ஜெ.வைத் தொடர்ந்து கருணாநிதியும் மதுரையில் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்
சென்னை: அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா மதுரையில் பொதுக்கூட்டத்தில் பங்கேற்பார் எனக் கூறப்பட்டுள்ள நிலையில், முதல்வர் கருணாநிதியும் மதுரையில் பொதுக்கூட்டத்தில் பேசவுள்ளார்.
ஜெயலலிதா எங்கெல்லாம் பொதுக் கூட்டம் நடத்துகிறாரோ அங்கெல்லாம் முதல்வர் கருணாநிதியும் போய்ப் பேசி வருகிறார். ஜெயலலிதா கோவையில் கூட்டிய பெரும் கூட்டத்தைத் தொடர்ந்து முதல்வர் கருணாநிதியும் அங்கு போய் பொதுக் கூட்டத்தில் பேசினார்.
பின்னர் ஜெயலலிதா திருச்சியில் கூட்டம் போட்டார். இதைத் தொடர்ந்து முதல்வரும் அங்கு பேசவுள்ளார். நாளை இந்தக் கூட்டம் நடைபெறுகிறது.
இதையடுத்து மதுரையில் முதல்வர் கருணாநிதியின் பொதுக் கூட்டம் நடைபெறவுள்ளது. நவம்பர் 15ம் தேதி முதல்வர் கருணாநிதி மதுரை அரசு புதிய மருத்துவமனை திறப்பு விழா, மேம்பாலத் திறப்பு விழாவுக்காக மதுரை வருகிறார். அதே நாளில் பொதுக் கூட்டத்தை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
பிரமாண்டமான முறையில் இக்கூட்டத்தை நடத்த மதுரை திமுகவினர் முடிவு செய்துள்ளனர். மத்திய அமைச்சர் மு.க.அழகிரி தலைமையில் விரைவில் பொதுக் கூட்ட ஆலோசனை நடைபெறவுள்ளதாக தெரிகிறது.
மதுரையில் ஜெயலலிதாவை வைத்து பிரமாண்டமான பொதுக் கூட்டம் நடத்தப் போவதாக அதிமுகவினர் அறிவித்துள்ள நிலையில் தற்போது முதல்வரின் பொதுக்கூட்டம் குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications