Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தலித் கிறிஸ்தவர்களின் சலுகைகளைப் பெற போராடவும் தயார்-கருணாநிதி

Subscribe to Oneindia Tamil

சென்னை: கிறிஸ்துவ மக்களில், தாழ்த்தப்பட்ட கிறிஸ்துவர்கள்- அவர்கள் மதம் மாறியிருந்தாலும்கூட, தாழ்த்தப்பட்டவர்களுக்குரிய எல்லா உரிமைகளையும், சலுகைகளை பெற வேண்டும் என்று கேட்டிருப்பது நியாயமானது. இதை நாடாளுமன்றத்தில் எடுத்துச் சொல்லி, இந்தக் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டிய பொறுப்பை திமுக ஏற்றுக் கொள்ளும். காங்கிரஸ் கட்சியின் துணையோடு இதை நிறைவேற்றி வைப்போம். தேவைப்பட்டால் போராடவும் தயங்க மாட்டேன் என்று முதல்வர் கருணாநிதி கூறினார்.

கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கம் சார்பில் அனைத்து திருச்சபைகள் ஒருங்கிணைந்து நடத்திய கிறிஸ்துமஸ் பெருவிழா சென்னையில் நடந்தது. இதில் முதல்வர் கருணாநிதி தலைமை தாங்கினார்.

நிகழ்ச்சியில் முதல்வர் கருணாநிதி பேசுகையில், தமிழகத்திலே வாழ்கின்ற கிறித்தவப் பெருமக்கள் அனைவருக்கும் என்னுடைய கிறிஸ்துமஸ் திருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன். இந்த விழா, கிறிஸ்துமஸ் பெருவிழாவா அல்லது தமிழகத்தில் வாழுகின்ற கிறிஸ்துவ பெருமக்கள் நடத்துகின்ற கோரிக்கை மாநாடா என்று நானும் வியப்புறுகிற வகையில், இந்த நிகழ்ச்சி எழுச்சியோடு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

சில கோரிக்கைகளை இங்கே வைத்திருக்கிறீர்கள். அந்தக் கோரிக்கைகளை நாங்கள் அலட்சியப்படுத்துபவர்கள் அல்ல. இந்த சமுதாயத்தோடு இன்று நேற்றல்ல எங்களுடைய தொடர்பு நீண்ட காலமானது. நான் சார்ந்துள்ள அரசியல் இயக்கம் ஒரு கட்சி மாத்திரமல்ல, ஒரு இயக்கம். அந்த இயக்கம் சமுதாய இயக்கம். அந்த சமுதாய இயக்கத்தில் எங்களையெல்லாம் வழி நடத்திச் சென்றவர்கள் பெரும்பகுதியினர் கிறிஸ்துவ சமுதாயத்துப் பெருமக்கள்.

ஏ.டி.பன்னீர்செல்வம்- இந்த சமுதாயத்தினுடைய பெருமகனார். அவர் சட்டப்பேரவையிலே எதிர்க்கட்சி வரிசையிலே அமர்ந்திருந்தபோது ராஜாஜி முதல்வர். தமிழகத்தில் இந்தி ஆதிக்க எதிர்ப்புப் போராட்டத்தை பெரியார் தலைமையில், அண்ணா தளபதியாக இருந்து நடத்தினார். அப்பொழுது அந்த இயக்கத்திற்கு உறுதுணையாக பெரும் புலவர்களெல்லாம் அணிவகுத்து வந்தார்கள். அப்படி வந்தவர்களில் ஒருவர் நாவலர் சோமசுந்தர பாரதியார்.

இந்த எதிர்ப்பை சகித்துக் கொள்ள முடியாத ராஜாஜி, தமிழ்நாட்டில் இந்தி ஆதிக்கத்தை எதிர்ப்போம் என்று சொல்கின்றவர்கள் இரண்டே பேர்தான். ஒருவர் ராமசாமி நாயக்கர். இன்னொருவர் சோமசுந்தர பாரதியார் என்று கேலியாகச் சொன்னார். சட்டென எழுந்தார் ஏ.டி.பன்னீர் செல்வம்.

எதிர்ப்பது இரண்டு பேர் என்று சொன்னீர்கள். உண்மை. எதிர்ப்பவர்கள் நாங்கள் இரண்டு பேர். ஆனால், இந்தியைக் கொண்டு வருபவர்கள் நீங்கள் ஒருவர்தான். எனவே, எதிர்ப்புதான் மெஜாரிட்டி. ஆகவே இந்தி ஆதிக்கத்தை கைவிடுங்கள் என்று சொன்னவர் ஏ.டி.பன்னீர்செல்வம். கிறிஸ்துவ சமுதாயத்தினுடைய தோன்றல்களிலே ஒருவராக விளங்கி இந்தியாவின் ஆலோசகராக லண்டன் மாநகரத்துக்குச் செல்லும்போது ஓமான் கடலில் அவர் சென்ற விமானம் விழுந்து, அதன் காரணமாக மறைந்தவர்.

ஒன்றைச் சொன்னீர்கள். "இந்தியாவையே, மத்திய அரசையே ஆட்டி வைப்பவன்'' என்றெல்லாம் சொன்னீர்கள். நான் யாரையும் ஆட்டி வைப்பவனும் அல்ல; ஆடுபவனும் அல்ல. நீங்கள் என்னை ஆட்டி வைக்கிற காரணத்தால், நான் ஆடத் தயாராக இருக்கிறேன். உங்கள் கோரிக்கைக்கு நான் தருகின்ற கலை உணர்வோடு கூடிய பதில் இதுதான். "கலைஞர்'' அல்லவா? ஆகவே, கலையுணர்வோடு இந்தப் பதிலைத் தருகிறேன்.

