For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

10 நாளில் தமிழில் படித்தவர்களுக்கு அரசு வேலை தொடர்பான சட்ட மசோதா

Google Oneindia Tamil News

சென்னை : பத்து நாட்களுக்குள், தமிழில் படித்தவ்ர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை தருவது தொடர்பான சட்ட மசோதாவை உருவாக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கு உயிர் கொடுப்பதுதொடர்பான நடவடிக்கைகள் குறித்து முதல்வர் கருணாநிதி தலைமையில் நேற்று ஆலோசனை நடந்தது. அக்கூட்டம்தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

கோவையில் அண்மையில் நடைபெற்ற உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் மீது மேற்கொள்ளப்பட வேண்டிய தொடர் நடவடிக்கைகள் குறித்து, சென்னை கோட்டையில் அமைந்துள்ள செம்மொழி தமிழாய்வு நூலக அரங்கில் (பழைய அமைச்சரவைக் கூட்ட அரங்கு), முதல்வர் கருணாநிதி தலைமையில் காலை 11.00 மணி அளவில் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில், நிதியமைச்சர் க.அன்பழகன், மத்திய அமைச்சர்கள் மு.க.அழகிரி, ஆ.ராசா, கவிஞர் கனிமொழி எம்.பி, அமைச்சர்கள் வீரபாண்டி ஆறுமுகம், துரைமுருகன், க.பொன்முடி, சுரேஷ்ராஜன், தங்கம் தென்னரசு, வெள்ளக்கோவில் சாமிநாதன், பூங்கோதை ஆகியோரும், தலைமைச் செயலாளர் உள்ளிட்ட பல்வேறு துறைச் செயலாளர்கள், தொல்லியல் துறை ஆணையர், தஞ்சை பல்கலைக்கழக துணைவேந்தர் மற்றும் தமிழ் வளர்ச்சித்துறை இயக்குநர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தின் தொடக்கத்தில் கோவையில் உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டினை திட்டமிட்டு சிறப்பாக நடத்தியமைக்காகவும், செம்மொழி தமிழாய்வு நூலகத்தை புனித ஜார்ஜ் கோட்டையில் பழைய சட்டமன்ற வளாகத்தில் தொடங்கி வைத்ததற்காகவும் முதல்வரைப் பாராட்டி நன்றி தெரிவித்து ஒரு தீர்மானத்தை நிதியமைச்சர் அன்பழகன் முன்மொழிந்து, அதனை அனைவரும் கைதட்டி வரவேற்றனர்.

அடுத்து, செம்மொழி மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை ஒவ்வொன்றாக விவாதத்துக்கு எடுத்துக்கொண்டு, அதன் மீது எடுக்கப்பட்ட- எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.

- முதல் பொருளாக தமிழக அரசு சார்பில், ஐந்திணை நிலவகைகளில் "பாரம்பரிய மரபணு பூங்காக்கள் (ஜெனிட்டிக் கார்டன்ஸ்) அமைக்கப்படும்'' என்ற அறிவிப்பு பற்றி பேசப்பட்டது.

வேளாண்மைத்துறை செயலாளர் அந்த பொருள் குறித்து எம்.எஸ்.சுவாமிநாதன் எம்.பி.யோடு கலந்து பேசியிருப்பதாகவும், அவர் டெல்லியிலிருந்து திரும்பியதும் தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும், அந்த பூங்காக்களை தொடங்குவதற்கான இடங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன என்றும், அடுத்த பதினைந்து நாட்களுக்குள் அதுபற்றிய அனைத்து விவரங்களையும் முதல்வருக்கு தாக்கல் செய்வதாகவும் கூறினார்.

இலங்கை தமிழர்களின் அனைத்து பிரச்சினைகளுக்கும் உடனடியாக தீர்வு காண்பதற்கேற்ற முனைப்பான முயற்சிகளை மேற்கொள்ள இலங்கை அரசை இந்திய அரசு வலியுறுத்திட வேண்டுமென்று நிறைவேற்றப்பட்ட தீர்மானம் குறித்து அடுத்து பேசப்பட்டது.

இந்த தீர்மானம் குறித்து கடந்த வாரம் தலைமைச் செயலாளர், மத்திய அரசின் வெளியுறவுத்துறை செயலாளருக்கு கடிதம் எழுதியிருப்பதாகவும், அதன் தொடர்ச்சியாக பிரதமருக்கு, முதல்வர் கடிதம் எழுதவிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.

- மத்தியில் தமிழ் ஆட்சிமொழியாக்கப்பட வேண்டுமென்ற தீர்மானம் குறித்து விவாதிக்கப்பட்டது. இதுபற்றி நாடாளுமன்றத்தில் ஒரு தீர்மானத்தை முன்மொழிந்து அதன் மீது விவாதம் கோரலாமென்று முடிவெடுக்கப்பட்டது.

