போராட்டம் வாபஸ்: பால் உற்பத்தியாளர்களுடன் நாளை பேச்சுவார்த்தை, வழக்குகள் வாபஸ்-கருணாநிதி

Subscribe to Oneindia Tamil

சென்னை: பால் கொள்முதல் விலையை உயர்த்தக் கோரி போராட்டம் நடத்தி வரும் பால் உற்பத்தியாளர்களுன் நாளை அமைச்சர்கள் பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என்றும், அவர்கள் மீது போடப்பட்ட வழக்குகள் நல்லெண்ண அடிப்படையில் வாபஸ் பெறப்படுவதாகவும் முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார்.

இது குறித்து முதல்வர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தமிழகத்தில் பால் கொள் முதல் விலையை உயர்த்தக் கோரி பால் உற்பத்தியாளர்களில் ஒரு சாரார் கடந்த ஏழு நாட்களாகப் போராட்டம் நடத்தி வருகிறார்கள். சென்ற திங்களும், இதே போல பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டுமென்று கோரி போராட்டம் ஒன்றினைத் தொடங்கப்போவதாக அறிவித்தவுடன் தமிழக அரசின் சார்பில் துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அவர்களை எல்லாம் அழைத்துப் பேசப்பட்டது.

அந்தப் பேச்சின் முடிவாகத் தான் பசும்பாலுக்கு லிட்டர் ஒன்றுக்கு ஒரு ரூபாய் பத்து காசு என்றும், எருமைப் பாலுக்கு லிட்டர் ஒன்றுக்கு இரண்டு ரூபாய் இருபது காசு என்றும் கொள்முதல் விலை உயர்த்தப்பட்டது. ஆனாலும் அந்த நேரத்தில் நுகர்வோர் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக பாலின் விற்பனை விலையை அரசு உயர்த்தவில்லை.

ஆனாலும் அதற்குப் பிறகு மீண்டும் பால் உற்பத்தியாளர்கள் பாலின் கொள்முதல் விலையினை மேலும் உயர்த்த வேண்டுமென்று ஒரு சாரார் ஏழு நாட்களாக போராட்டம் நடத்தி வருகிறார்கள். ஆனால் இதைப் பற்றிய நல்ல எண்ணத்தோடு ஒருசில நாளேடுகளும், ஒரு சில அரசியல் கட்சியின் தலைவர்களும், பால் கொள்முதல் விலை குறித்து, அரசு அவர்களை அழைத்து இது வரை பேசவில்லை என்பதைப் போல கருதிக் கொண்டு அழைத்துப் பேசுவதில் என்ன தவறு என்று கேட்கிறார்கள்.

கடந்த திங்கள் அவர்களை அழைத்துப் பேசித்தான் கொள்முதல் விலை உயர்த்தப்பட்டது. மீண்டும் அவர்களை அழைத்துப் பேசுவதைப் பற்றி அரசுக்கு எந்த கவுரவப் பிரச்சினையும் இல்லை. ஆனால் அவர்கள் திடீரென்று வேலை நிறுத்தப் போராட்டத்தை அறிவித்து- பாலை புனிதமாகக் கருதிட வேண்டிய அவர்களே, ஒரு சில லிட்டர் பாலைக் கொண்டு போய் சாலையிலே ஊற்றி, அதனைப் புகைப்படமாகவும் எடுக்கச் செய்து ஒரு சில ஏடுகளிலும், தொலைக்காட்சிகள் மூலமாகவும் செய்தியாக்கியது தான் வேதனைக்குரியது.

எது எப்படியிருந்த போதிலும் இந்த அரசைப் பொறுத்தவரையில் நியாயமான கோரிக்கைகளில், மக்கள் பிரச்சனைகளைத் தீர்ப்பதில் மிகுந்த அக்கறையுடனும் பரிவுடனும் செயல்பட்டு வருகிறது. இன்னும் சொல்லப் போனால் நான் நேற்றே குறிப்பிட்டுள்ளதைப் போல கடந்த நான்கரை ஆண்டுகளில் இதற்கு முன்பு எந்தக் காலத்திலும் இல்லாத அளவிற்கு நான்கு முறை கொள்முதல் விலை உயர்த்தப்பட்டுள்ளது.

எனினும் மீண்டும் அவர்களை அழைத்துப் பேச வேண்டுமென்ற யோசனையை அரசு ஏற்றுக் கொண்டு நாளை (15ம் தேதி) தலைமைச் செயலகத்தில், மாலை 4 மணியளவில் அமைச்சர்கள் ஆற்காடு வீராசாமி, பொன்முடி, மதிவாணன் ஆகியோர் முன்னிலையில் போராட்டக் குழுவினருடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு அரசு ஏற்பாடு செய்துள்ளது.

