பென்னாகரம்-25 சுயேச்சைகள் உள்பட 37 பேர் வேட்பு மனு
தர்மபுரி: பென்னாகரம் இடைத் தேர்தலில் போட்டியிட 25 சுயேச்சைகள் உள்பட 37 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.
கடந்த 3ம் தேதி முதல் 10ம் தேதி வரை நடந்த வேட்புமனு தாக்கலில் 4ம் தேதி அதிமுக வேட்பாளர் அன்பழகனும், 5ம் தேதி திமுக வேட்பாளர் இன்பசேகரன்,பாமக வேட்பாளர் தமிழ் குமரன், தேமுதிக வேட்பாளர் காவேரிவர்மன் ஆகியோர் மனுக்களை தாக்கல் செய்தனர்.
இன்று வேட்பு மனுக்கள் பரிசீலனை நடக்கிறது.
வேட்பு மனுவை திரும்பப் பெற மார்ச் 13ம் தேதி கடைசி நாள். அன்று மாலை வேட்பாளர் இறுதிப் பட்டியல் வெளியிடப்படும். வரும் 27ம் தேதி வாக்குப் பதிவும் 30ம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறுகிறது.
இந்தத் தொகுதியில் 1,02,892 ஆண் வாக்காளர்கள், 98,116 பெண் வாக்காளர்கள் என மொத்தம் 2,01,008 வாக்காளர்கள் உள்ளனர்.
அரசியல் கட்சிகள் மீது 47 வழக்குகள்:
இந்தத் தொகுதியில் நடத்தை விதிகளை மீறியதாக அரசியல் கட்சிகள் மீது 47 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட கலெக்டர் அமுதா கூறியுள்ளார்.
அவர் கூறுகையில், திமுக மீது 22 வழக்குகளும், பாமக மீது 18 வழக்குகளும், அதிமுக மீது 4 வழக்குகளும், பிற கட்சிகள் மீது 3 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.
நெருப்பூர் பகுதியில் பொதுமக்களுக்கு கொடுப்பதற்காக வேட்டி-சேலைகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக தகவல் கிடைத்தது. இதனையடுத்து செவ்வாய்க்கிழமை நள்ளிரவு திண்ணகல்லூர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் சோதனை நடத்தினோம். அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த 300 வேட்டிகள் மற்றும் 400 சேலைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
தொகுதி முழுவதும் தேர்தல் பணிகளை படம் பிடிக்க 54 வீடியோகிராபர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தேர்தல் பாதுகாப்பிற்காக மத்திய பாதுகாப்பு படையின் 5 கம்பெனிகள் வேண்டும் என்று கேட்டுள்ளோம். தேர்தல் நடத்தை நெறிமுறைகளை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
புதிய தேர்தல் பார்வையாளர்:
இதற்கிடையே இந்தத் தேர்தலை கண்காணிக்க 2 தேர்தல் பார்வையாளர்களை தேர்தல் கமிஷன் நியமித்துள்ளது. அவர்களில் ஒருவரான சஞ்சாய்பூஸ் ரெட்டி கடந்த 7ம் தேதி முதல் தேர்தல் பணிகளை கவனித்து வருகிறார்.
இந் நிலையில் நேற்று மற்றொரு தேர்தல் பார்வையாளரான மத்திய பிரதேச மாநில அரசின் வறட்சிக்கு இலக்காகும் பகுதி திட்ட இயக்குனர் டி.பி.அஹுஜா நேற்று தர்மபுரி வந்து பணியைத் துவக்கினார்.












Click it and Unblock the Notifications