச்சர்களாக்கி அழகு பார்த்தவர்.
ஜெயலலிதா ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு சிறப்பாக இருந்தது. ரவுடிகள் கொட்டம் இல்லை. இன்று சென்னையில் 30 நாட்களில் 28 படுகொலைகள் நடந்துள்ளது. விலைவாசி உயர்வு மக்களை வெகுவாக பாதித்து வருகிறது. மக்கள் விழித்துக்கொண்டார்கள்.
ஜனநாயகம் பற்றி பேச புரட்சித்தலைவி ஜெயலலிதாவுக்கு மட்டுமே தகுதி உண்டு. தமிழகத்தின் வாழ்வாதார உரிமைகள் பாதிக்கப் பட்டுள்ளது. இந்த உரிமைகளை மீட்க ஜெயலலிதாவால் தான் முடியும் என்றார்.
ரயில்வே பட்ஜெட்டுக்கு வரவேற்பு..
இதற்கிடையே ரயில்வே பட்ஜெட்டை வைகோ வரவேற்றுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
மம்தா பானர்ஜி தாக்கல் செய்துள்ள ரயில்வே பட்ஜெட்டில் பயணிகள் மற்றும் சரக்கு கட்டணம் உயர்த்தப்படாதது, ரயில்வே துறை தனியார்மயமாகாது என்ற அறிவிப்பு, ரயில்வே வாரியத்தேர்வுகளை தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் நடத்திட அனுமதி, புற்று நோயாளிகளுக்கு இலவச பயணம், தமிழ்நாட்டில் பத்து இடங்களில் ரயில்வே மருத்துவமனைகள், ரயில்வே பணியாளர்களுக்கு வீடுகள் மற்றும் சமூகநலத் திட்டங்கள், தமிழகத்திற்கு புதிய விரைவு ரயில் மற்றும் சுற்றுலா ரயில் சேவைகள் ஆகியவை பாராட்டுக்குரிய அறிவிப்புகள் ஆகும்.
ஆனால் ரயில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்கு, தமிழ்நாட்டின் நீண்டநாள் கோரிக்கையான விழுப்புரம்- திருச்சி- திண்டுக்கல் 272 கி.மீ. தூரம் இரட்டை அகல ரயில்பாதை அமைத்தல், செங்கல்பட்டு- விழுப்புரம் 103 கி.மீ. மீட்டர் கேஜ் பாதையை இரண்டாவது அகல ரயில்பாதையாக மாற்றுதல் குறித்து பட்ஜெட்டில் எந்த அறிவிப்பும் இல்லை.
தமிழ்நாட்டில் நடைமுறையில் உள்ள அகலப்பாதை திட்டங்களுக்கு கடந்த மூன்று ஆண்டுகளாக குறைந்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதால் காலதாமதம் ஆகின்றன. இதற்காக கூடுதல் நிதி ஒதுக்கீடு பற்றி எதிர்பார்ப்பு பொய்த்து இருக்கிறது. அதேபோன்று தென்மாவட்ட மக்கள் பயன்பெறத்தக்க கூடுதல் ரயில் சேவை பற்றிய அறிவிப்பு ஏதும் இல்லை.
சென்னையில் இருந்து கோவைக்கு பகல் நேரத்தில் தூரந்தோ ரயில்சேவை, நீடாமங்கலம்- மன்னார்குடி புதிய ரயில் தடம், சென்னையில் இருந்து புறநகர் பகுதிகளுக்கு ரயில்கள், பெரம்பூர் ரயில் பெட்டித் தொழிற்சாலை நவீனமயம் போன்ற வரவேற்கத்தக்க அம்சங்கள் இருந்தாலும் தமிழகத்தை பொறுத்தவரை ரயில்வே பட்ஜெட் ஏமாற்றத்தை அளிக்கிறது என்று கூறியுள்ளார்.
'தென் மாவட்டங்களை புறக்கணித்த மமதா'-சேதுராமன்
அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழக நிறுவனர் டாக்டர் சேதுராமன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
வடநாட்டு அரசியல்வாதிகளுக்கு தமிழ்நாடு என்றால் தலைநகர் சென்னையும், சென்னையைச் சுற்றியுள்ள சில மாவட்ட தலை நகரங்களே கவனத்திற்கு வருகின்றன. காவிரிக்கு தெற்கே கன்னியாகுமரி வரை 20 நாடாளுமன்ற தொகுதிகளும், உறுப்பினர்களும் இருக்கிறார்கள் என்பதை மத்திய அமைச்சர்கள் மறந்து விடுகிறார்கள்.
தென் மாவட்டத்தில் ஒரு ரயில்வே தொழிற்சாலை தொடங்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் மம்தா பானர்ஜியை சந்தித்து வற்புறுத்த வேண்டும். இதை அவர்கள் செய்யத் தவறினால் அவர்களது அலுவலகங்களுக்கு முன்பு கவன ஈர்ப்பு போராட்டங்களை நடத்துவோம்.
சென்னை- கோவைக்கு அதிவேக துராந்தோ ரயில் விடப்படுவது போல மதுரை-சென்னை இடையே துராந்தோ ரயில் விடப்பட வேண்டும். நாகர்கோவிலிருந்து மதுரை, ஓசூர் வழியாக பெங்களூக்கு வாராந்திர ரயிலுக்கு பதிலாக தினசரி ரயில் விட வேண்டும்.
சென்னை ரயில் பெட்டி தொழிற்சாலையில் புதிதாக 7 பிரிவுகள் உருவாக்கவும், சென்னையில் ரயில்வே சார்பாக விளையாட்டு அகாடமி தொடங்குவது, ரயில்வேக்கு இடம் வழங்குபவர்களுக்கு வேலை தருவது, புற்று நோயாளிகளுக்கு இலவச பயணம், அனைத்து ஊராட்சி அளவில் ஈ-டிக்கெட் பெறும் வசதி போன்ற அறிவிப்புகள் “மின் மினி" போல மம்தாவின் அறிவிப்பில் மின்னினாலும் தென்னக ரயில்வேயின் திட்ட அறிக்கைகளில் பல கிடப்பில் போடப்பட்டுள்ளது என்பதே அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழகத்தின் கருத்தாகும் என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications