'தமிழ் வழக்கு மொழி': வக்கீல்கள் ஸ்டிரைக்-நீதிமன்றங்கள் ஸ்தம்பிப்பு
சென்னை: தமிழை வழக்கு மொழியாக அறிவிக்கக் கோரி தமிழகம் முழுவதும் இன்று வக்கீல்கள் கோர்ட் புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளதால் நீதிமன்றப் பணிகள் முற்றிலும் முடங்கியுள்ளன.
சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் மதுரை கிளையில் வழக்கு மொழியாக தமிழையும் அறிவிக்க வேண்டும் என்று கோரி மதுரை உயர்நீதிமன்றக் கிளை வக்கீல்கள் 10 நாட்களுக்கு முன்பு போராட்டத்தைத் தொடங்கினர். அன்று முதல் 6 வக்கீல்கள் தொடர்ந்து உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதனால் சலசலப்பு ஏற்பட்டது. இந்த உண்ணாவிரதப் போராட்டம் பின்னர் கோவை, புதுக்கோட்டைக்கும் பரவியது. நேற்று முதல் சென்னை உயர்நீதிமன்றத்திலும் வழக்கறிஞர் ஜேசுபாலன் தலைமையில் வக்கீல்கள் உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர்.
இந்த நிலையில் இன்று தமிழகம் மற்றும் புதுச்சேரி வக்கீல்கள் சங்கத்தின் அழைப்பை ஏற்று தமிழகம் முழுவதும் வக்கீல்கள், ஒரு நாள் கோர்ட் புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஸ்டிரைக் காரணமாக, சென்னை உயர்நீதிமன்றம், மதுரை கிளையில் வக்கீல்கள் யாரும் பணிக்குச் செல்லவில்லை. சென்னையில் உள்ள சைதாப்பேட்டை, ஜார்ஜ்டவுன், எழும்பூர் கோர்ட்களிலும் வக்கீல்கள் பணிக்குச் செல்லவில்லை.
இதேபோல மதுரை, கோவை, சேலம் உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களிலும் வக்கீல்கள் கோர்ட்டுக்குப் போகவில்லை. இந்த கோர்ட் புறக்கணிப்பு காரணமாக தமிழகம் முழுவதும் நீதிமன்றப் பணிகள் ஸ்தம்பித்துப் போயுள்ளன.


Click it and Unblock the Notifications
