ஒரே பிரசவத்தில் 3 பெண் குழந்தைகள்-ஏழ்மையால் விட்டு சென்ற தாய்-அழைத்து வந்த போலீஸ்!
கும்பகோணம்: ஒரே பிரசவத்தில் பிறந்த 3 பெண் குழந்தைகளை மருத்துவமனையிலேயே விட்டுவிட்டு தாய் மாயமானார்.
கும்பகோணம் அருகே உள்ள தாராசுரத்தை சேர்ந்த கூலித் தொழிலாளி மணிகண்டன் (26), இவரது மனைவி துர்காதேவி (24).
கர்ப்பிணியாக இருந்த துர்காதேவி்க்கு சமீபத்தில் கும்பகோணத்தில் ஒரு தனியார் மருத்துவமனையில் ஒரே பிரசவத்தில் 3 பெண் குழந்தைகள் பிறந்தன.
குழந்தைகள் மிகவும் எடை குறைவாக இருந்ததால் 1 மாதம் இன்குபேட்டரில் வைத்து பராமரிக்க வேண்டும் என டாக்டர்கள் கூறினர். ஆனால், அதற்கு பணமில்லை என்று கூறியதால் துர்காதேவியையும் குழந்தைகளையும் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கும்பகோணம் அரசு மருத்துவமனையில் இன்குபேட்டரில் வைத்து குழந்தைகள் பராமரிக்கப்பட்டன. துர்காவும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந் நிலையில் திடீரென துர்காதேவி குழந்தைகளை அங்கேயே விட்டுவிட்டு தலைமறைவாகிவிட்டார். இதுகுறித்து கும்பகோணம் மகளிர் போலீஸ் நிலையத்தில் மருத்துவமனை நிர்வாகம் புகார் செய்தது.
போலீஸார் துர்காதேவியை கண்டுபிடித்து அவரிடம் விசாரணை நடத்தியபோது, 3 பெண் குழந்தைகளை வளர்க்க எங்களிடம் வசதி இல்லை. இதனால் தான் விட்டுவிட்டு வந்தேன் என்றார்.
போலீசார் அறிவுரை கூறி துர்காதேவியை மீண்டும் மருத்துவமனைக்கு அழைத்து வந்து குழந்தைகளை கவனிக்க செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications