மும்பையில் கொடுமை-பெற்ற பிள்ளையை ஜன்னல் வழியாக வீசிக் கொன்ற தாய்
மும்பை: மும்பையில் பெற்ற தாயே தனது பெண் குழந்தையை ஜன்னல் வழியாக தூக்கி எறிந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தீபிகா என்ற பெண் தனது ஒன்றரை மாத இரட்டைக் குழந்தைகளை சிகிச்சைக்காக மும்பையில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தார். ஆண், பெண்ணாக பிறந்த இந்த இரட்டையர்கள் குறை பிரசவத்தில் பிறந்தததால் மிகவும் குறைந்த எடையுடன் பிறந்தனர். அவர்களை சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்தார்.
திடீரென்று தீபிகா தனது பெண் குழந்தையை காணவில்லை என்று ஆர்பாட்டம் செய்துள்ளார். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த மருத்துவமனை நிர்வாகம் கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருப்பதைப் பார்த்தது. அப்போது தீபிகா தனது குழந்தையை ஒரு துண்டில் வைத்து கழிப்பறைக்குள் செல்வதும், பிறகு அவர் மட்டும் வெளியில் வருவதும் தெரிய வந்தது.
உடனே அவரைப் பிடித்து மருத்துவமனை நிர்வாகம் நடத்திய விசாரணையில் தானே குழந்தையை ஜன்னல் வழியாக வெளியில் எறிந்ததாக அவர் ஒப்புக் கொண்டார். இதையடுத்து வெளியில் கிடந்த குழந்தையை தேடிக் கண்டுபிடித்தனர்.
கீழே விழுந்ததில் காயம் அடைந்த குழந்தையின் தலையை எலிகள் கடித்ததால் மேலும் காயம் ஏற்பட்டது. அக்குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் அது சிகிச்சை பலனின்றி இறந்தது.
இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. ஆனால் தீபிகாவின் ஆண் குழந்தைக்கு தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதால், சிகிச்சை முடிந்தவுடனேயே அவரை கைது செய்யப்போவதாகப் போலீசார் தெரிவித்தனர்.
தீபிகா இப்படி செய்வார் என்று தான் எதிர்பார்க்கவே இல்லை என்று அவர் கணவர் அதிர்ச்சி தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications