இந்த 5 வருஷமும் நான்தான் முதல்வரா இருப்பேன்!-எதியூரப்பா

பல கோடி ரூபாய் நில ஒதுக்கீட்டு மோசடி மற்றும் ஊழல் விவகாரத்தில் சம்பந்தப்பட்ட எதியூரப்பாவின் உறவினர்கள், விஷயம் விவகாரமானதும் நிலத்தை திருப்பித் தருவதாகக் கூறிவிட்டனர். ஆனால் இந்த ஊழலுக்கு காரணமான எதியூரப்பாவின் முதல்வர் பதவி பறிக்கப்பட வேண்டும் என எதிர்க்கட்சிகள் வற்புறுத்தின.
இந்த நிலையில் டெல்லியில் நடைபெற்ற பாஜக துணைக் குழு கூட்டத்தில் கலந்துகொண்டார் எதியூரப்பா. இந்தக் கூட்டத்தில் அவரது ராஜினாமா குறித்து விவாதிக்கப்பட்டது. பின்னர் கர்நாடகா திரும்பிய அவர், இன்று ஹுப்ளியில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:
"அரசுக்கு இன்னும் இரண்டரை ஆண்டுகள் ஆட்சிக் காலம் உள்ளது. முதல்வரை மாற்றுவது குறித்து எந்த கருத்தும் எழவில்லை. நான் ஏன் ராஜிநாமா செய்ய வேண்டும்? நான் எந்த தவறும் செய்யவில்லை.
1994-ம் ஆண்டு முதல் அரசு நிலங்களின் ஒதுக்கீடு குறித்து ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதியைக் கொண்டு விசாரணை நடத்தப்படும். அந்த அறிக்கை 6 மாத காலத்தில் அரசிடம் சமர்ப்பிக்கப்படும். மதச்சார்பற்ற ஜனதா தளம் தலைவர் தேவெகெளட மற்றும் அவரது கட்சியினரின் முறைகேடுகள் குறித்து மக்களவையில் தெரிவிப்போம்.
கர்நாடகாவில் எனது தலைமையில் தான் சட்டப்பேரவைத் தேர்தலை சந்தித்தோம். எனவே, எனது தலைமையிலேயே மீதமுள்ள இரண்டரை ஆண்டுகால அரசின் ஆட்சிக்காலம் நிறைவு பெறும். அடுத்த தேர்தலில் வேறு ஒருவரின் தலைமையில் தேர்தலை சந்திக்க கட்சி விரும்பினால் அதன்படி செயல்படலாம். கட்சி தேர்வு செய்யும் நபருக்கு நான் முழு ஆதரவு தருவேன்...," என்றார்.












Click it and Unblock the Notifications