2ஜி ஏலத்தில் பங்கேற்ற ஸ்வான் டெலிகாம் யாருடைய பினாமி?
டெல்லி: ஸ்வான் டெலிகாம் என்ற பெயரில், 2ஜி ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீடு ஏலத்தில் பங்கேற்ற எடிசலாட் டிபி நிறுவனத்திற்கு தமிழகத்தி்ல நெருங்கிய தொடர்புகள் இருப்பதாக கூறப்படுகிறு.
2ஜி ஏலம் நடந்தபோது ஸ்வான் டெலிகாம் நிறுவனமும் அதில் பங்கேற்றது. இது அனில் அம்பானியின் பினாமி நிறுவனமாக முதலில் கருதப்பட்டது. ஆனால் தற்போது இதற்கு தமிழகத்தில் நெருங்கிய தொடர்பு இருப்பதாக தனியார் தொலைக்காட்சி ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
தற்போது எடிசலாட் டிபி என்று பெயர் மாற்றிக் கொண்டு செயல்படுகிறது ஸ்வான் டெலிகாம். சிஏஜி அறிக்கையில் ஸ்வான் நிறுவனத்திற்கு தேவையே இல்லாமல் அதிக முக்கியத்துவம் தரப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
துபாயைச் சேர்ந்த இடிஏ ஸ்டார் நிறுவனத்திற்கும், ஸ்வான் டெலிகாமுக்கும் தொடர்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. இடிஏ ஸ்டார் நிறுவனம் தமிழகத்தில் பல்வேறு வர்த்தக முதலீடுகளை மேற்கொண்டுள்ளது.
நடந்தது என்ன
2008ம் ஆண்டு ஜனவரி மாதம் 2ஜி உரிமத்தைப் பெற்றது ஸ்வான் டெலிகாம். அடுத்த 9 மாதங்களில் துபாயைச் சேர்ந்த டெலிகாம் நிறுவனமான எடிசலாட், ஸ்வான் நிறுவனத்தின் 45 சதவீத பங்குகளை வாங்கி நிறுவனத்தின் பெயரை எடிசலாட் டிபி என்று மாற்றியது.
இதற்கிடையே, 2008ம் ஆண்டு செப்டம்பர் 17ம் தேதி சென்னையில் ஜெனெக்ஸ் எக்ஸிம் வென்சர்ஸ் என்ற நிறுவனம் வெறும் ரூ. 1 லட்சம் மூலதனத்துடன் தொடங்கப்பட்டது.
மூன்று மாதங்கள் கழித்து அதாவது டிசம்பர் 17ம் தேதி, இந்த ஜெனெக்ஸ் நிறுவனம், எடிசலாட் நிறுவனத்தின் ரூ. 300 கோடி மதிப்புள்ள பங்குளை வாங்கியுள்ளது. வெறும் ரூ. 1 லட்சம் மூலதனத்தை மட்டு்மே கொண்டிருந்த ஜெனெக்ஸ் நிறுவனத்திற்கு எப்படி திடீரென ரூ. 300 கோடி அளவுக்கு வசதி வந்தது என்பது குறித்துத் தெரியவில்லை.
ஜெனெக்ஸ் எக்ஸிம் நிறுவனத்தின் சார்பில் எடிசலாட் டிபி நிறுவன இயக்குநர் குழுவில் சேர்ந்தவர் அகமது சையத் சலாஹுதீன். இவர் துபாயைச் சேர்ந்த இடிஏ ஸ்டார் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநருடைய மகன் ஆவார்.
இடிஏ ஸ்டார் குழுமம் தமிழகத்தைச் சேர்ந்த ஒரு முக்கியக் கட்சிக்கு மிகவும் நெருக்கமானதாக கருதப்படுகிறது. மேலும் காஞ்சிபுரம் அருகே மிகப் பிரமாண்டமான நகரியத்தை உருவாக்கும் முயற்சியிலும் ஸ்டார் நிறுவனம் இறங்கியுள்ளது. இதுதவிர சிறப்புப் பொருளாதார மணடலத்தையும் அது நிர்மானிக்கவுள்ளது. சென்னை அருகேயும் 450 ஏக்கர் பரப்பளவில் மிகப் பெரிய நகரியத்தை நிர்மானிக்கும் முயற்சியிலும் அது இறங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
தற்போது எடிசலாட் நிறுவனத்திற்குக் கொடுக்கப்பட்ட 2ஜி உரிமத்தை ரத்து செய்ய மத்திய அரசுக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஸ்வான் டெலிகாம் யாருடைய பினாமியாக செயல்பட்டது என்பது குறித்து விசாரிக்கப்பட்டு வருவதாக அந்த செய்தி கூறுகிறது.












Click it and Unblock the Notifications