Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பீகார் சட்டசபை தேர்தல்-நிதீஷ்குமாருக்கு மாபெரும் வெற்றி-லாலு, காங். படுதோல்வி

Subscribe to Oneindia Tamil

Nitish Kumar
பாட்னா: பீகார் சட்டசபைத் தேர்தலில் நிதீஷ்குமார் தலைமையிலான கூட்டணி மகிப் பெரிய வெற்றியை சந்தித்துள்ளது. இக்கூட்டணி 199 இடங்களைக் கைப்பற்றியுள்ளது.

இத்தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு மிகப் பெரிய சரிவு ஏற்பட்டுள்ளது. மொத்தமே 6 தொகுதிகளில் மட்டுமே அது வெற்றியை ஈட்ட முடிந்தது. லாலு பிரசாத் யாதவ் தலைமையிலான கூட்டணி 31 தொகுதிகளுடன் முடங்கிப் போயுள்ளது. மற்றவர்கள் 7 இடங்களில் வெற்றி பெற்றுள்ளனர்.

முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவின் மனைவியான முன்னாள் முதல்வர் ராப்ரி தேவி ரகோபூர் மற்றும் சோனீப்பூர் ஆகிய தொகுதிகளில் போட்டியிட்டார். இதில் இரு தொகுதிகளிலும் அவர் தோற்றுப் போய் விட்டார்.

மொத்தம் உள்ள 243 தொகுதிகளின் வெற்றி மற்றும் முன்னணி நிலவரம் வந்து விட்டது. இதில் நிதீஷ்குமாரின் ஐக்கிய ஜனதாதளம் 111 இடங்களிலும், பாஜக 87 இடங்களிலும், லாலுவின் கூட்டணிக்கு 32 இடங்களும், காங்கிரஸ் 6 இடங்களிலும் வென்றுள்ளன.

மாபெரும் வெற்றி-நிதீஷ் மகா அடக்கம்:

மிகப் பெரிய வெற்றியை நோக்கி ஐக்கிய ஜனதாதளம் கூட்டணி சென்று கொண்டிருந்தபோதிலும், அதன் அடையாளம் சற்றும் தெரியவில்லை முதல்வர் நிதீஷ் குமாரின் வீட்டில்.

வீட்டுக்கு வெளியே வழக்கம் போல பாதுகாவலர்கள் உள்ளனர். ஆனால் ஒரு தொண்டர் கூட்டத்தையும் காணோம். வெகுசிலரே வந்திருந்தனர். மேலும் பட்டாசு வெடிப்பது, ஆட்டம் பாட்டம் என எதையுமே காண முடியவில்லை.

வெற்றியை மிக எளிமையாக எதிர்கொண்டு வருகின்றனர் நிதீஷ்குமாரும் அவரது கட்சியினரும்.

அதேசமயம் பாட்னாவில் உள்ள பாஜக தலைமையகத்தில் பட்டாசுகளை வெடித்து அக்கட்சியினர் கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர்.

நிதீஷுக்கு முழுப் பங்கும்-காங்கிரஸ்:

பீகார் சட்டசபைத் தேர்தலில் ஐக்கிய ஜனதாதள கூட்டணிவெற்றி பெற முழுக் காரணமும் நிதீஷ்குமார்தான் என்று கூறியுள்ளது காங்கிரஸ்.

இதுகுறித்து கட்சியின் செய்தித் தொடர்பாளர் ஜெயந்தி நடராஜன் கூறுகையில், இத்தேர்தலில் காங்கிரஸ் தனித்துப் போட்டியிட்டது. நல்ல அடித்தளத்தைப் பெற வேண்டும் என்பதற்காகவே தனித்துப் போட்டியிட்டோம்.

பீகார் தேர்தல் வெற்றிக்கு நிதீஷ்குமார் மட்டுமே காரணம். அவரது தலைமையில் மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு நிலைமை மிகவும் மேம்பட்டுள்ளது.

காங்கிரஸ் கட்சிக்கு கிடைத்துள்ளது மிகப் பெரிய தோல்வி என்றாலும் கூட தனித்துப் போட்டியிட வேண்டும் என்பது தொண்டர்களின் விருப்பம் என்பதால் அதை தலைமை நிறைவேற்றியது. எதிர்காலத்தில்சிறப்பாக செயல்படுவோம் என்ற நம்பிக்கை உள்ளது என்றார் ஜெயந்தி நடராஜன்.

