போர்க்குற்றம்: அச்சமின்றி ஆதாரங்களை அனுப்புங்கள் ! - பழ நெடுமாறன்
மதுரை: இலங்கையில் இறுதி யுத்தத்தின்போது இலங்கை ராணுவம் நடத்திய போர்க்குற்றங்கள் குறித்த ஆதாரங்களை வைத்திருப்போர், எந்த அச்சமும் இல்லாமல் அவற்றை ஐநா விசாரணைக் குழுவுக்கு அனுப்ப வேண்டும் என்று பழ நெடுமாறன் கேட்டுக் கொண்டார்.
உலக தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் மதுரையில் செய்தியாளர்களிடம் பேசுகையில், "இலங்கை பிரச்சனை குறித்து ஐ.நா.சபை குழு தனது விசாரணையை தொடங்கி விட்டது. வருகிற 15-ந்தேதிக்குள் இந்த விசாரணை குழுவிற்கு தங்கள் வசமுள்ள ஆதாரங்களையும், ஆவணங்களையும் யார் வேண்டுமானாலும் அனுப்பி வைக்கலாம்.
முள்ளிவாய்க்கால் போரின் போது பாதிக்கப்பட்ட குடும்பங்களை சேர்ந்த ஈழத் தமிழர்கள் பலர் தமிழ் நாட்டுக்கும் தப்பி வந்துள்ளனர். அவர்களை எல்லாம் அணுகி அவர்களிடமிருந்து புகார்களையும், ஆவணங்களையும் திரட்டி ஐ.நா.விசாரணை குழுவிற்கு அனுப்ப வேண்டியது நமது கடமை.
புகார் செய்தால் தங்களுக்கு ஏதேனும் ஆபத்து வருமா என்று அஞ்சக்கூடாது. யாருக்கும் எந்தவிதமான ஆபத்தும் வராது. அனுப்பப்படுகின்ற புகார்கள் ரகசியமாக வைத்து கொள்வதாக ஐ.நா.சபை அறிவித்துள்ளது. எனவே வருகிற 15-ந்தேதிக்குள் தங்களுடைய புகார்களை ஆங்கிலத்தில் மின் அஞ்சல் மூலம் [email protected] என்ற முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
இசமீபத்தில் பிரிட்டனில் ராஜபக்சே ஒரு போர் குற்றவாளி என்று அழுத்தம் திருத்தமாக அறிவித்து, அங்கிருந்து விரட்டியடித்திருக்கிறார்கள் அந்த நாட்டு மக்கள்.
உலக தமிழர்களின் மானத்தைக் காத்த பிரிட்டன் தமிழர்களுக்கு எனது பாராட்டுகளையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன். அடுத்து ராஜபக்சேவை சர்வதேச நீதிமன்றத்தில் முன்நிறுத்தும் வரை உலக தமிழர்கள் ஓயக்கூடாது. இது உலக தமிழர்களின் தலையாய கடமை," என்றார்.












Click it and Unblock the Notifications