'கரும்புலி முத்துக்குமார் பாசறை' தொடக்கம்: திருமாவளவன்
சென்னை: ஈழ விடுதலைக்காக தன் உயிரைக் கொடையளித்த முத்துக்குமார் பெயரில் 'கரும்புலி முத்துக்குமார் பாசறை' தொடங்கப்படும் விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன் கூறியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
ஈழத் தமிழினத்தை இன வெறியர்கள் கொன்று குவித்த முள்ளிவாய்க்கால் பேரவலம் நடந்தேறி ஓராண்டை எட்டிவிட்டது. மே 18, அந்தப் பேரவலத்தின் நினைவு நாளாக உலமெங்கும் தமிழர்களால் ஆறாத் துயரத்துடன் நினைவுகூரப்படுகிறது.
தமிழீழ விடுதலைப் புலிகளை அழித்தொழிக்கிறோம் என்னும் பெயரில் அப்பாவிப் பொதுமக்களை சிங்கள ராணுவம் மனிதநேயமற்ற முறையில் கொன்று குவித்ததை உலகமே வேடிக்கை பார்த்தது. இன்னும் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் சிங்கள ராணுவக் கெடுபிடிகளுக்குள் சிக்கி வதை முகாம்களுக்குள் அல்லல்பட்டு வருகின்றனர்.
ஒட்டுமொத்த ஈழத் தேசத்திலும் சிங்கள ராணுவத்தின் ஆக்கிரமிப்புகளும் அடக்குமுறைகளும் பட்டவர்த்தனமாக தலைவிரித்தாடுகின்றன. வடக்கு, கிழக்கு மாகாணங்களில் அப்பாவித் தமிழ்மக்கள் அச்சத்தோடும் பீதியோடும் ஒவ்வொரு நாளையும் கழித்து வருகின்றனர்.
புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களும் தாளமுடியாத வேதனையிலும் தாயகத்திற்கு இனி திரும்ப முடியாது என்ற கவலையிலும் ஆழ்ந்து உழலுகின்றனர். சிங்கள இனவெறியர்களுக்கு இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் உற்ற துணையாய் இருந்து மேலும் மேலும் அவர்களை ஊக்கப்படுத்தி வருகின்றன.
இத்தகைய சூழலில் ஈழத் தமிழர்களைப் பாதுகாப்பதும் ஈழத் தமிழர்களுக்கான ஒரு நிலையான அரசியல் தீர்வை வென்றெடுப்பதும் தமிழ்நாட்டுத் தமிழர்கள் உள்ளிட்ட உலகத் தமிழர்களின் முன்னால் உள்ள பெரும் சவாலாக அமைந்துள்ளது.
மே 18 முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் இந்த நினைவு நாளில் தமிழீழ மக்களுக்குத் தொடர்ந்து துணை நிற்போம்!, தமிழீழ விடுதலை அரசியலை அடைகாப்போம்! என இனமான உணர்வுள்ள ஒவ்வொரு தமிழரும் உறுதியேற்போம்.
இத்தகைய உறுதியை ஏற்கும் வகையில் ஈழ விடுதலைக்காகத் தன் உயிரைக் கொடையளித்த தம்பி முத்துக்குமார் பெயரில் பாசறை ஒன்றை தலைநகர் சென்னையில் தொடங்குகிறோம். அறவழியில் தமிழீழ விடுதலைக்கான அரசியலை முன்னெடுத்துச் செல்லும் ஒரு களமாக இந்த 'கரும்புலி முத்துக்குமார் பாசறை' அமையும் என்று கூறியுள்ளார் திருமாவளவன்.
கருப்பு தினம்-புதிய தமிழகம்:
புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்,
ஈழத்தமிழ் மக்கள் தங்கள் சுயநிர்ணய உரிமைக்காகவும், பாதுகாப்புக்காகவும் அரை நூற்றாண்டு காலத்திற்கு மேலாக போராடி வருகின்றனர். கடந்த ஆண்டு மே மாதம் 1ம் தேதி தொடங்கி 16, 17, 18 ஆகிய மூன்று தினங்களில் முள்ளிவாய்க்காலில் முப்பதாயிரம் இளைஞர்கள் மற்றும் முன்னணி தலைவர்கள் உள்பட இலட்சத்திற்கு மேற்பட்ட தமிழர்களை ராஜபக்சே அரசு ஈவிரக்கம் இன்றி கொன்று குவித்தது.
இந்த அப்பட்டமான மனித உரிமை மீறலை, இந்திய அரசு கண்டுகொள்ளவே இல்லை. சில ஐரோப்பிய நாடுகள் மேலோட்டமாக கண்டனங்கள் தெரிவித்தன. பெரும்பாலான உலக நாடுகள் மெளனமே சாதித்தது. சீனாவினுடைய அங்கமான திபெத்தின் தனிநாடு கோரிக்கைக்கு உலக நாடுகள் ஆதரவு கரங்களை நீட்டுகின்றன.
மதத் தலைவராகவும், தன்னுரிமைக்காகவும் குரல் கொடுக்கின்ற தலாய் லாமாவுக்கு இந்தியா 50 வருடங்களுக்கு மேலாக அடைக்கலம் கொடுத்து வருகின்றது. சீனாவினுடைய எதிர்ப்பையும் மீறி அமெரிக்கா அதிபர் ஒபாமா வெள்ளை மாளிகையில் தலாய் லாமாவுக்கு விருந்தளிக்கிறார்.
ஆனால் உலகமெங்கும் வாழும் 10 கோடி தமிழ்மக்கள் குறிப்பாக ஈழத் தழிழ் மக்களின் அவலங்கள் உலக நாடுகளின் கண்களுக்கு தெரிய மறுக்கிறது. தமிழ் மக்களுக்கு எதிரான இந்த அப்பட்டமான மனி உரிமை மீறல்களை கண்டுகொள்ளாமல் உலகம் மெளனம் சாதிக்கின்றது.
மே 16, 17, 18 ஆகிய மூன்று தினங்கள் உலக தமிழின வரலாற்றில் கருப்பு தினங்கள் ஆகும். உலக நாடுகளின் மெளனத்தை கலக்கும் பொருட்டும் உலகத் தமிழர்களுடைய ஒருமைப்பாட்டை நிலைநாட்டவு,ம் போர்முனையில் மாண்ட போராளிகள், இலட்சோப இலட்சம் ஈழத்தமிழ் மக்கள் நினைவாக இம்மூன்று தினங்கள் தமிழினத்தின் வலி சுமந்த நாட்களாக அனுசரிக்கவும்,
அத்தினங்களில் அனைவரும் கருப்பு சின்னங்கள் அணியவும் அனைத்து மாவட்டங்களிலும் மாலை 6.30 மணி முதல் 7 மணி வரையிலும் மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தவும் வேண்டுகிறேன்.
18ம் தேதி சென்னை மெமோரியல் அரங்கில் எனது தலைமையில் மாலை 6.30 மணி முதல் 7 மணி வரையிலும் மெழுகுவர்த்தி அஞ்சலி நடைபெறும் என்று கூறியுள்ளார் கிருஷ்ணசாமி.












Click it and Unblock the Notifications