For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அதிமுகவுடன் சமரசத்துக்கு தா.பாண்டியன் ரெடி: தேமுதிக 3 நிபந்தனைகள்-வைகோ வருவாரா-அமையுமா 3வது அணி?

Google Oneindia Tamil News

vijayakanth and Vaiko
சென்னை: அதிமுகவுடன் மீண்டும் கூட்டணிக் கட்சிகள் பேச்சுவார்த்தையை ஆரம்பித்துள்ளன. பாம்குரோவ் ஹோட்டலில் வைத்து தா.பாண்டியன் உள்ளிட்டோரை அதிமுக அணியினர் பேசியுள்ளனர். இருப்பினும் தேமுதிகவுக்கு கேட்ட தொகுதிகளைத் தந்தே ஆக வேண்டும் என விஜயகாந்த் தற்போது பிடிவாதமாக உள்ளதால் குழப்ப நிலை நீடிக்கிறது.

கூட்டணிக் கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கி முடிக்காத நிலையில், திடுதிடுப்பென 160 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்தார் ஜெயலலிதா. இதைப் பார்த்த தேமுதிக, கம்யூனிஸ்டுகள், புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சிகள் அதிர்ச்சி அடைந்தன. காரணம், அவர்கள் கேட்ட, வென்றிருந்த தொகுதிகளையும் தன் வசம் ஜெயலலிதா எடுத்துக் கொண்டதே.

இதையடுத்து நேற்று இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ் கம்யூனிஸ்ட், மூவேந்தர் முன்னேற்ற முன்னணி, புதிய தமிழகம், பார்வர்ட் பிளாக் ஆகிய கட்சிகள் கூடி ஆலோசித்தன. பின்னர் இக்கட்சிகளின் தலைவர்கள் விஜயகாந்த்தை சந்தித்து ஆலோசித்தனர். இதனால் 3வது அணி உருவாகப் போவதாக செய்திகள் பரவின.

இருப்பினும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. மாறாக, அதிமுகவுக்கு நெருக்கடி தரும் வகையிலேயே இவ்வாறு அவர்கள் கூடிப் பேசியதாக ஒரு தகவல் வெளியானது.

இந்த நிலையில் ஜெயலலிதாவும் களத்தில் இறங்கினார். தா.பாண்டியன், டாக்டர் சேதுராமன் உள்ளிட்டோரை பாம்குரோவ் ஹோட்டலுக்கு அழைத்து அதிமுக குழுவினர் நேற்று மாலை பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது நீங்கள் கேட்கும் தொகுதிகள் தரப்படும் என அதிமுக தரப்பில் உறுதி அளித்ததாக கூறப்படுகிறது.

ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்ற வகையில் சசிகலாவுக்கு நெருக்கமானவரான தா.பாண்டியன், அந்தத் தரப்பிலிருந்து பேச்சு நடத்தப்பட்டால் சமரசத்துக்குத் தயாராகிவிடுவார் என்றே கருதப்படுகிறது. அதே போல இவர்களது சமுதாயத்தைச் சேர்ந்த மூவேந்தர் முன்னணிக் கழகத் தலைவர் டாக்டர் சேதுராமனும் சமரசத்துக்கு தயாராகவே உள்ளார்.

அதிமுக இழுத்த இழுப்புக்கு தா.பாண்டியன் போகத் தயங்க மாட்டார் என்பதால், தேமுதிகவுக்கான தொகுதிகளைப் பெறுவதில் அதிமுகவுக்கு நாம் தனித்து நமது நெருக்கடியைத் தர வேண்டும் என்று விஜய்காந்த் முடிவு செய்துள்ளார்.

இதையடுத்து அதிமுகவுக்கு தேமுதிக தரப்பு 3 முக்கிய நிபந்தனைகளைப் போட்டுள்ளது. முதல் நிபந்தனை, நாங்கள் கேட்ட 21 தொகுதிகளை கண்டிப்பாக கொடுக்க வேண்டும். இரண்டாவது நிபந்தனை, தேர்தல் பிரசாரம் உள்ளிட்டவற்றில் எங்களுடன் சேர்ந்தே திட்டமிட வேண்டும்.

மூன்றாவது நிபந்தனை மதி்முகவுக்கும் அதிமுக அணியில் இடம் தர வேண்டும் என்பது. முதல் இரண்டு நிபந்தனைகளை அதிமுக ஏற்றுக் கொண்டுவிட்டால், வைகோ விஷயத்தில் ஜெயலலிதாவை விஜய்காந்த் வற்புறுத்த மாட்டார் என்று தெரிகிறது.

அதே போல சென்னை விருகம்பாக்கம் தொகுதியில் விஜயகாந்த் மனைவி பிரேமலதா போட்டியிட விரும்புவதாக கூறப்படுகிறது. ஆகவே, விருகம்பாக்கம், அண்ணாநகர் உள்பட தாங்கள் விரும்பும் தொகுதிகளை அதிமுக ஒதுக்கீடு செய்யவேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர்.

மூன்றாவது அணி விஷயத்தில் இன்று முடிவை அறிவிப்பேன் என்று நேற்று விஜயகாந்த் கூறியிருந்தார். நேற்று காலை நடத்தியதைப் போலவே நேற்று இரவும் விஜய்காந்த், மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், புதிய தமிழகம், பார்வர்ட் பிளாக் கட்சித் தலைவர்கள் தேமுதிக அலுவலகத்தில் விஜய்காந்தை சந்தித்து ஆலோசனை நடத்தினர்.

இன்றும் அவர்களது ஆலோசனைகள் தொடர்கின்றன. அதிமுக இறங்கி வராவிட்டால் இன்றைய ஆலோசனைகளில் வைகோவையும் இழுக்க இந்தத் தரப்பு முயற்சிக்கலாம் என்று தெரிகிறது.

இவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தச் செல்ல வேண்டியிருக்கும் என்பதால் தனது நிகழ்ச்சிகளையெல்லாம் ரத்து செய்துவிட்டு சென்னையில் முகாமிட்டுள்ளார் வைகோ. இன்று நெல்லையில் நடக்கயிருந்த தேர்தல் நிதியளிப்புக் கூட்டத்துக்குச் செல்வதையும் வைகோ தவிர்த்துவிட்டார்.

அதிமுகவுடன் சமரசம் ஏற்படாவிட்டால் வைகோவை இந்தக் கட்சிகள் பேச்சுவார்த்தைக்கு அழைக்கும். இதனால் எதுவும் நிச்சயமில்லாத நிலை தான் இன்னும் தொடர்கிறது.

English summary
DMDK leader VIjayakanth has urged ADMK to allot 21 seats as their wish to conitnue in the alliance. Left leaders and ADMK team met yesterday and had a detailed talks.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X