ஜெ எழுதிய கடிதங்களை மீண்டும் கொட்டை எழுத்தில் பிரசுரிக்க வேண்டுமா?-கருணாநிதி

2007ல் அப்போதைய மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ஆ.ராசாவைப் பாராட்டி முதல்வர் கருணாநிதிக்கு தொழிலதிபர் டாடா ஒரு கடிதம் எழுதியதாகவும், இதை நிரா ராடியா தான் நேரடியாக கருணாநிதியிடம் ஒப்படைத்தார் என்றும், இதன் அடிப்படையில் கருணாநிதி, அவரது துணைவியார் ராசாத்தி அம்மாள், மகள் கனிமொழி ஆகியோரிடம் சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்றும் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா அறிக்கை வெளியிட்டிருந்தார்.
இது குறித்து கருணாநிதி வெளியிட்டுள்ள கேள்வி பதில் அறிக்கையில்,
கேள்வி: உங்களுக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்ட தங்க வாளும், கிரீடமும் அரசு கருவூலத்திற்கு தானே போக வேண்டும் என்று "தினமலர்'' நாளிதழில் கேட்டிருக்கிறார்களே?
பதில்: தென் சென்னை மாவட்ட திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் நடைபெற்ற திராவிட முன்னேற்ற கழக பொதுக்குழு தீர்மானங்களை விளக்குகின்ற கூட்டத்தில், தென் சென்னை மாவட்ட திராவிட முன்னேற்ற கழக செயலாளர், தம்பி ஜெ.அன்பழகனால் தி.மு.கழகத்தின் தலைவர் என்ற முறையில் எனக்கு வழங்கப்பட்டவை தான் அந்த தங்க வாளும், தங்க கிரீடமும். அதனை நான் எப்படி வேண்டுமென்றாலும் பயன்படுத்திக்கொண்டிருக்கலாம். நான் அவ்வாறு செய்யாமல் தமிழுக்காகவும், தமிழர்களுக்காகவும் வாழ்நாள் எல்லாம் பாடுபட்ட ஒரு தலைவரின் குடும்பத்தினருக்காக அது பயன்பட வேண்டுமென்று கருதியதால், அதனை எனக்கு வழங்கிய தென்சென்னை மாவட்ட தி.மு. கழக செயலாளரிடம் கூறி விட்டு, அதனையும் தனியாக கொண்டு போய் விற்று விடாமல், சிலம்பு செல்வருக்காக நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியிலே அதனை ஏலம் விட்டு, அந்த தொகையினை அந்த குடும்பத்தினருக்காக வழங்கியிருக்கிறேன்.
தமிழுக்காக காலமெல்லாம் குரல் கொடுத்த ஒரு தமிழரின் குடும்பத்திற்கு செய்ததைக் கூட அவர்களால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. அரசு விழாக்களில் முதலவர் என்ற முறையில் எனக்கு வழங்கப்படும் பரிசுகள் எல்லாம் அரசிடம்தான் ஒப்படைக்கப்பட்டுள்ளன. அதுபோலவே திமுக சார்பில் எனக்கு வழங்கப்பட்ட பொருள்களையெல்லாம்கூட அண்ணா அறிவாலயத்திலே உள்ள கருவூலத்திலேதான் ஒப்படைத்துள்ளேன்.
"தினமலர்'' கேள்வி கேட்க வேண்டியதெல்லாம், வெளிநாட்டிலிருந்து வந்த ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள காசோலைகளை யாரிடமிருந்து வந்தது என்றே அறிவிக்காமல், அதனை ஜெயலலிதா தனது பெயரிலே வங்கியிலே இருப்பு வைத்துக்கொண்டாரே, அவரைப் பார்த்துத்தான் இந்த கேள்வியைக் கேட்க வேண்டுமே தவிர, என்னிடமல்ல.
