'அவரவர் போக்கில் ராசா, அழகிரி': இந்திய கம்யூ. தாக்கு
கோவை: மத்திய அமைச்சர்கள் ராசா, அழகிரி என யாராக இருந்தாலும் அவரவர் விரும்பிய போக்கில் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றனர் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் ஏ.பி.பர்தன் கூறினார்.
தமிழகத்திலும் நக்ஸல் வன்முறையை கட்டவிழ்த்து விட கம்யூனிஸ்ட்டுகள் திட்டமிட்டு வருவதாக முதல்வர் கருணாநிதி குற்றம் சாட்டியிருந்தார்.
இந் நிலையில் கோவையில் நிருபர்களிடம் பேசிய பர்தன்,
சத்துணவு ஊழியர்களின் போராட்டத்தை கம்யூனிஸ்ட் கட்சியினர் தூண்டிவிடவில்லை. அவர்களது நீண்டகால கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை என்பது தான் போராட்டத்தைத் தூண்டியுள்ளது. இப்படியிருக்க, கம்யூனிஸ்ட்டுகளைப் பற்றி முதல்வர் கருணாநிதி கூறியுள்ளது அதிர்ச்சியையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
அவர் கூறியுள்ள கருத்துகள் துரதிருஷ்டவசமானது. போராட்டம் என்பது ஜனநாயக ரீதியாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. சத்துணவு ஊழியர்கள் மேற்கொண்ட போராட்டம் வேலைநிறுத்தம் அல்ல. அப்படியிருக்க முன்கூட்டியே நோட்டீஸ் கொடுத்திருக்க வேண்டும் என்பது தேவையற்றது. கோரிக்கைகளுக்காக போராடுவது குற்றம் அல்ல; ஆனால் சத்துணவு ஊழியர்கள் குற்றவாளிகளைப் போல நடத்தப்பட்டுள்ளனர்.
அவர்களின் நியாயமான கோரிக்கைகளை ஏற்றுக் கொள்வதும், விடுவதும் முதல்வரின் கையில் இருக்கிறது. இப்படியிருக்க, அவர்களது போராட்டத்துக்காக கம்யூனிஸ்டுகளை பழிபோடுவது ஏற்புடையதல்ல.
இருப்பினும் இந்த குற்றச்சாட்டை பரிசாகவே ஏற்றுக் கொள்கிறோம். ஏனெனில், அடித்தட்டு மக்கள், உழைக்கும் வர்க்கத்தினரின் கோரிக்கைகளுக்கு கம்யூனிஸ்டு கட்சிகள்தான் எப்போதும் துணை நிற்கும்.
கம்யூனிஸ்டுகளையும், மாவோஸ்டுகளையும் ஒன்றுபடுத்தி முதல்வர் கருணாநிதி கருத்து தெரிவித்துள்ளார். ஆனால், முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் பொதுக் கூட்டத்தில் திமுகவினர் கல்லெறிந்த சம்பவத்தையெல்லாம் அவர் மறந்துவிட்டார்.
இடதுசாரிகள் ஆளும் மாநிலங்களில் அது இல்லை, இது இல்லை என்று அவர் குறிப்பிடுகிறார். திமுக அரசு செய்யாத நல்ல பல விஷயங்களை இடதுசாரிகள் ஆளும் மாநிலங்கள் செய்து வருகின்றன.
கம்யூனிஸ்ட்டுகளுடன் இதற்கு முன் திமுக கூட்டணி வைத்திருந்ததே, அப்போது கம்யூனிஸ்ட்டுகள் பற்றி தெரியவில்லையா?. தனக்கும், தனது கட்சிக்கு எதிர்காலம் சாதகமாக இல்லை என்பதாலேயே இத்தகைய கருத்துகளை முதல்வர் கூறி வருகிறார்.
இதுபோன்ற தாக்குதல்களை முதல்வர் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். நியாயமான கோரிக்கைகளுக்காக போராடுவோர் மீது அடக்குமுறையை கட்டவிழ்த்து விடும்போதுதான் மாவோயிஸ்டுகள் உருவாக்கப்படுகின்றனர்.
இப்போதைய காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசுக்கு குறிக்கோள், கோட்பாடுகள் கிடையாது. மத்திய அமைச்சர்கள் ராசா, அழகிரி என யாராக இருந்தாலும் அவரவர் விரும்பிய போக்கில் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.
வெளியுறவுத் துறைச் செயலர் நிருபமா ராவின் இலங்கை பயணம் அங்குள்ள தமிழர்களின் நலனுக்கு உதவும் என்றார் பர்தன்.












Click it and Unblock the Notifications