கணவருடன் பாக். சென்றார் சானியா – உற்சாக வரவேற்பு
இஸ்லாமாபாத் டென்னிஸ் நட்சத்திரம் சானியா மிர்ஸா தனது கணவர் சோயப் மாலிக்குடன் நேற்று மாலை பாகிஸ்தான் போய்ச் சேர்ந்தார். விமான நிலையத்தில் அவர்களுக்கு நூற்றுக்கணக்கானோர் திரண்டு வந்து வரவேற்பு அளித்தனர்.
சானியா, சோயப்பை அரசு விருந்தினர்களாக அறிவித்த மாநில அரசு அவர்களுக்கு தடபுடலான வரவேற்பை அளித்து அழைத்துச் சென்றது.
போலீஸ் அதிகாரிகளும், அரசு அதிகாரிகளும் விமான நிலையம் வந்து சானியா, சோயப் மற்றும் உடன் வந்தவர்களை வரவேற்றனர். பின்னர் சானியாவும், சோயப்பும் இஸ்லாமாபாத்தில் உள்ள செரீனா ஹோட்டலுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
முன்னதாக மும்பையிலிருந்து கராச்சி சென்றார்கள் சானியாவும், சோயப்பும். பின்னர் அங்கிருந்து இஸ்லாமாபாத் போய்ச் சேர்ந்தனர்.
சானியா வருகையை பாகிஸ்தான் டிவிகள் பெரும் முக்கியத்துவம் கொடுத்து செய்தி ஒளிபரப்பின. அதை விட முக்கியமாக ஒவ்வொரு டிவியும் போட்டி போட்டுக் கொண்டு சானியா வருகை குறித்த செய்தியை ஒளிபரப்பின.
பாகிஸ்தானில் தற்போது மின்சாரத் தட்டுப்பாடு பெரும் பிரச்சினையாக உள்ளது. அதை சரி செய்ய பாகிஸ்தான் பிரதமர் கிலானி பல்வேறு நடவடிக்கைகளை நேற்று அறிவித்தார். ஆனால் இந்த செய்தியை பாகிஸ்தான் மீடியாக்கள் பின்னுக்குத் தள்ளி விட்டு விட்டனவாம்.
கராச்சி மற்றும் ராவல் பிண்டி விமான நிலையங்களுக்கு சானியா தம்பதியினர் வந்தபோதும் கூடியிருந்த ரசிகர்களை அவர்கள் சந்திக்கவில்லை. மாறாக பாதுகாப்புப் படையினர் இருவரையும் வேகமாக அங்கிருந்து கூட்டிச் சென்று விட்டனர்.
பாகிஸ்தானின் மருமகளே வருக என்று எழுதப்பட்டிருந்த பேனர்களுடன் காத்திருந்த அவர்கள் இதனால் பெரும் ஏமாற்றமடைந்தனர்.












Click it and Unblock the Notifications