கெடுபிடி....குழப்பத்துடன் தொடங்கிய வாக்கு எண்ணி்க்கை

ஆரம்பத்தில் இருந்தே தேர்தல் அதிகாரிகள் பெரும் குழப்படி செய்ததால் 4வது சுற்று வாக்கு எண்ணிக்கை நடக்கும் நிலையில் தான் முதல் சுற்றின் முழு முடிவுகளே அறிவிக்கப்பட்டன.
இதையடுத்து தேர்தல் ஆணைய அதிகாரிகள் மற்றும் கட்சியினர், நிருபர்கள் இடையே கடும் வாக்குவாதமும் ஏற்பட்டது.
தேர்தல் ஆணையத்தின் இந்த கடும் கெடுபிடி காரணமாகவும் வாக்கு எண்ணிக்கை நடக்கும் இடம் மிகச் சிறியதாகவும் இருந்ததால் வாக்கு எண்ணும் பணியும் ஒவ்வொரு சுற்றிலும் முடிவுகளை அறிவிக்கும் பணியும் தாமதமானது.
வாக்கு எண்ணிக்கை தொடங்கும் முன் 31 வேட்பாளர்களின் ஏஜென்டுகளிடமும் தேர்தல் ஆணைய அதிகாரிகள் திடீரென அதிரடி சோதனை நடத்தினர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டதோடு வாக்கு எண்ணிக்கை பணியை தொடங்குவதே தாமதமாகிவிட்டது.
செய்தியாளர்களுக்கு அனுமதி இல்லை:
வாக்கு எண்ணிக்கை நடைபெறும் இடத்தில் பத்திரிக்கையாளர்கள், உளவுத்துறையினர் கூட அனுமதிக்கப்படவில்லை.
மேலும் ஒவ்வொரு சுற்று எண்ணிக்கையின் முடிவிலும் அந்த முடிவை நான்கு அதிகாரிகள் ஒரு முறைக்கு பல முறை ஆய்வு செய்துவிட்டுத் தான் அறிவித்தனர். இதனால் முடிவு வெளியாவது இன்னும் தாமதமாகி பெரும் குழப்பம் நிலவியது.
ஒவ்வொரு சுற்று முடிவையாவது அவ்வப்போது அறிவிக்குமாறு அதிகாரிகளிடம் நிருபர்கள் கேட்க, அதை முதலில் அவர்கள் காதிலேயே வாங்கவில்லை. பின்னர் தான் முடிவுகளை ஒவ்வொரு சுற்று முடிவிலும் அறிவிக்க ஆரம்பித்தனர்.
முன்னதாக வாக்குகள் எண்ணப்படும் மையத்திற்குள் செல்வோர் மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் சோதிக்கப்பட்ட பின்னரே உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டனர். வாக்கு எண்ணும் மையத்திற்குள் இருக்கும் வேட்பாளர்கள், வேட்பாளர்களின் ஏஜென்டுகள், வாக்கு எண்ணும் ஊழியர்கள் உள்ளிட்டோர் செல்போன்களைப் பயன்படுத்தக் கூடாது என்று உத்தரவிட்டிருந்தது.
பென்னாகரத்தில் கடந்த 27ம் தேதி இடைத் தேர்தல் நடந்தது. இதில் திமுக, அதிமுக, பாமக, தேமுதிக ஆகிய முக்கியக் கட்சிகள் உள்பட மொத்தம் 31 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.
கிட்டத்தட்ட 85 சதவீத வாக்குகள் பதிவாகின. இந்த வாக்குகள் அடங்கிய மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் பலத்த பாதுகாப்புடன் தர்மபுரி அரசுக் கலைக் கல்லூரியில் வைக்கப்பட்டிருந்தன.
வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணியளவில் தொடங்கியிருக்க வேண்டும். ஆனால், கடும் கெடுபிடியால் 8.30 மணிக்குத் தான் தொடங்கியது.
மொத்தம் 18 சுற்றுகளாக வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை மாலை 3.55 மணிக்குத் தான் முடிவடைந்தது.
வீடியோ மூலமும் வாக்கு எண்ணிக்கை பதிவு செய்யப்பட்டது. வாக்கு எண்ணிக்கையையொட்டி 3 அடுக்குப் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
500க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.












Click it and Unblock the Notifications