தண்ணீர் தர மறுத்தால் கேரளத்துக்கு செல்லும் சாலைகளை உடைப்போம்-வைகோ

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறினார்.
பரமக்குடியில் நடந்த முல்லை பெரியாறு அணை உரிமை மீட்பு மறியல் போராட்ட விளக்க பொதுக் கூட்டத்தில் அவர் பேசுகையில்,
முல்லை பெரியாறு அணை எந்த வகையான நில அதிர்வையும் தாங்கும் என பல நிபுணர் குழுக்களால் உறுதிபடுத்தப்பட்டுள்ளது. நீர்ப் பிடிப்பை அதிகரித்தால், அணை உடையும் என்பது கேரளத்தின் பொய் பிரசாரம்.
நீர்ப் பிடிப்பு குறைந்ததால் தமிழகத்தில் 38 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் தரிசாகிவிட்டன. இரு போக பாசனங்கள் ஒரு போகமாக மாறியுள்ளன. இதனால் தமிழக விவசாயிகளுக்கு கடந்த 30 ஆண்டுகளில் ரூ. 3,900 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
அணையை உடைத்தால் இந்தியாவின் ஒருமைப்பாடு கேள்விக்குறியாகும், ரத்த ஆறு ஓடும் என்று எச்சரிக்கிறேன்.
இந்த விஷயத்தில் மத்திய அரசு தீர்வு காண வாய்ப்பில்லை. அதிமுக ஆட்சியின்போது தொடரப்பட்ட வழக்குகளும் நிலுவையில் உள்ளன. புதிய அணை கட்டினால், நமக்கு தண்ணீர் கிடைக்க வாய்ப்பே இல்லை.
ஒவ்வொரு நாளும் 200 டன் அரிசி முதல் காய்கறிகள், ஆடு, மாடு, பால் முதலிய அத்தியாவசியப் பொருட்கள் அனைத்தும் தமிழகத்தில் இருந்து தான் கேரளாவுக்கு சப்ளையாகின்றன.
தண்ணீர் தர மறுக்கும் பட்சத்தில், கேரளாவிற்கு செல்லும் அனைத்து சாலைகளையும் உடைத்து, பழுது பார்க்க முடியாதபடி, மீண்டும் போக்குவரத்து செல்ல முடியாமல் செய்து விடுவோம்.
நிரந்தர பகையை தேடிக் கொள்ளாமல் தமிழகத்தின் 65 லட்சம் மக்களுக்கு குடிக்க தண்ணீர் தர வேண்டும். இதற்காக வரும் 28ம் தேதி நாங்கள அறிவித்துள்ள போராட்டம் திமுக ஆட்சியை எதிர்த்து அல்ல, கேரள அரசுக்கு எச்சரிக்கை விடும் போராட்டம் என்றார் வைகோ.
மதுரையில் பேச்சு:
முன்னதாக நேற்றிரவு மதுரையில் நடந்த பொதுக் கூட்டத்தில் பேசிய வைகோ,
முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் நமது உரிமையை ஒருபோதும் விட்டுக் கொடுக்க முடியாது.
பாண்டிய மண்டலத்தில் 1810-11ல் ஏற்பட்ட பஞ்சத்தில் 56,135 பேர் இறந்தனர். 1861-62ல் மீண்டும் பஞ்சம் ஏற்பட்டது. இதில் மூன்றில் ஒரு பகுதி மக்கள் இறந்தனர். 1877-88ல் மூன்றாவது முறையாக பஞ்சம் ஏற்பட்டபோது, பிழைப்பு தேடி, பாம்பன் பகுதி வழியாக 1 லட்சத்து 50,000மக்கள் கடல் கடந்து பல நாடுகளுக்கு சென்றனர்.
இதுபோன்ற பஞ்சங்கள் மீண்டும் வராமல் இருக்கவே முல்லைப் பெரியாறு அணை கட்டப்பட்டது. இப்போது இந்த அணைக்கு ஆபத்து வந்துள்ளது.
கேரள அரசு அணையை இடிக்க பல சூழ்ச்சிகளை செய்து வருகிறது. புதிய அணை கட்டி, அதில் படகு சவாரி விடவும், சுற்றுலாத் தலமாக மாற்றி, வருமானம் ஈட்ட கேரள அரசு முயற்சி செய்கின்றது.
சுப்ரீம் கோர்ட்டில் நமக்கு நியாயம் கிடைக்கும் என்ற நம்பிக்கை இல்லை. அணையை உடைப்பது மட்டும் தான் கேரள அரசின் நோக்கமாக உள்ளது. அணையை உடைத்தால் அவர்களுக்கும் கேடு, நமக்கும் கேடு தான்.
அதன் பிறகு நாட்டின் ஒருமைப்பாடு நிலைக்கும் என நினைக்க வேண்டாம். இது மத்திய அரசுக்கு எச்சரிக்கை.
கேரளாவில் உள்ள பெரியாறு அணை அவர்களுக்கு சொந்தமென்றால், தமிழகத்தில் உள்ள நெய்வேலி, கூடங்குளம் அணு மின் நிலையங்கள், ஆவடி டாங்க், திருச்சி துப்பாக்கி தொழிற்சாலைகள் தமிழகத்திற்கு சொந்தமாகும் நிலை வரலாம்.
தமிழகத்தை சார்ந்து தான் கேரள மக்கள் உள்ளனர். அனைத்து பொருட்களும் இங்கிருந்து தான் அனுப்பப்படுகிறது.
இந்தப் பிரச்சனையில் தமிழகம் கொந்தளிப்பான நிலையில் உள்ளதை தெரிவிக்க வேண்டும். அப்போது தான் சுப்ரீம் கோர்ட்டில் நமக்கு நியாயம் கிடைக்கும்.
எனவே, மே 28 ம் தேதி கேரளாவிற்கு தமிழகத்தில் இருந்து செல்லும் 13 சாலைகளிலும் நடைபெறும் மறியல் போராட்டத்தில், கட்சி பாகுபாடின்றி ஒரு குடும்பத்தில் ஒருவர் வந்து பங்கு கொண்டு போராட முன்வர வேண்டும் என்றார்.
இக் கூட்டத்தில் தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன், இந்திய கம்யூனிட்னிஸ்ட் கட்சியின் மாநில துணைச் செயலாளர் மகேந்திரன், முல்லைப் பெரியாறு பாசன விவசாயிகள் சங்க தலைவர் கே.எம். அப்பாஸ் உள்பட பலர் பங்கேற்றனர்.












Click it and Unblock the Notifications