காண்ட்ராக்ட் மோசடி: தருமபுரி நகராட்சி து.தலைவர்- கவுன்சிலர் பதவி பறிப்பு
தர்மபுரி: தர்மபுரி நகராட்சியில் முறைகேடாக ரூ. 1.42 கோடி மதிப்புள்ள காண்ட்ராக்டை பெற்ற துணைத் தலைவர், கவுன்சிலர் பதவி நீக்கம் செய்யப்பட்டனர்.
தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பெறப்பட்ட விவரங்களின் அடிப்படையில் இந்த பதவி நீக்கம் நடந்துள்ளது.
தர்மபுரி நகர்மன்றத் துணை தலைவரான டி.பி. தங்கராஜ் (25வது வார்டு), நகர்மன்ற உறுப்பினர் கே. சரவணன் (20வது வார்டு) ஆகியோர் நகராட்சி காண்ட்ராக்ட் பணிகளை தங்கள் மனைவியர் பெயரில் எடுத்ததையடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
தருமபுரி நகராட்சியில் மொத்தம் 33 வார்டுகள் உள்ளன. இதில் திமுக சார்பில் 12 பேர், அதிமுக 11, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி 2, பாமக 1, சிபிஐ 1, சிபிஎம் 1, காங்கிரஸ் 2, சுயேச்சை 3 உறுப்பினர்கள் உள்ளனர்.
இவர்களில் நகர்மன்றத் தலைவராக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த டி.சி.பி. ஆனந்தகுமாரராஜா, துணைத் தலைவராக திமுகவைச் சேர்ந்த டி.பி. தங்கராஜ் ஆகியோர் பதவி வகித்தனர்.
இந்நிலையில் நகராட்சி காண்ட்ராக் பணிகளை யார் யார் டெண்டர் எடுத்துள்ளனர் என்பது குறித்த விவரங்களை அளிக்குமாறு திமுக கவுன்சிலர் சந்திரமோகன் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் விண்ணப்பத்திருந்தார்.
இந்த மனுவின் அடிப்படையில் நகராட்சி நிர்வாகம் விசாரணை நடத்தியதில், நகர்மன்ற துணைத் தலைவர் டி.பி. தங்கராஜ் தனது மனைவி செல்வி பங்குதாரராக உள்ள ஸ்ரீ சன் கட்டுமான நிறுவனத்தின் சார்பில் நகராட்சியின் பல்வேறு காண்ட்ராக்ட்களை எடுத்து, நகராட்சி நிதியை பெற்றது தெரிய வந்தது.
அதே போல நகர்மன்ற உறுப்பினர் சரவணன் தனது மனைவி மஞ்சுளாவின் பெயரில் செயல்படும் ஹரினி கட்டுமான நிறுவனத்தின் சார்பில் காண்ட்ராக்ட்களை எடுத்துள்ளார்.
இதையடுத்து தங்கராஜ், சரவணன் இருவரையும் பதவி நீக்கம் செய்யுமாறு திமுக கவுன்சிலர்கள் நாட்டான் மாது, தங்கமணி, சந்திரமோகன், பாண்டியன், காங்கிரஸ் கவுன்சிலர்கள் தகடூர் வேணுகோபால், டி.மாது, அதிமுககவுன்சிலர் அமுதவள்ளிமுருகேசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கவுன்சிலர் மாதேஷ், பா.ம.க. கவுன்சிலர் புனிதா, விடுதலை சிறுத்தைகள் கட்சி கவுன்சிலர் ஜெயந்தி ஆகிய 10 பேர் சேலத்தில் உள்ள மண்டல நகராட்சி நிர்வாக இயக்குனர் சவுந்திரராஜனிடம் மனு அளித்தனர்.
இதைத் தொடர்ந்து நகராட்சி சட்ட விதிமுறைகளை மீறி காண்ட்ராக்ட் எடுத்த தங்கராஜ், சரவணன் ஆகியோர் பதவி நீக்கம் செய்யப்பட்டனர்.
பதவி நீக்கம் செய்யப்பட்ட கவுன்சிலர் உண்ணாவிரதம்:
இந் நிலையில் பதவி நீக்கம் செய்யப்பட்ட கவுன்சிலர் சரவணன் நகராட்சி அலுவலக வளாகத்திற்கு திடீரென நகராட்சி அலுவலக நுழைவாயில் முன் சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடுவதாக கூறி தரையில் அமர்ந்தார்.
மதியம் பசி எடுத்தவுடன் உண்ணாவிரதத்தை வாபஸ் பெற்றுக் கொண்டு வீட்டுக்குப் போய்விட்டார்.
நம் நாட்டில் பெரும்பாலானவர்கள் கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடுவதே தனது வார்டுக்குரிய காண்ட்ராக்ட்களைப் பெற்று அதில் பணம் சுருட்டவும், குடிநீர்-கழிவுநீர் வாய்க்கால் கனெக்ஷன் தர லஞ்சம் வாங்கவும், உள்ளாட்சிகளில் பதவியைப் பிடித்து பெரிய அளவில் பணம் கொள்ளையடிக்கவும், தங்கள் பகுதியில் உள்ள புறம்போக்கு நிலங்களை சுருட்டவும், தனது வார்டில் கட்டடம் கட்டுவோரை விதிமீறல் என்று சொல்லி மிரட்டி பணம் வசூலிக்கவுமே.
மக்களுக்காக, சமூக சேவைக்காக இந்தப் பதவிக்கு வருவோர் மிகவும் குறைவே.
உங்கள் ஏரியாவில் சில ஆண்டுகளுக்கு முன் மோட்டார் சைக்கிளுக்கு பெட்ரோல் போட வக்கில்லாமல் இருந்த கவுன்சிலர் யாராவது இப்போது ஸ்கார்பியோ காரில் இரவிலும் கூலிங்கிளாஸை கழற்றாமல் சுற்றிக் கொண்டிருந்தால், அதன் பின்னணி இந்த காண்ட்ராக்ட்கள், கொள்ளைகள் தான்.












Click it and Unblock the Notifications