PM Modi: தங்கம் வாங்காதீங்க.. பெட்ரோலை மிச்சப்படுத்துங்க.. பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு திடீர் அட்வைஸ்
டெல்லி: ஓராண்டுக்கு திருமணத்திற்கு தங்கம் வாங்க வேண்டாம் என்று நாட்டு மக்களுக்கு கோரிக்கை விடுப்பதாக பிரதமர் மோடி கூறியுள்ளார். பெட்ரோல் - டீசல் விலை உலகளவில் கடுமையாக உயர்ந்துள்ளது. எனவே பெட்ரோல், டீசலை சிக்கனமாக பயன்படுத்துவது நம் அனைவரின் பொறுப்பாகும் என மோடி கூறியுள்ளார்.
ஈரான் - அமெரிக்கா இடையேயான போரால் மத்திய கிழக்கில் பதற்றம் நிலவுகிறது. இதனால் எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. பல்வேறு நாடுகளிலும் எரிபொருள் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்தியாவிலும் வணிக சிலிண்டருக்கான பற்றாக்குறை இன்னும் முழுமையாக தீர்ந்தபாடில்லை. வணிக சிலிண்டர் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது.

திருமணத்திற்கு தங்கம் வாங்க வேண்டாம்
பெட்ரோல், டீசல் விலையும் வரும் 15 ஆம் தேதிக்குள் ரூ.4 முதல் 5 வரை உயரக்கூடும் என்று சில தகவல் வெளியானது. இந்த சூழலில், பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு முக்கிய அறிவுறுத்தல் ஒன்றை விடுத்துள்ளார். இது தொடர்பாக பிரதமர் மோடி பேசியதாவது:-
பெட்ரோல் - டீசல் விலை உலகளவில் கடுமையாக உயர்ந்துள்ளது. பெட்ரோல், டீசல் வாங்குவதற்காக செலவிடப்படும் அந்நியச் செலாவணியையும் சேமிக்க, அவற்றை சிக்கனமாக பயன்படுத்துவது நம் அனைவரின் பொறுப்பாகும். ஓராண்டுக்கு திருமணத்திற்கு தங்கம் வாங்க வேண்டாம் என்று நான் மக்களுக்கு கோரிக்கை விடுக்கிறேன்.
வீட்டில் இருந்தே வேலை..
கடினமான பொருளாதார சூழ்நிலையில் நாட்டின் வளங்களை சேமிப்பதில் கவனம் செலுத்த வேண்டும். கொரோனா காலத்தில் வீட்டிலிருந்தே வேலை செய்வது (WFH), ஆன்லைன் மீட்டிங் மற்றும் வீடியோ கான்பரன்ஸ் போன்ற முறைகளுக்கு மக்கள் எளிதாக பழகி விட்டனர். எரிபொருள் நுகர்வை மிச்சப்படுத்த இதேபோன்ற ஒரு நடைமுறையை மீண்டும் ஊக்கப்படுத்த வேண்டும். சேமிக்கும் ஒவ்வொரு லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசலும் எரிபொருள் இறக்குமதிக்காக இந்தியா அந்நிய செலவாணி செலவிடுதை குறைக்கும்" என்றார்.
ஹார்முஸ் ஜலசந்தியில் இன்னும் இயல்பு நிலை திரும்பாத நிலையில், கச்சா எண்ணெய் விலை 126 டாலராக உள்ளது. இந்திய எண்ணெய் நிறுவனங்கள் கடுமையான இழப்பை சந்தித்து வருவதாக சொல்லப்படுகிறது. அதாவது ஒவ்வொரு மாதமும் சுமார் 30 ஆயிரம் கோடி அளவிற்கு பாரத் பெட்ரோலியம், இந்திய ஆயில் நிறுவனங்களுக்கு ஏற்படுவதாக எண்ணெய் நிறுவன வட்டாரங்கள் கூறுகின்றன.
54 ஆயிரம் டன்னாக அதிகரிப்பு
எரிபொருள் பற்றாக்குறையை சமாளிக்க வங்கதேசத்தில் எண்ணெய் வாங்க கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் பணி நாட்கள் குறைக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் தற்போது வரை பெட்ரோல், டீசலுக்கு தட்டுப்பாடு இல்லை. எரிபொருள் தட்டுப்பாட்டை குறைக்க இந்தியா எல்பிஜி உற்பத்தியை 36 ஆயிரம் டன்னில் இருந்து 54 ஆயிரம் டன்னாக அதிகரித்துள்ளது.
அதேபோல, ரஷ்யா, அமெரிக்கா, மேற்கு ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளிடம் இருந்து கச்ச எண்ணெய் கொள்முதலை அதிகரித்துள்ளது. பெட்ரொல், டீசல் விலை உயர்வை தடுக்கும் விதமாகம் எண்ணெய் நிறுவனங்களின் சுமையை குறைக்கும் வகையிலும் உற்பத்தி வரியை கடந்த சில வாரங்களுக்கு முன்பாக மத்திய அரசு குறைத்து இருந்தது.














Click it and Unblock the Notifications