தூத்துக்குடி: ரூ. 550 கோடியில் உணவுப் பதப்படுத்தும் சிறப்பு பொருளாதார மண்டலம்-10,000 பேருக்கு வேலை
சென்னை: தூத்துக்குடியில் 425 ஏக்கர் பரப்பில் ரூ. 550 கோடி மதிப்பில் உணவு பொருட்களை பதப்படுத்தும் சிறப்புப் பொருளாதார மண்டலம் அமைக்கும் திட்டத்துக்கான ஒப்பந்தம் இன்றுகையெழுத்தானது. இதன்மூலம் 10,000 பேருக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு கிடைக்கும்.
தமிழக துணை முதல்வர் மு.க. ஸ்டாலின் சட்டசபையில் தமிழக அரசின் 2010ம் ஆண்டுக்கான தொழில்துறை மானியக் கோரிக்கையின்போது தென் தமிழகத்தில் தொழில் வளர்ச்சிக்கு உதவும் வகையில், தூத்துக்குடி மாவட்டத்தில் உணவுப் பொருள் பதப்படுத்தும் சிறப்புப் பொருளாதார மண்டலம் அமைக்கப்படும் என்று அறிவித்திருந்தார்.
அதன் அடிப்படையில் தூத்துக்குடி மாவட்டம், வடக்கு கரசேரி மற்றும் திம்மராஜபுரம் கிராமங்களில் சுமார் 425 ஏக்கர் பரப்பளவில் இந்த சிறப்பு பொருளாதார மண்டலம் உருவாகிறது.
தமிழக அரசின் டிட்கோ நிறுவனம் மற்றும் சி.சி.சி.எல். இன்ப்ராஸ்ட்ரக்சர் லிமிடெட் ஆகியவை இணைந்து இதை உருவாக்கவுள்ளன.
இதற்கான ஒப்பந்தம் இன்று ஜார்ஜ் கோட்டையில் ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தானது.
இந்தத் திட்டத்திற்கான கட்டுமான பணிகளுக்கு ரூ.550 கோடி செலவாகும். இந்தத் திட்டம் சுமார் ரூ.2,500 கோடி அளவிற்கு முதலீடுகள் ஈர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் ஏறத்தாழ 10,000 பேருக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு உருவாகும் என்று தெரிகிறது.
இந்த சிறப்புப் பொருளாதார மண்டலம் உலகத் தரம் வாய்ந்த பதப்படுத்தும் வசதிகளை கொண்டதாக இருக்கும். இந்த மண்டல்த்துக்கான பெருந்திட்டத்தை அமெரிக்காவைச் சேர்ந்த பொறியியல் ஆலோசகர்கள் தயாரித்துள்னர்.
ஆகஸ்ட் 5ம் தேதி தூத்துக்குடியில் நடைபெறும் விழாவில் ஸ்டாலின் இத் திட்டத்துக்கான அடிக்கல்லை நாட்டவுள்ளார்.












Click it and Unblock the Notifications