சென்னை உயர்நீதிமன்றத்தில், தமிழ் பயன்பாட்டு மொழியாக அங்கீகரிக்கப்பட வேண்டுமென்ற தீர்மானம் குறித்து விரிவாக பேசப்பட்டது. இது குறித்து ஏற்கனவே முதல்-அமைச்சர் எழுதிய கடிதம் பற்றியும், தமிழக அரசு சார்பில் மத்திய அரசுக்கு 2006-ம் ஆண்டிலேயே அனுப்பி வைக்கப்பட்ட கருத்துருக்கள் பற்றியும் விவாதிக்கப்பட்டு-மீண்டும் இதுகுறித்து மத்திய அரசை அணுகி வலியுறுத்த வேண்டுமென்று முடிவெடுக்கப்பட்டது.

- தமிழ்மொழியின் வளர்ச்சிக்கும், ஆய்வுக்கும் தேவையான அளவு மானிய தொகையினை வழங்கிட மத்திய அரசை கேட்டு கொள்வது தொடர்பான தீர்மானம் குறித்து பேசப்பட்டது.

பல்வேறு மொழிகளின் வளர்ச்சிக்காக மத்திய அரசு எந்த அளவுக்கு செலவு செய்கிறது என்பதை பற்றியெல்லாம் விவாதிக்கப்பட்டு தேவையான திட்ட குறிப்புகளுடன் தமிழ்மொழிக்கும் கூடுதல் நிதி உதவி கோரி மத்திய அரசை அணுகுவதென்று முடிவெடுக்கப்பட்டது.

- "இந்திய தேசிய கல்வெட்டியல் நிறுவனத்தை தமிழகத்தில் அமைத்திட வேண்டுமென்ற தீர்மானம் குறித்து அடுத்து விவாதிக்கப்பட்டது. இதைப் பற்றியும் மத்திய அரசுக்கு ஏற்கனவே முதல்வர் எழுதிய கடிதத்தை வலியுறுத்தி மீண்டும் நினைவுபடுத்துவதென்றும், இதற்காக முனைவர் ஐராவதம் மகாதேவனின் முயற்சிகளை கோருவதென்றும் முடிவெடுக்கப்பட்டது.

- கடல்கொண்ட பூம்புகார் பகுதியையும், குமரி கண்டத்தையும், ஆழ்கடல் அகழ்வாராய்ச்சி செய்திட தேவையான திட்டம் வகுத்து செயல்படுத்திட வேண்டுமென்ற தீர்மானம் பற்றியும் பேசப்பட்டது. இது குறித்து இதுவரை கிடைத்திருக்கும் ஆதாரங்களுடன் தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழகம் வழங்கியிருக்கும் அறிக்கையின் அடிப்படையில் பிரதமருக்கு, முதல்வரிடமிருந்து நேர்முக கடிதம் அனுப்புவதென்று முடிவெடுக்கப்பட்டது.

- தமிழகத்தின் ஆட்சி மொழியாக- நிர்வாக மொழியாக தமிழ் ஆக்கப்பட வேண்டும் என்பதை நிறைவேற்றிட தமிழக அரசுக்கு, அலுவலர்களும், பொதுமக்களும் தேவையான ஒத்துழைப்பு வழங்கி செயல்பட வேண்டுமென்ற தீர்மானம் பற்றி பேசப்பட்டு, அது குறித்து தலைமை செயலாளர் உடனடியாக தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென்று இன்றைய கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.

- தமிழில் படித்தவர்களுக்கு அரசு பணியில் முன்னுரிமை அளித்திட, உரிய சட்டம் இயற்றப்படும் என்ற முடிவு குறித்து விரிவாக பேசப்பட்டது. சட்ட நிபுணர்களோடு கலந்தாலோசித்து இன்னும் பத்து நாட்களுக்குள் சட்ட முன்வடிவினை (சட்ட மசோதா) தயாரிப்பதென்று முடிவு செய்யப்பட்டது.

- தமிழ் மென்பொருள்களுள் சிறந்த மென்பொருள் ஒன்றை தேர்வு செய்து, அதனை உருவாக்கியவருக்கு "கணியன் பூங்குன்றனார்'' பெயரில் ஒரு லட்ச ரூபாய் பரிசு தொகையுடன் விருதும், பாராட்டு சான்றிதழும் வழங்கப்படுவது ஆண்டுதோறும் தொடரும் என்ற முடிவினையொட்டி, இந்த ஆண்டும் அதற்கான கருத்துரு பெற்று அறிவிப்பதென்று தீர்மானிக்கப்பட்டது.