ராகுலுக்கு பெரும் பின்னடைவு:

உ.பியைப் போலவே பீகாரிலும் காங்கிரஸின் செல்வாக்கை உயர்த்த கடுமையாக முயன்று வந்தார் ராகுல் காந்தி. ஆனால் அவரது கணக்கு பீகாரில் பெரும் தப்புக்கணக்காகியுள்ளது.

மேலும், தேர்தல் பிரசாரத்தின்போது நிதீஷ் குமாரை கடுமையாக சாடி அவர் பேசியதும் சுத்தமாக எடுபடாமல் போயுள்ளது. அதேபோல நிதீஷ்குமாரை சோனியா காந்தியும் கடுமையாக விமர்சித்துப் பேசினார். அதுவும் எடுபடவில்லை. பிரதமர் மன்மோகன் சிங்கும் விமர்சித்திருந்தார்.

அதேசமயம், எனது ஆட்சியின்கீழ் இருந்த பீகாருக்கு ஒரு முறை கூட பிரதமர் வந்ததில்லை. பீகாரும் இந்தியாவில்தான் உள்ளது. இந்த மாநிலத்திற்கு ஒரு பிரதமர் வர வேண்டியது கட்டாயமாகும். ஆனால் நமது பிரதமர் பீகாருக்கு வரவே இல்லை. இப்போது தேர்தலுக்காக அவர் வந்துள்ளார். பிரதமர் வந்தாலும்,வராவிட்டாலும் பீகார் முன்னேறும், நான் முன்னேற்றுவேன் என்று நிதீஷ் குமார் செய்த பிரசாரம் மக்கள் மத்தியில் வெகுவாக எடுபட்டுள்ளது முடிவிலிருந்து தெரிகிறது.

மோடி வராததால் பிழைத்தார் நிதீஷ்:

நிதீஷ் குமார் தலைமைக்குக் கிடைத்துள்ள மிகப் பெரிய வெற்றிக்கு இன்னொரு முக்கிய காரணமாக, நரேந்திர மோடியை வர விடாமல் தடுத்தது பார்க்கப்படுகிறது. பிரசாரத்திற்கு மோடி வரவே கூடாது என்று ஆரம்பத்திலேயே உத்தரவு போட்டுவிட்டார் நிதீஷ். இதை ஏற்றே ஆகவேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டது பாஜக என்பது நினைவிருக்கலாம்.

வெள்ளிக்கிழமை பதவியேற்கிறார்:

2வது முறையாக முதல்வராகும் நிதிஷ்குமார் வெள்ளிக்கிழமை முதல்வராகப் பதவியேற்கிறார். அதற்கு முன்பாக இன்று காலை ஆளுநரை நேரில் சந்தித்து தனது அமைச்சரவையின் ராஜினாமா கடிதத்தை ஒப்படைத்தார்.

ஜாதி, மத அரசியல் அடிபட்டுப் போய் விட்டது-நிதிஷ் குமார்:

ஜாதி, மத அரசியலுக்கு இங்கு இடமில்லை என்பதை பீகார் மக்கள் ஆணித்தரமாக நிரூபித்துள்ளனர் என்று கூறியுள்ளார் மாபெரும் வெற்றியை ஈட்டியுள்ள பீகார் முதல்வர் நிதிஷ்குமார்.

பீகார் சட்டசபைத் தேர்தலில் தனது கூட்டணிக்கு மிகப் பெரிய வெற்றியை ஈட்டிக் கொடுத்துள்ள நிலையில் செய்தியாளர்களை இன்று பிற்பகல் சந்தித்தார் நிதிஷ் குமார்.

அப்போது அவர் கூறுகையில், ஜாதி, மத அரசியல் இன்று தோற்றுப் போயுள்ளது. அதற்கு இடமில்லை என்பதை பீகார் மக்கள் நிரூபித்து விட்டனர். வளர்ச்சிக்கே எங்களது வாக்கு என்று அவர்கள் உறுதிபடத் தெரிவித்துள்ளனர். இதற்காக நாங்கள் இன்னும் கடுமையாக உழைப்போம். பெண்கள், மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் என்னை ஆதரித்துள்ளனர்.

பிரதமர் மன்மோகன் சிங் என்னைத் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தார். பீகாரின் வளர்ச்சி உதவ ஒத்துழைப்பேன் என்றும் உறுதியளித்துள்ளார். வளர்ச்சிப் பணிகளில் மக்களையும் இணைத்து பீகாரை மேலும் வளப்படுத்த தீவிரமாக உழைப்பேன் என்றார் நிதிஷ் குமார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+