சபாநாயகருக்கு எதிராக கோஷம்-6 அதிமுக எம்.எல்.ஏக்கள் 2 நாள் சஸ்பெண்ட்

Subscribe to Oneindia Tamil

Assembly
சென்னை: சபாநாயகருக்கு எதிராக கோஷமிட்ட 6 அதிமுக எம்எல்ஏக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

சட்டசபையில் இன்று கேள்வி நேரம் முடிந்ததும் எதிர்க்கட்சி துணை தலைவர் ஓ. பன்னீர்செல்வம் ஒரு பிரச்சனையைக் கிளப்பி பேசினார். அவர் கூறுகையில், முரசொலி பத்திரிகையில் முதல்வர் கருணாநிதி உடன்பிறப்புகளுக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். இது தொடர்பாக அவர் மீது நான் சபாநாயகரிடம் ஒரு உரிமை மீறல் கொடுத்திருந்தேன். அதுபற்றி விவாதிக்க வேண்டும் என்றார்.

அதற்கு சபாநாயகர் ஆவுடையப்பன், நீங்கள் 9.58 மணிக்குத் தான் என்னிடம் இதுபற்றி எழுதி கொடுத்திருக்கிறீர்கள். அது என் பரிசீலனையில் உள்ளது என்றார்.

(அப்போது அதிமுக எம்.எல்.ஏக்கள் அனைவரும் கும்பலாக எழுந்து நின்று இன்றே இதுபற்றி விவாதிக்க வேண்டும் என்று கோஷமிட்டு அமளி செய்தனர்)

சபாநாயகர் ஆவுடையப்பன்: நீங்கள் கொடுத்ததை நான் படித்து பார்க்க வேண்டாமா?. எதுவாக இருந்தாலும் 9 மணிக்குள் கொடுக்க வேண்டும். தாமதமாக கொடுத்து விட்டு உடனே விவாதத்துக்கு எடுங்கள் என்பது சரியா?

முதல்வர் கருணாநிதி: என் மீது ஒரு உரிமை பிரச்சனையை எதிர்க்கட்சி துணைத் தலைவர் தங்களிடம் கொடுத்து இருப்பதாகவும் அது முன்கூட்டியே தன்னிடம் தரப்படவில்லை என்றும் உரிய நேரத்தில் தரப்படவில்லை என்றும், சில நிமிடங்களுக்கு முன்பு தான் தரப்பட்டதால் அது ஆய்வில் இருப்பதாகவும் கூறினீர்கள்.

நான் பேரவை தலைவரைக் கேட்டுக் கொள்வது இதில் உள்ள சட்ட விதிமுறைகளை பார்க்காமல் என் மீது கொடுத்துள்ள உரிமை பிரச்சனையை எடுத்துக் கொள்ளலாம். அவ்வாறு அனுப்பிய பின் உரிமை குழு கூடும்போது, அது தொடர்பாக விளக்கம் சொல்ல எனக்கும் அழைப்பு அனுப்பப்படும். அப்போது உரிமை குழுவில் அனைத்து விஷயங்களையும் சொல்ல வாய்ப்பு கிடைக்கும்.

சபாநாயகர் ஆவுடையப்பன்: முதல்வரின் பெருந்தன்மையான அறிவிப்பை ஏற்று இதை அவையின் உரிமை குழுவுக்கு அனுப்பி வைக்கிறேன்.

(இதையடுத்து பன்னீர்செல்வம் மீண்டும் உரிமை மீறல் பிரச்சனை குறித்து பேச முற்பட்டார்)

சபாநாயகர் ஆவுடையப்பன்: உரிமைக் குழுவிற்கு அனுப்பிய பிரச்சனை மீது மேற்கொண்டு இங்கு பேச அனுமதிக்க முடியாது. எதுவாக இருந்தாலும் உரிமை குழுவில் உங்கள் கருத்தை சொல்லுங்கள்.

பன்னீர்செல்வம்: இன்றைய முரசொலி பத்திரிகையில் உடன்பிறப்புக்கு என்ற போர்வையில்...

அமைச்சர் துரைமுருகன் (இடைமறித்து): உரிமைக் குழுவுக்கு சபாநாயகர் அனுப்பிய பிறகு அதன் மீது விவாதிக்க விதியில் இடமில்லை.

சபாநாயகர் ஆவுடையப்பன்: இங்கு மேற்கொண்டு இதில் பேச அனுமதிக்க முடியாது. இனி உரிமைக் குழு தான் முடிவெடுக்க வேண்டும்.

முதல்வர் கருணாநிதி: அவையில் ஒரு உறுப்பினர் இன்னொரு உறுப்பினர் மீது உரிமை மீறல் பிரச்சனை கொண்டு வந்தால், அதை ஏற்று கொள்ளாவிட்டால் தான் விவாதிக்க வேண்டும். ஆனால் இதை நானே எனக்கு இதில் ஆட்சேபனை இல்லை உரிமைக் குழுவுக்கு அனுப்பி வையுங்கள் என்று சொன்ன பிறகு விவாதம் ஏன் என்று தான் புரியவில்லை.

(அதிமுகவினர் மீண்டும் கும்பலாக எழுந்து நின்று கோஷமிட்டனர்)

இதையடுத்த அதிமுகவினரை சபாநாயகர் பேச அனுமதிக்கவில்லை. வேறு உறுப்பினரை பேச அழைத்தார்.

இதையடுத்து அதிமுகவினர் ஒட்டுமொத்தமாக வெளிநடப்பு செய்தனர். வெளிநடப்பு செய்யும்போது சில உறுப்பினர்கள் சபாநாயகர் ஒழிக என்று கோஷமிட்டனர்.

முதல்வர் கருணாநிதி (குறுக்கிட்டு): ஒழிக கோஷம் எழுப்பியவர்கள் பெயரை சபாநாயகர் சொல்ல வேண்டும்.

சபாநாயகர் ஆவுடையப்பன்: அதிமுக உறுப்பினர்கள் செந்தில் பாலாஜி, அரி, சே.மா. வேலுச்சாமி, ரவிச்சந்திரன், டி.ஜெயக்குமார், கலைராஜன் ஆகியோர் ஒழிக கோஷம் போட்டு்ள்ளனர். அவர்கள் அனைவரையும் அவையில் இருந்து நீக்கி வைக்கிறேன்.

இதையடுத்து அமைச்சர் அன்பழகன் இது தொடர்பாக ஒரு தீர்மானத்தை முன் மொழிந்து செந்தில் பாலாஜி, அரி, சே.மா. வேலுச்சாமி, டி.ஜெயக்குமார், கலைராஜன், ரவிச்சந்திரன் ஆகியோர் ஒழுங்கீனமாக செயல்பட்டனர். இவர்களை இன்றும், நாளையும் பேரவையில் இருந்து தற்காலிகமாக நீக்கம் (சஸ்பெண்டு) செய்ய வேண்டும் என்றார்.

இதையடுத்து 6 பேரையும் 2 நாள் சபையில் தற்காலிகமாக நீக்கி வைப்பதாக சபாநாயகர் உத்தரவிட்டார்.

இதைத் தொடர்ந்து அதிமுகவினருக்கு ஆதரவாக மதிமுக உறுபினர்களும் வெளிநடப்பு செய்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+