புதிய தமிழகம்..இ.கு.கட்சியுடன் முதல் தொகுதி உடன்பாடு-தலித் ஓட்டுகளுக்கு ஜெ முதல் குறி!

Subscribe to Oneindia Tamil

Jayalalitha and Krishnasamy
சென்னை: புதிய தமிழகம் மற்றும் இந்திய குடியரசுக் கட்சி ஆகியவற்றுக்கு முதலில் தொகுதிகளைப் பங்கிட்டுத் தந்துள்ளதன் மூலம் தலித் சமுதாய மக்களின் ஓட்டுக்களைக் கவர அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா தீவிரமாக உள்ளது தெரிகிறது.

எம்ஜிஆர் காலத்தில் அதிமுகவின் ஓட்டு வங்கியாக விளங்கிய தலித் சமுதாயத்தினரின் வாக்குகளை ஜெயலலிதாவின் தலைமையில், அதிமுகவை விட்டு சிதறின.

வட மாவட்டங்களில் விடுதலைச் சிறுத்தைகளின் வளர்ச்சி அதிமுகவின் தலித் வாக்கு வங்கியை சிதைத்தது. இந் நிலையில் அருந்ததியின மக்களுக்கு தனி இட ஒதுக்கீடு வழங்கி, அந்த சமூக மக்களை தன் வசம் ஈர்த்துள்ளது திமுக.

திமுகவும் விடுதலைச் சிறுத்தைகளும் அமைத்துள்ள கூட்டணி கடந்த தேர்தல்களில் தலித் வாக்குகளை பெருமளவில் கவர்ந்து வந்துள்ளது. இந் நிலையில் மத்திய தொலைத் தொடர்புத்துறை அமைச்சராக இருந்த ராசா மீது ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் ஜெயலலிதா நடத்திய தாக்குதல்களை, தலித் சமூகத்தினருக்கு எதிரான தாக்குதல்களாகக் காட்ட திமுக தலைவரும் முதல்வருமான கருணாநிதி முயன்று வருகிறார்.

ராசா குறித்த ஜெயலலிதாவின் கருத்துக்கள் தலித் சமுதாய மக்களிடம் எரிச்சலை உருவாக்கியுள்ளதாக தகவல்கள் வந்ததையடுத்து அவர்களை சமாதானப்படுத்த வேண்டிய நிலைக்கு ஜெயலலிதா தள்ளப்பட்டுள்ளார். இதனால் தனது முதல் தொகுதி உடன்பாட்டை தலித் கட்சிகளுடன் செய்து கொண்டுள்ளது அதிமுக என்கிறார்கள்.

டாக்டர் கிருஷ்ணசாமியின் புதிய தமிழகம் கட்சிக்கு 2 தொகுதிகளையும், செ.கு.தமிழரசனின் இந்திய குடியரசுக் கட்சிக்கு ஒரு தொகுதியையும் ஒதுக்கியுள்ளார் ஜெயலலிதா.

புதிய தமிழகத்துக்கு ஒட்டபிடாரம், வாசுதேவநல்லூர் ஆகிய தொகுதிகளும் குடியரசுக் கட்சிக்கு விடுதலைச் சிறுத்தைகளுக்கு எதிராகப் போட்டியிடும் வகையில் வட மாவட்டத் தொகுதியும் ஒதுக்கப்படும் என்று தெரிகிறது.

தலித் மக்களுக்கு அம்மா அளித்த அங்கீகாரம்-தமிழரசன்:

தொகுதி உடன்பாடு குறித்து தமிழரசன் கூறுகையில், தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்காக முதலில் தலித் கட்சிகளுக்கு புரட்சித் தலைவி தொகுதிகளை ஒதுக்கீடு செய்துள்ளார். இதை, தலித் சமுதாய மக்களுக்கு அம்மா அவர்கள் அளித்த மிகப் பெரிய அங்கீகாரமாகக் கருதுகிறோம். தமிழகத்தில் இப்போதுள்ள தலித் விரோத அரசை அகற்ற தமிழ்நாட்டில் உள்ள அடித்தளத்து மக்கள் அனைவரையும் அதிமுகவுக்கு ஆதரவாக அணி திரட்டிட எங்கள் கட்சியினர் மிகக் கடுமையாக உழைப்பார்கள். தேர்தலில் அதிமுக அணிக்கு வரலாறு காணாத வெற்றி கிடைக்கப் போவது உறுதி என்றார்.

தொகுதி பங்கீடு மகிழ்ச்சி அளிக்கிறது-கிருஷ்ணசாமி:

புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி கூறுகையில், அதிமுக கூட்டணியில் புதிய தமிழகத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள இடங்கள் மனநிறைவையும், மகிழ்ச்சியையும் அளிக்கிறது. சட்டமன்ற தேர்தலில் அதிமுக வரலாற்று சிறப்பு மிக்க வெற்றியை பெறுவதற்கு புதிய தமிழகம் பாடுபடும் என்றார்.

