காஷ்மீர் குறித்த சமரசப் பேச்சாளர் குழுவின் முதல் மதிப்பீட்டு அறிக்கை தாக்கல்
டெல்லி: காஷ்மீர் சென்று திரும்பியுள்ள சமரசப் பேச்சாளர் குழுவின் முதல் மதிப்பீட்டு அறிக்கை இன்று மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்திடம் தாக்கல் செய்யப்பட்டது.
திலீப் பட்கோவங்கர் தலைமையிலான 3 பேர் கொண்ட சமரப் பேச்சாளர் குழுவை மத்திய அரசு அமைத்துள்ளது. இந்தக் குழு சமீபத்தில் தனது முதல் ஜம்மு காஷ்மீர் பயணத்தை மேற்கொண்டது. காஷ்மீரில் பல்வேறு தரப்பினரையும் சந்தித்தனர் அவர்கள். முக்கியமாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள தீவிரவாதிகளை சந்தித்துப் பேசினர்.
இதையடுத்து இன்று தங்களது முதல் மதிப்பீட்டு அறிக்கையை ப.சிதம்பரத்திடம் அவர்கள் தாக்கல் செய்தனர்.
பின்னர் திலீப் பட்கோவங்கர் செய்தியாளர்களிடம் பேசுகையில், காஷ்மீர் பிரச்சினைக்கு நிச்சயம் தீர்வு காணப்படும்.அதேசமயம், எந்த மாஜிக் பார்முலாவும் எங்களிடம் இல்லை. காஷ்மீருக்கு நாங்கள் முதல் தடவையாக போயுள்ளோம். சில பரிந்துரைகளை அளித்துள்ளோம். அதுகுறித்து இப்போது விவாதிக்க முடியாது.
அரசுக்கும், சமரசப் பேச்சாளர்களுக்கும் இடையே மட்டும் அது குறித்து விவாதிக்கப்படும்.
இன்னும் 15 நாட்களில் எங்களது 2வது காஷ்மீர் பயணம் அமையும் என எதிர்பார்க்கிறோம் என்றார்.
இக்குழுவில் திலீப் பட்கோவங்கர் தவிர ராதாகுமார், எம்.எம்.அன்சாரி ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர்.
பேச்சாளர்களுக்கு ப.சி போட்ட கடிவாளம்
முன்னதாக சமரசப் பேச்சாளர்கள், காஷ்மீர் அமைதித் தீர்வு தொடர்பாக கிரிக்கெட் வர்னணை போல தொடர்ந்து மீடியாக்களுக்குத் தகவல் தந்து கொண்டிருப்பதைத் தவிர்க்க வேண்டும் என்று ப.சிதம்பரம் அறிவுரை கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், பால் பை பால் கமென்டடி போல காஷ்மீர் சமரசத் தீர்வு குறித்து பேசக் கூடாது என்று நான் கருதுகிறேன். அமைதித் தீர்வுக்கான முன்னேற்றங்கள் குறித்து வெளிப்படையாக பேசுவதைத் தவிர்க்க வேண்டும். இது முக்கியமான பிரச்சினைதொடர்பான சமரச நடவடிக்கை, கிரிக்கெட் போட்டி அல்ல. இதை பேச்சாளர்கள் மனதில் கொள்ள வேண்டும் என்றார் அவர்.
சமீபத்தில் திலீப் பட்கோவங்கர் மீடியாக்களிடம் பேசுகையில், ஒரு தீவிரவாதி காஷ்மீருக்கான அமைதித் தீர்வை தன்னிடம் தருவதாக உறுதி அளித்துள்ளதாக கூறியிருந்தார்.
அதேபோல, பாகிஸ்தானையும் சேர்க்காமல் காஷ்மீரில் அமைதியை கொண்டு வர முடியாது என திலீப்பும், இன்னொரு உறுப்பினரான ராதா குமாரும் கூறியது பெரும் சர்ச்சையை எழுப்பியது.
இந்தப் பேச்சுக்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்தது. இந்த நிலையில்தான் சமரசப் பேச்சாளர்களுக்கு கடிவாளம் போட்டுள்ளார் ப.சிதம்பரம்.












Click it and Unblock the Notifications