கேள்வி: ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கையில், ரத்தன் டாட்டா உங்களுக்கு கடிதம் எழுதி, அந்த கடிதம் நீரா ராடியாவால் உங்களிடம் நேரடியாக அளிக்கப்பட்டிருக்கிறது என்று கூறியிருக்கிறாரே?
பதில்: அப்படி எந்த கடிதமும் எனக்கு வரவில்லை. யாரும் அப்படியொரு கடிதத்தை என்னிடம் நேராக அளிக்கவும் இல்லை.
ஆனால் ஜெயலலிதா யார் யாருக்கு கடிதம் எழுதினார், யார் யார் அவருக்கு கடிதம் எழுதினார்கள் என்ற விவரங்கள் எல்லாம் ஆதாரத்துடன் ஏற்கனவே "முரசொலி'' இதழிலே வெளிவந்துள்ளது. ஜெயலலிதாவை அரசியலுக்கு கொண்டு வந்த எம்.ஜி.ஆர். உயிரோடு இருந்தபோதே, அவர் முதலவராக இருக்க தகுதியில்லை என்றும், எனவே, தன்னை முதலவராக ஆக்க வேண்டுமென்றும், அப்போது பிரதமராக இருந்த ராஜீவ் காந்திக்கு ஜெயலலிதா தன் கைப்பட எழுதிய கடிதம் "மக்கள் குரல்'' நாளேட்டில் கொட்டை எழுத்துகளில் வெளிவந்தது. ஜெயலலிதா விரும்பினால் மீண்டும் அதனைப் பிரசுரிக்கலாம்.
கேள்வி: டாக்டர் ராமதாஸ் பால் உற்பத்தியாளர்களின் கோரிக்கை நியாயமானது என்றும், பால் விற்பனை விலையினை அரசு உயர்த்தக் கூடாதென்றும், அதே நேரத்தில் கொள்முதல் விலையினை உயர்த்த வேண்டுமென்றும் சொல்லியிருக்கிறாரே?
பதில்: அது அவரது சொந்த கருத்து. ஆனால் 2001-2006 வரையான அ.தி.மு.க. ஆட்சியில் ஐந்தாண்டு காலத்தில் பசும்பாலுக்கு லிட்டர் ஒன்றுக்கு 1 ரூபாய் 50 காசுகளும், எருமைப்பாலுக்கு லிட்டர் ஒன்றுக்கு 1 ரூபாய் 56 காசுகளும் மட்டுமே கொள்முதல் விலை உயர்த்தப்பட்டது. ஆனால் 2006 முதல் இதுவரை நான்கரை ஆண்டு கால திராவிட முன்னேற்ற கழக ஆட்சியில் பசும்பாலுக்கு லிட்டர் ஒன்றுக்கு 6 ரூபாய் 60 காசுகளும், எருமைப்பாலுக்கு லிட்டர் ஒன்றுக்கு 12 ரூபாய் 70 காசுகளும் கொள்முதல் விலை உயர்த்தப்பட்டுள்ளது.
அ.தி.மு.க. ஆட்சியில் இரண்டு முறை மட்டும் கொள்முதல் விலை உயர்த்தப்பட்டது. ஆனால் திராவிட முன்னேற்ற கழக ஆட்சியில் நான்கு முறை கொள்முதல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த ஜனவரி மாதத்தில் கூட பசும்பாலுக்கு லிட்டர் ஒன்றுக்கு 1 ரூபாய் 10 காசுகளும், எருமைப்பாலுக்கு லிட்டர் ஒன்றுக்கு 2 ரூபாய் 20 காசுகளும் உயர்த்தப்பட்டுள்ளன.