தமிழகத்தில் கிறிஸ்துவப் போதகர்களால், அறிஞர்களால் எத்தகைய பெருமை தமிழர்களுக்கு மாத்திரமல்; தமிழ் மொழிக்கே ஏற்பட்டது என்பதை ஸ்டாலின் இங்கே எடுத்துரைத்தார். அத்தகைய கிறிஸ்தவப் பெரியார்கள் ஆற்றிய தொண்டினை நன்றி உணர்வோடு நினைக்கின்ற இயக்கம் இந்த இயக்கம்.

இந்த இயக்கத்தினுடைய தலைவராக இருந்து மறைந்த எங்கள் அண்ணா- அவர் முன்னின்று நடத்திய உலகத் தமிழ் மாநாடு- இரண்டாவது மாநாடு. அந்த மாநாட்டில் சென்னைக் கடற்கரையிலே கிறிஸ்தவப் பெரியார்களுடைய சிலைகளெல்லாம் வைக்கப்பட்டு, இன்றைக்கும் அவைகள் நம்முடைய கண்களுக்கும், கருத்துக்கும் விருந்தாக அமைந்திருப்பதை நாம் காணுகின்றோம்.

கிறிஸ்துவ மக்களில், தாழ்த்தப்பட்ட கிறிஸ்துவர்கள்- அவர்கள் மதம் மாறியிருந்தாலும்கூட, தாழ்த்தப்பட்டவர்களுக்குரிய எல்லா உரிமைகளையும், சலுகைகளை பெற வேண்டும் என்று கேட்டிருப்பது நியாயமானது- யாராலும் மறுக்க முடியாதது. இதை நாடாளுமன்றத்தில் எடுத்துச் சொல்லி, இந்தக் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டிய பொறுப்பை திமுக ஏற்றுக் கொள்ளும். நம்பிக்கையோடு சொல்கிறேன்- காங்கிரஸ் கட்சியின் துணையோடு இதை நிறைவேற்றி வைப்போம்.

எல்லாவற்றையும் விட, இந்த மாமன்றத்தில் இன்றைக்கு என்னுடைய இதயத்தைப் பூரிக்கச் செய்தது நன்றி என்ற வார்த்தைதான். நான் தேடித்தேடி அலைகிறேன் தமிழகத்திலே, பல இடங்களில்- இந்த வார்த்தை கிடைக்காதா, கிடைக்காதா என்று. "இங்கே வா! அதைத் தருவதற்கு நாங்கள் இருக்கிறோம்'' என்று இந்த மாமன்றத்தில் அமர்ந்திருக்கின்ற பெரியவர்கள்- அத்தனை பேரும் அதைத் தருவதற்காகவே என்னை அழைத்து, அதை மொத்தமாகத் தந்திருக்கிறார்கள்.

இது வார்த்தை அளவோடு போகாது. நிச்சயமாக நன்றியுணர்வாக, ஆக்கபூர்வமாக ஆகும் என்ற நம்பிக்கையோடு நான் கலந்து கொண்டிருக்கிறேன். எப்படி யாரிடத்திலே இதைச் சொல்ல வேண்டுமோ, எடுத்து வைக்கவேண்டுமோ அதை நீங்கள் எடுத்து வைத்திருக்கின்றீர்கள். நான் இதை யார் வாயிலாகச் செய்ய முடியுமோ, அவர்கள் வாயிலாகச் செய்வதற்கு யோசித்துக் கொண்டிருக்கிறேன்- நிச்சயமாக செய்வேன்; உறுதி அளிக்கின்றேன்.

என்னைப் பொறுத்தவரையில், நான் தமிழர்களுக்குத் தேவையான, கிறிஸ்துவ, இஸ்லாமிய மக்களுக்குத் தேவையான- பொதுவாக சிறுபான்மையினத்தவர்களுக்குத் தேவையான எல்லா காரியங்களையும், எல்லா நன்மைகளையும் பெற்றுத்தர என்னையே நான் ஈடுகொடுக்கத் தயாராக இருப்பவன். போராடிப் பெற வேண்டுமானால், அதற்கும் தயங்காதவன்.

ஒரு கோரிக்கையைப் பெற தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்தவனுக்கு- அதையெல்லாம் விட மிகப்பெரிய கோரிக்கையான ஒரு சமுதாயத்தினுடைய எதிர்கால வளர்ச்சிக்காக வைக்கப்பட்டுள்ள கோரிக்கையை நிறைவேற்ற; எந்தத் தியாகத்திற்கும் தயாராக இருப்பேன்.

அரசுப் பொறுப்பிலே இருந்தால், அதிகாரத்தைப் பயன்படுத்தி அதை நிறைவேற்ற வேண்டும் என்று நினைப்பவன். அரசுப் பொறுப்பிலே இருந்தாலும்கூட, இன்னொரு அரசின் தயவை நாட வேண்டியிருந்தால், அதற்கேற்ற வகையிலே நம்முடைய அறிவைப் பயன்படுத்தி, அணுகுமுறையைப் பயன்படுத்தி, நிலைமைகளை விளக்கி, அதை நிறைவேற்றுகின்ற நினைப்பு உடையவன். இரண்டிலும் முடியாவிட்டால், கோரிக்கைக்காக ஒரு போராட்டம் நடத்தித்தான் தீர வேண்டுமென்றால், அந்தப் போராட்டத்திற்கும் நான் தயாராக இருப்பவன் என்றார் முதல்வர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+