மீண்டும் முதல்வர் பதவிக்கு வாய்ப்பில்லை-சமையல் கட்டோடு முடங்கினார் ராப்ரி

ஒரு காலத்தில் நாட்டையே பெரும் அதிர்ச்சி, ஆச்சரியத்தில் ஆழ்த்தியவர் ராப்ரி தேவி. சமையல் செய்து கொண்டு, வீட்டில் உள்ள கால்நடைகளை பார்த்துக் கொண்டு வீட்டோடு இருந்தவர் ராப்ரி. எழுதப் படிக்கக் கூடத் தெரியாதவர். அவரை தடாலடியாக முதல்வர் பதவியில் அமர்த்தினார் லாலு. அதனால் ஏற்பட்ட அதிர்ச்சிதான் அது.
பீகார் முதல்வராக ஒரு நாள், இரு நாள் அல்ல, கிட்டத்தட்ட 8 வருடங்கள் ஆட்சி புரிந்தார் ராப்ரி. பின்னர் எதிர்க்கட்சித் தலைவியாக 56 மாதங்கள் இருந்தார். அரசியலே சுத்தமாக தெரியாத நிலையிலும் அவர் இத்தனை காலம் ஆட்சி அதிகாரம், அரசியலில் இருந்ததே பெரிய அதிசயம்தான்.
ஆனால் தற்போது ராப்ரியின் அரசியல் எதிர்காலம் கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துள்ளது. அவருக்கு மீண்டும் முதல்வர் பதவி கிடைக்க வாய்ப்பில்லை. காரணம், சமீபத்தில், உருவான லாலு மற்றும் பாஸ்வான் கூட்டணியின்போது ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தம்.
அதன்படி பீகாரில் மீண்டும் ஆட்சியைப் பிடித்தால் லாலு முதல்வர் பதவிக்கும், பாஸ்வான் கட்சிக்கு துணை முதல்வர் பதவி என்றும் முடிவாகியுள்ளது. மேலும் ராப்ரியை முதல்வர் பதவியில் அமர்த்த பாஸ்வான் கட்சி விரும்பவில்லையாம்.
லாலுவும் கூட மீண்டும் மனைவியை சிரமப்படுத்த விரும்பவில்லை என்று தெரிகிறது.
உண்மைதான், நிதீஷ்குமார் ஆட்சியைப் பார்த்து விட்ட பீகார் மக்களால் நிச்சயம் ராப்ரி தேவியை சகித்துக் கொள்ள முடியாதுதான்.


Click it and Unblock the Notifications
