For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பன்றிக் காய்ச்சல் தடுப்பூசித் திட்டத்துக்கு ரூ. 15 கோடி நிதி ஒதுக்கீடு-தமிழக அரசு

Google Oneindia Tamil News

சென்னை: பன்றிக் காய்ச்சல் தடுப்பூசித் திட்டத்திற்காக தமிழக அரசு ரூ. 15 கோடி நிதியை ஒதுக்கீடு செய்துள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பன்றிக்காய்ச்சல் நோய்க்கு இலவசமாக தடுப்பூசி போட தமிழக அரசு உத்தரவிட வேண்டும் என்று கோரி பாலசுப்பிரமணியன் என்பவர் பொது நல வழக்கு ஒன்றை சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.

இந்த வழக்கை தலைமை நீதிபதி எம்.ஒய்.இக்பால், நீதிபதி டி.எஸ்.சிவஞானம் ஆகியோரை கொண்ட டிவிஷன் பெஞ்ச் விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.

இந்த வழக்கில் பதில் மனு தாக்கல் செய்யுமாறு தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதனையடுத்து, தமிழக அரசு வழக்கறிஞர் ராஜா கலிபுல்லா அரசின் பதில் மனுவை நேற்று தாக்கல் செய்தார்.

சுகாதாரத்துறை முதன்மை செயலர் வி.கே.சுப்புராஜ் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:

பன்றிக்காய்ச்சல் நோயை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தனியார் மருத்துவமனைகளை சேர்ந்த மருத்துவர்கள், நர்சுகள் உள்ளிட்ட அனைவருக்கும் பன்றிக் காய்ச்சல் நோய் தடுப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தப் பட்டுள்ளது.

நோய் பாதித்தவர்களை தனி அறையில் வைத்து சிகிச்சை அளிக்க வலியுறுத்தப்பட்டுள்ளது. கிண்டி கிங் இன்ஸ்டிடியூட் மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட 9 தனியார் மருந்து ஆய்வுக் கூடங்களில் பன்றிக் காய்ச்சல் நோய் பரிசோதனை செய்யப்படுகிறது.

அனைத்து அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனைகளிலும் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு அரசு மருத்துவ ஆய்வுக்கூடங்களுக்கு அனுப்பப்படுகிறது.

மதுரை, கோவை, நெல்லை ஆகிய மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் பன்றிக் காய்ச்சல் நோயை கண்டறியும் கருவிகள் வாங்க ரூ.1.55 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

பரிசோதனை ஆய்வுக்கூடங்களை மேம்படுத்த ரூ.249.16 லட்சம் கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

பள்ளி, கல்லூரி மற்றும் வீடுகளில் நேரடியாக சென்று நோய் கண்டறியும் பரிசோதனை துவங்கப்பட்டுள்ளது.

அனைத்து மாவட்டங்களிலும், மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளிலும் நோய் தாக்குதலுக்கு உள்ளானவர்களுக்கு சிகிச்சை அளிக்க தனி வார்டுகள் உருவாக்கப்பட்டுள்ளன. எதிர்ப்பு சக்தி மருந்துகள், டாமின் புளு மருந்துகள் ஆகியவை போதுமான அளவுக்கு அனைத்து மருத்துவமனைகளிலும் சப்ளை செய்யப்பட்டுள்ளது.

அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனைகளை சேர்ந்த மருத்துவர்கள், நர்சுகள், சுகாதார ஊழியர்களுக்கு பன்றிக் காய்ச்சல் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

நோயின் அறிகுறி தடுப்பு முறைகள் குறித்து விழிப்புணர்வு விளம்பரங்கள் செய்யப்பட்டுள்ளன. சென்னை, மதுரை, வேலூர், கோவை,கன்னியாகுமரி மாவட்டங்களில் பன்றிக் காய்ச்சல் நோய் பரவி இருப்பதால் கல்லூரிகள் , பள்ளிகள் வீடுகளுக்கு நேரடியாக சென்று கண்காணிக்கும் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

1539 ஆரம்ப சுகாதார நிலையங்களில், 8706 துணை சுகாதார நிலையங்ளில் பணியாற்றும் சுகாதார அலுவலர்கள் வீடு வீடாக சென்று பரிசோதனை செய்து வருகிறார்கள்.

இதுவரை 3596 ரத்த மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டதில், 774 பேருக்கு பன்றிக் காய்ச்சல் நோய் அறிகுறி கண்டறியப்பட்டது. இதில் 635 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர்.

பன்றிக் காய்ச்சல் நோய்க்கு 9 பேர் இதுவரை இறந்துள்ளனர். தடுப்பூசிகள் போதிய அளவு இருப்பது பற்றி விரிவாக விளம்பரம் செய்யப்பட்டுள்ளது.

கிண்டி கிங் இன்ஸ்டிடியூட், சென்னை மாநகராட்சி சோதனை கூடங்களில் குறைந்த விலையில் மக்களுக்கு தடுப்பூசி போடப்படுகிறது.

வறுமை கோட்டிற்கு கீழ் வசிக்கும் அனைவருக்கும் இலவசமாக தடுப்பூசி போட அரசு சார்பில் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் முதற் கட்டமாக 10 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட ரூ.15 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

மற்றவர்களுக்கு குறைந்த விலையில் தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து வழக்கை அடுத்த மாதம் 19ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X