- தமிழகத்தின் பள்ளி- கல்லூரி- பல்கலைக்கழக பாட திட்டங்களில்; "தமிழ் செம்மொழி'' என்ற தலைப்பு அடுத்த கல்வியாண்டு முதல் இடம்பெறுவதற்கு ஆவன செய்யப்படும் என்ற அறிவிப்பு தொடர்பாக பேசப்பட்டது. பள்ளி கல்வித்துறை அமைச்சர் அதுபற்றி விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென்று முடிவெடுக்கப்பட்டது. தமிழ்ப்பல்கலைக்கழகத்தின் ஆலோசனைகளையும் இது குறித்து கேட்டுப்பெறுவதென்றும் தீர்மானிக்கப்பட்டது.

- பல்வேறு நாடுகளை சேர்ந்த அறிஞர்கள் இடம் பெற்று மதுரை மாநகரில் தொடங்கப்பெறவுள்ள "தொல்காப்பியர் உலகத்தமிழ் செம்மொழி சங்கம்'' நிறைவேற்றவுள்ள பொறுப்புகள் குறித்த தீர்மானம் பற்றியும் கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டது.

அடுத்த உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டை எப்படி நடத்துவது, எங்கு நடத்துவது என்ற திட்டங்களையும், திராவிடர் மொழி, கலை, பண்பாடு, வாழ்வியல் ஆகியவற்றை தொகுத்து நிரந்தர கண்காட்சி ஒன்றை அமைத்தல், ஆவணக்காப்பகம் ஒன்றை உருவாக்கி பராமரித்தல், தனித்தனி தீவுகளை போல சிதறுண்டு கிடக்கும் தமிழாராய்ச்சி உலகத்தை ஒருங்கிணைத்தல் ஆகிய பணிகளை செயல்படுத்த உரிய திட்டத்தினை தயாரித்து அதற்கான செலவினம் குறித்தும் அறிக்கை அளித்திட தமிழ்ப்பல்கலைக்கழக துணைவேந்தரை கேட்டுக் கொள்ளலாம் என தீர்மானிக்கப்பட்டது.

- கோவையில் நடைபெற்ற மாநாட்டின் நினைவு என்றென்றும் நிலைத்திருக்க செய்யக்கூடிய "செம்மொழிப் பூங்கா'' அமையவுள்ள காந்திபுரம் பகுதியில் போக்குவரத்து நெரிசலை களைய ஒரு மேம்பாலம் சுமார் 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படும் என்ற முடிவு குறித்து பணிகளை விரைந்து மேற்கொள்ள வேண்டுமென்று தீர்மானிக்கப்பட்டது.

- தமிழ்மொழியின் சிறந்த படைப்புகளை பிற இந்திய மொழிகளிலும், ஐரோப்பிய ஆசிய மொழிகளிலும் மொழிபெயர்த்து வெளியிடவும்; பிறமொழி இலக்கியங்களை தமிழில் மொழி பெயர்த்திடவும்; அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணினியியல், மருத்துவம் போன்ற அறிவியல் திறனை வளர்ப்பதற்கு தேவையான நூல்களை பிறமொழிகளிலிருந்து தமிழாக்கம் செய்திடவும், தேவையான பணிகள் மேற்கொள்ளப்படும் என்ற தீர்மானம் குறித்து விவாதிக்கப்பட்டு, இதற்கென ஒரு வல்லுநர் குழுவினை அமைப்பதென்றும், மொழி பெயர்ப்பு பயிற்சி அளித்திட தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம் திட்டம் ஒன்றை வகுத்து செயல்படுத்துவதென்றும் முடிவெடுக்கப்பட்டது.

- கோவையில் நடைபெற்ற உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டின் தொடர்ச்சியாக; தமிழ் வளர்ச்சிக்கென்றே தனியாக தமிழக அரசின் சார்பில் நூறு கோடி ரூபாய் சிறப்பு நிதியம் உருவாக்கப்பட்டு உரிய முறைகளை வகுத்துக்கொண்டு செயல்படுத்தப்படும் என்ற முடிவு குறித்து விவாதிக்கப்பட்டு, விரைவில் இந்த நிதியத்தை உருவாக்கி அறிவிப்பதென்று தீர்மானிக்கப்பட்டது.

இறுதியாக, அயல்நாடுகளில் வாழும் இந்திய தமிழர்கள் நலன் காக்கவும், அந்நாடுகளில் தேவைப்படும் தமிழ் வளர்ச்சிப் பணிகளுக்கு உதவிடவும் முதல்வரின் நேரடிப்பார்வையில் தனித்துறை ஒன்றை உருவாக்கிட முடிவு செய்யப்பட்டது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X