ஆனால் அப்போது விற்பனை விலையை உயர்த்தவில்லை. இன்னும் சொல்லப்போனால் பாலின் கொள்முதல் விலையை மட்டும் இவ்வாறு உயர்த்திக்கொண்டே போனால், அந்தச் சுமை அந்த பாலினை வாங்குபவர்கள் மீது தானே விழும். அதைப்பற்றி கவலையில்லை என்று டாக்டர் கருதுகிறாரா? பால் கொள்முதல் விலையை உயர்த்துவதால் ஏற்படும் கூடுதல் செலவை அரசே மானியமாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் டாக்டர் ராமதாஸ் சொல்லியிருக்கிறார்.
இந்த ஆண்டு இப்போதே உணவு பொருள்களுக்காக 4,000 கோடி ரூபாய் அரசின் சார்பில் மானியமாக தரப்படுகிறது. இதற்கு மேலும் மேலும் மானியங்களை ஏற்றிக்கொண்டே போனால் அரசை நடத்த முடியுமா என்பதையும் எண்ணிப்பார்க்க வேண்டும்.
கேள்வி: காவல் துறை அதிகாரிகள் பெருமளவில் திடீரென்று மாற்றப்பட்டிருப்பதாக பத்திரிகைகள் பரபரப்பாக செய்திகள் வெளியிட்டிருக்கின்றனவே?
பதில்: காவல் துறை அதிகாரிகளின் பதவி உயர்வு என்பது ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் பொதுவாக வழங்கப்படுவது உண்டு. இந்த ஆண்டு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் என்ற நிலையிலிருந்து காவல் துறை தலைமை இயக்குநர் வரை 39 அதிகாரிகளுக்கு ஒரே நேரத்தில் பதவி உயர்வுகள் வழங்கப்பட்டுள்ளன. அவ்வாறு பதவி உயர்வு பெற்றவர்களுக்கு புதிய பதவி பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன. அவர்கள் பதவி உயர்வு பெற்று செல்கின்ற நேரத்தில், அவர்களின் இடத்தில் மற்றவர்களைக்கொண்டு நிரப்பிட மாறுதல் செய்வது அவசியமாகிறது. அந்த வகையில்தான் இந்த ஆண்டு இந்த அளவிற்கு மாறுதல் செய்ய வேண்டியதாயிற்று.
இதுதவிர, தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளின்படி மூன்றாண்டுகளுக்கு மேல் ஒரேயிடத்தில் பணிபுரிந்த அதிகாரிகளை புதிய இடங்களுக்கு மாற்ற வேண்டும் என்பதாலும் காவல் துறையில் இந்த அளவில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
கேள்வி: ஜெயலலிதாவுக்கு ஆதரவாக குரல் கொடுப்பவர்களில் தா.பாண்டியன் முன்னணியில் இருக்கிறாரே?
பதில்: வார இதழ் ஒன்றுக்கு பாண்டியன் பேட்டி கொடுத்துள்ளார். அதிலே "தேர்தல் நெருங்குகிறது. ஆனால், எதிர்க்கட்சிகள் அனைத்தும் சேர்ந்து ஒரு கண்டன பொதுக்கூட்டத்திற்குக்கூட உங்கள் அணியின் தலைவி ஜெயலலிதாவை அழைக்க முடியவில்லையே, பிறகு எப்படி வெற்றிபெற்று ஆட்சி அமைக்க முடியும்?'' என்று கேள்வி கேட்டதற்கு, தா.பாண்டியன், "ஒவ்வொருவருக்கும் சில குணங்கள் இருக்கிறது. அவர்கள் கட்சி சம்பந்தப்பட்ட விஷயத்தை நீங்கள் அவர்களிடம்தான் கேட்க வேண்டும். எங்களுக்கும், அதற்கும் எந்த சம்பந்தமுமில்லை. உத்தரவு போடுவதற்கு நான் என்ன ராணுவ ஜெனரலா?'' என்று பதில் அளித்திருக்கிறார். அவருடைய நிலையை அவரது இந்த பதிலே தெளிவாக்குகிறது அல்லவா? என்று கூறியுள்ளார் கருணாநிதி.












Click it and Unblock the Notifications