இலங்கை போரில் 2.6 லட்சம் தமிழர் வீடுகள் சேதம்
கொழும்பு: இலங்கையில் தமிழர் பகுதிகளில் நடந்த இறுதிக் கட்டப் போரில் வடக்குப் பகுதியில் தமிழர்களின் 2.6 லட்சம் வீடுகள் சேதம் அடைந்ததாக செஞ்சிலுவைச் சங்கம் கூறியுள்ளது.
இந்த வீடுகள் அனைத்துமே யாரும் வசிக்க முடியாத அளவுக்கு உருக்குலைந்துவிட்டன. இவற்றை
சீரமைத்தால்தான் குடியிருக்க இயலும் என்றும் செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளது.
ஆனால், இந்த வீடுகளை சீரமைக்காமலேயே அப்பகுதியில் தமிழர்களை மீண்டும் குடியமர்த்த இலங்கை அரசு தீவிரம் காட்டி வருவது குறிப்பிடத்தக்கது.
வட பகுதியில் தாற்காலிக முகாம்களில் தங்கியிருந்த தமிழர்களில் இதுவரை 2.07 லட்சம் பேர் அவர்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
வவுனியா, மன்னார், யாழ்ப்பாணம், ஆகிய மாவட்டங்களில் உள்ள முகாம்களில் இன்னும் 80,246 பேர் தங்கியுள்ளனர்.
இவர்களையும் அவர்களது சொந்த ஊர்களுக்கு திருப்பி அனுப்ப இலங்கை அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அடுத்த 6 மாதத்துக்குள் இவர்கள் அனைவரும் அவர்களது சொந்த ஊர்களில் குடியமர்த்தப்படுவார்கள் என்று தெரிகிறது. ஆனால், அவர்களது வீடுகளை சீரமைத்துத் தர அரசு தயாராக இல்லை.
வட பகுதிகளில் கண்ணிவெடிகளை மட்டும் அகற்றிவிட்டு அங்கு தமிழர்களை மறுகுடியமர்த்தி வருகிறது அரசு.
தமிழர் பகுதியில் ராணுவம் வாபஸ் இல்லை:
இந் நிலையில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதியில் ராணுவத்தை வாபஸ் பெறவோ படைகளின் எண்ணிக்கையை குறைக்கவோ முடியாது என்று பாதுகாப்புத் துறை செயலாளரான கோத்தபய ராஜபக்சே கூறியுள்ளார்.
சண்டே டைம்ஸ் பத்திரிகைக்கு அவர் அளித்த பேட்டியில்,
வட, கிழக்கில் ராணுவத்தை குறைக்க வேண்டும் என்று கூறுவது முட்டாள்தனம். ராணுவத்தைக் குறைத்தால் விடுதலைப் புலிகள் போன்ற பயங்கரவாத அமைப்புகள் மீண்டும் தலைதூக்கும்.
முன்பு வன்னி வனப் பகுதிகளில் மறைந்திருந்து கொரில்லா தாக்குதல்களை நடத்தி புலிகள் ஆதிக்கம் செலுத்தி வந்தனர். இப்போது அப்பகுதியில் ராணுவத்தை குவித்துள்ளதன் மூலம் அவர்களை தலைதூக்க முடியாமல் செய்துள்ளோம்.
வடக்கு மற்றும் கிழக்கில் அரசியல் சீர்திருத்தங்களை மேற்கொள்வது அவசியம் தான். ஆனால் இப்போதைய தேவை வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்வதானே தவிர அரசியல் அதிகாரப் பகிர்வு அல்ல என்று கூறியுள்ளார்.
ஜூன் 8ல் ராஜபக்சே இந்தியா வருகை:
இந் நிலையில் இலங்கை அதிபர் ராஜபக்சே வரும் ஜூன் 8ம் தேதி இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ளார்.
இது குறித்து அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் ஜி.எல். பெரிஸ் கூறுகையில்,
ஜனவரி மாதம் இலங்கையில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு முதல் முறையாக ராஜபக்சே இந்தியா செல்கிறார்.
போரினால் பாதிக்கப்பட்ட இலங்கையை சீரமைக்க இந்தியா ரூ. 500 கோடி நிதியுதவி அளித்துள்ளது என்றார்.












Click it and Unblock the Notifications