For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஐஏஎஸ் அதிகாரி உமாசங்கர் நீக்கம் ஏன்?-அரசு விளக்கம்

Google Oneindia Tamil News

Tamilnadu Govt
சென்னை: உமாசங்கர் மீதான நடவடிக்கை இறுதியானது அல்ல. மேலும் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மீது திமுக ஆட்சியில் மட்டும் நடவடிக்கை எடுக்கவில்லை. அதிமுக ஆட்சியிலும்தான் எடுத்துள்ளனர் என்று தமிழக அரசு கூறியுள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்ட அரசு செய்திக்குறிப்பு:

1990-ம் ஆண்டு இந்திய ஆட்சிப் பணியில் சேர்ந்த சி.உமாசங்கர் என்பவர் மீது - அவர் போலி சாதி சான்றிதழ் கொடுத்து அரசுப் பணியிலே சேர்ந்தார் என்ற குற்றச்சாட்டு எழுந்ததின் காரணமாக அவர் மீது அரசின் சார்பில் தற்காலிக நடவடிக்கை எடுக்கப்பட்டதைத் தொடர்ந்து ஒருசில அரசியல் கட்சியினர் உள்நோக்கத்துடன் அவருக்கு ஆதரவாக அறிக்கைகள் விடுத்ததின் காரணமாக அரசின் சார்பில் பின்வரும் விளக்கம் நாட்டு மக்களுக்கு அளிக்கப்படுகின்றது.

அரசின் மீது வேண்டுமென்றே பழிகூற வேண்டுமென்பதற்காக தலித் சமுதாயத்தைச் சேர்ந்த அதிகாரியின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதாக இது கூறப்பட்ட போதிலும், உண்மையில் தலித் சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவருக்குக் கிடைத்திருக்க வேண்டிய வாய்ப்பினை தவறான சான்றிதழ் கொடுத்து வேறு ஒருவர் தட்டிப் பறித்துவிட்டார் என்ற பெரும் புகார் வந்ததின் அடிப்படையில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை என்பதைத் திரித்து, இந்த அரசின் மீது குற்றம் சுமத்த வேண்டுமென்ற முனைப்போடு ஒரு சில அரசியல்வாதிகள் அறிக்கை விட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.

குறிப்பாக எதிர்க்கட்சித் தலைவர் ஜெயலலிதா இந்த அதிகாரி மீது பழிவாங்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டதாகச் சொல்லியிருக்கிறார். சொல்ல வேண்டுமென்றால் இந்த அதிகாரி தி.மு.க. ஆட்சிக் காலத்தில் தான் நல்ல பதவிகளில் எல்லாம் அமர்த்தப்பட்டு, முதல்-அமைச்சராலும், மற்ற அமைச்சர்களாலும் பாராட்டப்பட்டார். இந்த அதிகாரி மீது பழிவாங்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பது; தி.மு.க. ஆட்சிக் காலத்திலே அல்ல.

1995ம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சி நடைபெற்றபோதே - இதே அதிகாரி மீது - அவரது காரில் குளிர்பதன வசதி செய்து கொடுத்த கம்பெனிக்கு சலுகை செய்தார் என்றும் - அரசின் அனுமதியின்றி, வேலைவாய்ப்பு அலுவலகம் மூலமாக இல்லாமல் தனி ஒருவரை பணியிலே அமர்த்தினார் என்றும் - 20 கோடி ரூபாய் அரசு நிதியை தன்னுடைய சகோதரர் பணி புரிந்த வங்கிக் கிளையிலே டெபாசிட் செய்தார் என்றும் குற்றச்சாற்றுகள் கூறப்பட்டு - நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்த நிலையில் - தி.மு.க. ஆட்சியிலே தான் அந்தக் குற்றச்சாட்டுகள் விசாரிக்கப்பட்டு அவர் மீதான ஒழுங்கு நடவடிக்கை ரத்து செய்யப்பட்டது.

அதுபோலவே மீண்டும் 2005ம் ஆண்டு - அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் கர்நாடக அரசின் கொள்கை முடிவுகள் குறித்து இந்த அதிகாரி விமர்சனம் செய்து, அதுபற்றி கர்நாடக அரசே தமிழக அரசுக்கு புகார் செய்து ஒழுங்கு நடவடிக்கை இவர் மீது மேற்கொள்ளப்பட்டு - அந்தக் குற்றச்சாட்டிலிருந்தும் தி.மு.க. ஆட்சியிலே தான் விடுவிக்கப்பட்டார்.

