அமைச்சர் பதவியிலிருந்து நீக்க சதி நடக்கிறது-மமதா பானர்ஜி
டெல்லி: என்னை அமைச்சர் பதவியிலிருந்து நீக்க சதி செய்கிறார்கள் என்று கூறியுள்ளார் ரயில்வே அமைச்சர் மமதா பானர்ஜி.
பாராளுமன்றத்தில், ரயில்வே மானிய கோரிக்கை மீது நடைபெற்ற விவாதத்துக்குப் பதிலளித்து மமதா பேசினார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு அவர் நாடாளுமன்ற விவாதத்தில் கலந்து கொண்டார்.
மமதா பேசுகையில், எல்லா ரயில் விபத்துகளுக்கும் நான் பொறுப்பு ஏற்க முடியாது. மேற்கு வங்காளத்தில் நடைபெற்ற 2 விபத்துகளுக்கும் நாசவேலையே காரணம் என்று தெரிய வந்துள்ளது. இதுதொடர்பாக விசாரணை நடந்து வருகிறது. ரயில்கள் பாதுகாப்பாக ஓட நடவடிக்கை எடுப்பது, அந்தந்த மாநில அரசுகளின் பொறுப்பு. எனவே, இந்த விபத்துகளை பொறுத்தவரை, மேற்கு வங்காள அரசுதான் பொறுப்பு.
ரயில்வே அமைச்சர், ரயில் ஓட்டுவது இல்லை. ரயிலை இயக்குவதிலோ, தொழில்நுட்ப விஷயங்களிலோ ரயில்வே அமைச்சர் பங்கு பெறுவது இல்லை. கொள்கை முடிவு எடுப்பதுதான், ரயில்வே அமைச்சரின் பணி. ஆனால் எனக்கு எதிராக குற்றம் சாட்டுபவர்கள், அமைச்சர் பதவியில் இருந்து என்னை விரட்டுவதற்காக சதி செய்கிறார்கள்.
நான் ரயில்வே அலுவலகத்துக்கு வருவதே இல்லை என்றும் குற்றம் சாட்டுகிறார்கள். ரயில்வே அமைச்சகம் பற்றி என்னிடம் எந்த கேள்வியையும் கேளுங்கள். ஒரு துண்டு காகிதத்தை கூட பார்க்காமல் நான் பதில் சொல்கிறேன். ரயில்வே அமைச்சகத்தை பற்றி உடனுக்குடன் தகவல்களை தெரிந்து கொள்ளாவிட்டால், அதுபோன்று என்னால் பதில் அளிக்க முடியுமா?
தினமும் நாடு முழுவதும் 17 ஆயிரம் ரயில்கள் ஓடுகின்றன. எனவே, யாராவது ஒருவரால் விபத்து நடக்க வாய்ப்புள்ளது. நீங்கள் ஒரு பக்கம், ரயில்கள் சரியான நேரத்துக்கு வர வேண்டும் என்று கேட்கிறீர்கள். மற்றொரு புறம், அற்ப விஷயங்களுக்காக, ரயில்களை கொளுத்துகிறீர்கள்.
ஒருபுறம், பயணிகளுக்கு பாதுகாப்பு வேண்டும் என்று கேட்கிறீர்கள். மற்றொரு புறம், ரயில்வே போலீசாருக்கு அதிகாரம் கொடுக்க மறுக்கிறீர்கள். அவர்களுக்கு அதிகாரம் கொடுத்து பாருங்கள், அவர்கள் குற்றங்களை ஒடுக்கி காட்டுவார்கள்.
ரயில்வே துறை தனியார்மயம் ஆக்கப்படாது. ரயில்வே துறைக்காக, பிரதமர் ரயில் விகாஸ் யோஜனா' என்ற நிதியம் அமைக்க உறுப்பினர்கள் அனைவரும் எனக்கு ஆதரவு அளிக்க வேண்டும். அத்தகைய நிதியம் அமைக்கப்பட்டால், நிலுவையில் உள்ள ரயில்வே திட்டங்களை நான் விரைவாக நிறைவேற்ற முடியும்.
ரயில்வே ஊழியர், விருப்ப ஓய்வு பெற்று விட்டு, தனது பணியை தனது மகனுக்கோ, மகளுக்கோ அளிக்கும் திட்டத்தை அமல்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறேன். எம்.பி.க்களின் கோரிக்கைகளை கேட்பதற்காக, அனைத்து கோட்டங்களிலும் உயரதிகாரிகள் நியமிக்கப்படுவார்கள் என்றார் மமதா.
பின்னர் ரயில்வே துறைக்கான ரூ.498 கோடி மானிய கோரிக்கை நிறைவேற்றப்பட்டது.
ரயில் விபத்துகளுக்கு லாலு காரணம்-நிதீஷ் :
தற்போது நடந்து வரும் ரயில் விபத்துகளுக்கு முன்னாள் ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் யாதவ்தான் காரணம் என்று பீகார் முதல்வர் நிதீஷ் குமார் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், லாலுபிரசாத் மற்றும் ராப்ரிதேவியின் 15 ஆண்டு கால ஆட்சியில் பீகார் மாநிலம் மோசமான சூழ்நிலையை சந்தித்தது. இப்போது லாலு மீண்டும் ஆட்சிக்கு வரப்போவதாக கூறுகிறார்.
அவர் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தீவிரவாதம் மீண்டும் ஆட்சிக்கு வருவதற்கு சமமாகும். அவரால் பீகார் மாநிலம் மீண்டும் துன்பப்பட ஒருபோதும் அனுமதிக்க கூடாது.
இப்போது நடந்து வரும் ரயில் விபத்துகளுக்கு லாலு பிரசாத்தே காரணம்.
பாரதீய ஜனதா கூட்டணி ஆட்சியின்போது ரயில்வே துறையை சிறப்பாக வைத்து இருந்தோம். அதன்பிறகு ரயில்வே அமைச்சராக வந்த லாலுபிரசாத் பாதுகாப்பு பணிகளை சரியாக செய்யவில்லை. இதனால் தான் இப்போது விபத்துகள் நடக்கின்றன.
தற்போதைய ரயில்வே அமைச்சர் மம்தாவும், லாலுவையே பின்பற்றுகிறார். இதனால் ரயில்வே துறை பின்னடைவை சந்தித்து வருகிறது என்றார் நிதீஷ்.