இதற்கிடையே புதிய தமிழகத்தை கூட்டணியில் சேர்த்ததற்கு தென் மாவட்டங்களில் தேவர் உள்ளிட்ட முக்குலத்தோர் சமுதாய மக்களிடையே எதிர்ப்பு நிலவ வருகிறது. அதிமுகவுக்கு ஆதரவான இந்த சமூக மக்களை சமாதானப்படுத்தவே நடிகர் கார்த்திக்கின் நாடாளும் மக்கள் கட்சியை கூட்டணியில் சேர்த்தார் ஜெயலலிதா. இவரும் அதிமுகவிடம் 2 தொகுதிகள் கேட்டு வருவதாகத் தெரிகிறது.

அதே போல இன்னொரு முக்குலத்தோர் சமூகக் கட்சியான டாக்டர் சேதுராமனின் அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழகமும் அதிமுகவில் சேர்க்கப்பட்டுள்ளதால், புதிய தமிழகம், இந்திய குடியரசுக் கட்சியை சேர்த்ததால் முக்குலத்தோர் மத்தியில் ஏற்பட்டுள்ள எதிர்ப்பை ஈடு செய்துவிட முடியும் என்று ஜெயலலிதா கருதுகிறார்.

முதலில் தலித் சமுதாய கட்சிகளுடன் தொகுதி உடன்பாடு செய்து கொண்டதையடுத்து, அடுத்ததாக முக்குலத்தோர் கட்சியான நாடாளும் மக்கள் கட்சி மற்றும் அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழகம் ஆகியவற்றுடன் வரும் வெள்ளிக்கிழமைக்குள் ஜெயலலிதா தொகுதி உடன்பாடு காண்பார் என்கிறார்கள்.

இதைத் தொடர்ந்து இஸ்லாமியர்களின் கட்சியான மனித நேய மக்கள் கட்சியுடனும், நடிகர் சரத்குமாரின் கட்சியையும் இழுத்து அவருடனும் அதிமுக தொகுதி உடன்பாடு செய்யுமாம்.

இவர்களுக்கு எல்லாம் மொத்தமாகவே 10 இடங்கள் வரை தந்துவிட்டு மிச்சமுள்ள 224 தொகுதிகளை விஜய்காந்த்தின் தேமுதிக வருகிறதா இல்லையா என்பதைப் பார்த்துவிட்டு மதிமுக, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்டுகளுடன் பகிர்ந்து கொள்வார் ஜெயலலிதா என்கிறார்கள்.

விஜய்காந்த் தரப்பு இழுபறி தொடர்வதால் பாமகவை இழுக்கும் வேலைகளையும் அதிமுக விடாமல் தொடர்ந்து வருகிறது.

மொத்தத்தில் தனது மக நட்சத்திரம், நிறைந்த பெளர்ணமி, கூட்டுத் தொகை 9 ஆகியவை சேர்ந்து வரும் பிப்ரவரி 18ம் தேதி கூட்டணி விஷயத்தில் ஜெயலலிதா மிக முக்கிய முடிவை அறிவிக்கலாம் என்கிறார்கள்.

பிறந்த நாள் முதல் ஜெ. தேர்தல் பிரசாரம்:

இந் நிலையில் தனது பிறந்த நாளான 24ம் தேதியே தேர்தல் பிரசாரத்தை தொடங்க ஜெயலலிதா திட்டமிட்டு இருப்பதாக அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

முதல் கட்டமாக கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்படும் தொகுதிகளில் ஜெயலலிதா பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. தொடர்ந்து மற்ற தொகுதிகளுக்கு சென்று பிரசாரம் செய்கிறார். ஜெயலலிதா பிரசார சுற்றுப் பயண திட்டம் தயாராகி வருகிறது. அவருக்கான பிரச்சார வேன் மும்பையில் தயாராகிவிட்டது.

வழக்கமான ஏ.சி. வேனுக்குள் அமர்ந்தபடியே பிரச்சாரம் செய்யும் ஜெயலலிதா இம்முறை, வேனுக்குள் நின்றபடி, வெளியே மக்களைப் பார்த்து பிரச்சாரம் செய்யும் வகையில் வேனின் கூரையில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

இளம்பெண்கள் பாசறை துணை செயலாளர் கவிதா:

இந் நிலையில் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில், அதிமுக இளைஞர்-இளம்பெண்கள் பாசறை துணைச் செயலாளர் பொறுப்பில் ஆர்.கவிதா இன்று முதல் நியமிக்கப்படுகிறார் என்று கூறப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+