எனவே இந்த அரசைப் பொறுத்தவரையில் இவர் மீது எந்த பழிவாங்கும் நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.

ஆனால் தலித் சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவரின் வாய்ப்பினைத் தட்டிப்பறிக்கும் வகையிலே இவர் போலிச் சான்றிதழ் கொடுத்து பணியிலே சேர்ந்தார் என்று தமிழக அரசிடம் புகார் கூறப்பட்ட நிலையில் - அதனைத் தள்ளிவிட இயலாமல் - முறையான மூன்று அதிகாரிகள் கொண்ட குழு ஒன்று அது பற்றி விசாரித்து - அந்தக் குற்றச்சாட்டு விசாரணைக்குரியது என்று தீர்மானிக்கப்பட்டது.

அதன் பிறகு அந்தப் புகாரைப் பற்றி தக்க பூர்வாங்க விசாரணை அரசினால் மேற்கொள்ளப்பட்டது. அந்த விசாரணையில் புகாருக்கான அடிப்படை முகாந்திரங்கள் இருப்பது தெரியவந்ததால் - அதன் அடிப்படையில் தக்க விரிவான ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்வதென்றும் முடிவு செய்து - அதே நேரத்தில் இதுபோன்ற மற்ற நேர்வுகளில் பின்பற்றப்படுவதைப் போன்று, ஒழுங்கு நடவடிக்கைக்கு குந்தகம் ஏற்படாமல் இருக்க உமாசங்கரை தற்காலிகப் பணிநீக்கம் செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அரசின் சார்பில் அவர் மீது இறுதியான நடவடிக்கை எதுவும் எடுக்கப்பட்டுவிடவில்லை. தற்காலிகப் பணிநீக்கம் தான் செய்யப்பட்டுள்ளது. இதன் முடிவில் தான் அந்தக் குற்றச்சாட்டின் மீதான இறுதி முடிவு மேற்கொள்ளப்படும். தற்காலிகப் பணிநீக்கம் என்பது தண்டனை ஆகாது. அதற்குள் ஒருசில அரசியல்வாதிகள் இதற்கொரு காரணத்தைக் கற்பித்து அறிக்கை விடுக்கின்றார்கள். அரசில் பணியாற்றும் ஒரு சில அதிகாரிகள் மீது இப்படிப்பட்ட புகார்கள் கூறப்படுமானால், அதுபற்றி இத்தகைய நடவடிக்கைகள் மேற்கொள்வது என்பது இந்த ஆட்சிக் காலத்திலே மட்டும் நிகழக் கூடியதல்ல.

கடந்தகால அ.தி.மு.க. ஆட்சியிலே கூட காவல்துறை தலைவராக இருந்த ரவீந்தரநாத் ஐ.பி.எஸ்., சென்னை மாநகர காவல் துறை கமிஷனராக இருந்த முத்துக்கருப்பன் ஐ.பி.எஸ்., உஜாகர் சிங் ஐ.ஏ.எஸ்., கே.எம்.சுப்பிரமணியன் ஐ.ஏ.எஸ். போன்ற பல அதிகாரிகள் மீது தற்காலிக பணிநீக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, பின்னர் சிலர் அதிலிருந்து விடுபட்டும் வந்திருக்கிறார்கள்; சிலர் நடவடிக்கைக்கும் ஆளாகியிருக்கிறார்கள்.

சாதிச் சான்றிதழ் குறித்து எழுப்பப்பட்ட புகாரின் மீது உயர் அலுவலர்களைக் கொண்ட குழுவினரால் இக்குற்றச்சாட்டு விசாரணைக்குரியது என்று தீர்மானிக்கப்பட்டு, பின்னர் உரிய பூர்வாங்க விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டதன் பயனாக ஒழுங்கு நடவடிக்கைகள் தொடர்வது, வழக்கமான அலுவலக நடைமுறைதான். அரசியல் லாபத்திற்காக; இதற்கு உள்நோக்கம் கற்பிப்பது சரியல்ல.

இந்தக் குற்றச்சாட்டுக் குறிப்பாணை மீது சம்பந்தப்பட்ட அலுவலருக்கு உரிய வாய்ப்புகள் அளிக்கப்பட்டு - அவரிடமிருந்து முகாந்திரங்கள் பெறப்பட்ட பின்னர் விதிகளின்படியும், நியாயத்தின் அடிப்படையிலும், ஆதாரத்தின் மூலமாகவும் தான் இறுதி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

எனவே இதுகுறித்து தவறான கருத்துக்களை வெளியிடுவது சட்டப்படி நியாயமான விசாரணைக்கு உதவிகரமாக அமையாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X