இதுவரை போராட்டம் நடத்தியவர்கள் மீது போடப்பட்டிருந்த வழக்கினை நல்லெண்ண அடிப்படையில் திரும்பப் பெறவும் முடிவு செய்துள்ளதுடன், போராட்டக் குழுவினரும் உடனடியாக தங்கள் போராட்டத்தை திரும்பப் பெற்றுக் கொண்டு பேச்சுவார்த்தைக்கு வருமாறு கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

போராட்டம் தாற்காலிகமாக வாபஸ்:

இந் நிலையில் முதல்வர் கருணாநிதியின் அழைப்பை ஏற்று கடந்த 8 நாட்களாக நடத்தி வந்த போராட்டத்தை வாபஸ் பெறுவதாக, பால் உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர் செங்கோட்டுவேல் அறிவித்துள்ளார்.மேலும் நாளை நடக்கும் பேச்சுவார்த்தையில் பங்கேற்பதாகவவும் தெரிவித்துள்ளார்.

தட்டுப்பாடு... அரசு மீது ஜெயலலிதா புகார்:

இந் நிலையில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில், 'மின்சாரத் தட்டுப்பாடு", 'பெட்ரோல் தட்டுப்பாடு," 'எரிவாயு தட்டுப்பாடு", 'உரத் தட்டுப்பாடு", 'குடிநீர்த் தட்டுப்பாடு" என்ற வரிசையில் தற்போது பால் தட்டுப்பாட்டினை உருவாக்கி தட்டுப்பாடுகளை உருவாக்கும் அரசாக தி.மு.க. அரசு விளங்குகிறது.

தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள ஆவின் நிறுவனத்திற்கு பால் வழங்கும் பால் உற்பத்தியாளர்களின் போராட்டம் காரணமாக தமிழகம் முழுவதும் ஆவின் பாலுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. கால்நடை தீவன விலை உயர்வு, வாகனச் செலவு அதிகரிப்பு ஆகியவற்றை கணக்கில் எடுத்துக் கொண்டு பார்க்கும் போது, பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் என்ற பால் உற்பத்தியாளர்களின் கோரிக்கையில் நியாயம் இருப்பதாகவே தெரிகிறது.

பால் உற்பத்தியாளர்களை அழைத்து, பேச்சுவார்த்தை நடத்திப் பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வர வேண்டிய தி.மு.க. அரசு, காவல் துறை, வருவாய்த் துறை மற்றும் கூட்டுறவுத் துறை அதிகாரிகளை தனியார் பால் கொள்முதல் நிலையங்களுக்கு அனுப்பி அவர்களிடம் உள்ள பாலை ஆவினுக்கு வழங்குமாறு மிரட்டி வருவதாக கூறப்படுகிறது. இது தவிர, வெள்ளக்கோயில், மூலனூர், முத்தூர் போன்ற பகுதிகளில் தனியாருக்கு பால் கொண்டு சென்ற வாகனங்களை அரசு அதிகாரிகள் வழி மறித்து ஆவின் லாரிகளில் ஏற்றியதாகவும், மிரட்டலின் உச்சகட்டமாக தமிழகம் முழுவதும் 56 தனியார் கொள்முதல் நிறுவனங்களுக்கு அரசு சீல் வைத்துள்ளதாகவும் செய்திகள் வருகின்றன.

பால் உற்பத்தியாளர்களுக்கு கூடுதல் விலையை கொடுக்க முன் வராத அரசு, நிலைமையை சமாளிக்க கர்நாடகா, மகாராஷ்டிரா போன்ற வெளி மாநிலங்களிலிருந்து கூடுதல் விலை கொடுத்து பாலை கொள்முதல் செய்து வருவதாக கூறப்படுகிறது. இதிலிருந்து அரசிடம் பணம் இருந்தும், அதை பால் உற்பத்தியாளர்களுக்கு கொடுக்க மனமில்லை என்பது தெரிகிறது.

அரசின் அத்துமீறிய நடவடிக்கை காரணமாக, ஆவின் பால் மட்டுமல்லாமல் அனைத்துப் பாலுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பொதுமக்கள் பால் கிடைக்காமல் திண்டாடிக் கொண்டு இருக்கின்றனர். பொதுமக்களையும், பால் உற்பத்தியாளர்களையும் பாதிப்படைய வைத்துள்ள தி.மு.க அரசுக்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தற்போது நிலவும் பால் தட்டுப்பாட்டினைப் போக்கிடும் வகையில், உடனடியாக பால் உற்பத்தியாளர்களை அழைத்துப் பேசி, அவர்களுடைய நியாயமான கோரிக்கையினை ஏற்று, பாலின் விலையை உயர்த்தாமல், பால் கொள்முதல் விலையை உயர்த்திடவும், கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியும் தொழிலாளர்களின் கோரிக்கையை நிறைவேற்றிடவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்வர் கருணாநிதியை கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+