இந்தியா ஐ.நா. பாதுகாப்பு சபையின் தலைவர் பொறுப்பை 2 முறை வகிக்கும் வாய்ப்பு
நியூயார்க்: ஐ.நா. பாதுகாப்பு சபையின் தலைவர் பொறுப்பில் 2 முறை அமரும் வாய்ப்பு இந்தியாவுக்கு கை கூடியுள்ளது.
உலக அரங்கில் மிகவும் பலம் வாய்ந்த அரசியல் மற்றும் பொருளாதார சக்தியாக உயர்ந்து வருகிறது இந்தியா. தற்போது நீண்ட இடைவெளிக்குப் பின்னர் ஐ.நா. பாதுகாப்பு சபையின் உறுப்பினராகியுள்ளது. 2 ஆண்டுகள் இந்தப் பொறுப்பில் இந்தியா இருக்கும்.
இந்த நிலையில் இந்த இரண்டு ஆண்டு கால பதவிக்காலத்தில் 2 முறை தலைவர் பொறுப்பை வகிக்கும் வாய்ப்பு இந்தியாவுக்கு உருவாகியுள்ளது.
முதலில் வருகிற ஆகஸ்ட் மாதத்திலும், பின்னர் 2012ம் ஆண்டு நவம்பர் மாதத்திலும் இந்தியா தலைமைப் பொறுப்பை வகிக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
ஐ.நா. பாதுகாப்பு சபை தலைவர் பதவியை உறுப்பு நாடுகள் சுழற்சி முறையில் வகிப்பது வழக்கம். அதாவது மாதந்தோறும் ஆங்கில அகர வரிசைப்படி உறுப்பு நாடுகள் தலைமைப் பொறுப்பை வகிப்பார்கள். அதன்படி ஒவ்வொரு உறுப்பு நாடும் ஒரு மாதத்திற்குத் தலைவராக இருக்கும்.
தற்போது பாதுகாப்பு சபையின் தலைமைப் பொறுப்புக்கான நாடுகளின் பட்டியலை ஐ.நா. பாதுகாப்பு சபை வெளியிட்டுள்ஏளது.
அதன்படி வருகிற ஆகஸ்ட் மாத தலைமைப் பொறுப்பு இந்தியாவுக்கு வருகிறது. அந்த மாதத்தில் நடைபெறும் கூட்டங்களுக்கு இந்தியாதான் தலைமை தாங்கும்.
ஜூலை மாதத்தில் ஜெர்மனியும், செப்டம்பர் மாதம் லெபனானும் தலைமைப் பொறுப்பில் இருப்பார்கள். தற்போது தலைமைப் பொறுப்பில் இருக்கும் நாடு போஸ்னியா ஹெர்ஸகோவினாவாகும். பிப்ரவரி மாதப் பொறுப்பை பிரேசில் ஏற்கவுள்ளது.
இதையடுத்து 2012ம் ஆண்டு நவம்பர் மாதத்திலும் இந்தியாவுக்குத் தலைமைப் பொறுப்பு தேடி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications