விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் தொடரும்: தமிழக அரசு
சென்னை: விவசாயிகளுக்கு வழங்கப்படும் இலவச மின்சாரம் தொடரும் என்று தமிழக அரசு கூறியுள்ளது.
இதுதொடர்பாக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், முதல்வர் கருணாநிதி 15.08.2010 அன்று நிகழ்த்திய சுதந்திர தின உரையில் தமிழகம் முழுவதிலும் பயன்படுத்தப்பட்டு வரும் பல விவசாய பம்பு செட்டுகள், திறன் குறைந்தவையாக இருப்பதால், மின்சாரம் அதிகம் செலவாகிறது என்றும்,
இத்தகைய பம்பு செட்டுகளுக்கு பதில், திறன்மிக்க புதிய பம்பு செட்டுகளைப் பொருத்துவதன் மூலம், 20 சதவீதம் அளவுக்கு மின்சாரத்தைச் சேமித்திட முடியும் என்றும் தெரிவித்திருந்தார்.
எனவே சிறு, குறு விவசாயிகளின் பம்பு செட்டுகளில் உள்ள பழைய மின் மோட்டார்களை நீக்கிவிட்டு, அவற்றிற்குப் பதிலாக, புதிய மின் மோட்டார்கள் அரசின் சார்பாக இலவசமாகப் பொருத்தித் தரப்படும் எனவும், மற்ற விவசாயிகளுக்கு 50 சதவீத மானியத்துடன், புதிய மோட்டார்கள் பொருத்தித் தரப்படும் எனவும் அவர் அறிவித்தார்.
இந்தத் திட்டத்தின் நோக்கத்தை புரிந்து கொள்ளாமல் ஒருசிலர் தவறான கருத்துக்களை வெளியிட்டு இத்திட்டத்தின் நோக்கத்தை திசை திருப்ப முயல்கின்றனர்.
தற்போது புதிதாகப் பொருத்தப்படவுள்ள அதிக திறன் கொண்ட மின் மோட்டார்களில் மீட்டர் பொருத்தப்படுவது மின் கட்டணம் வசூலிப்பதற்காகவே என்று அவதூறு பரப்புவது, விவசாயிகளுக்காக அறிவிக்கப்பட்டுள்ள இத்திட்டத்தை முடக்கிப் போடச் செய்யும் முயற்சியாகும்.
விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கும் திட்டத்தில் எவ்வித மாற்றமும் இல்லை என்பதால் விவசாயிகள் இதுகுறித்து எந்த அச்சமும் அடையத் தேவையில்லை.
இத் திட்டத்தின்கீழ் புதிய மின் மோட்டார்கள் பொருத்திக் கொள்ள விருப்பம் தெரிவிக்கின்ற விவசாயிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் மின் மோட்டார்கள் பொருத்தித் தரப்படும் என்று கூறப்பட்டுள்ளது.