ஜெ. ஆட்சியில் இருந்தபோது இஸ்லாமியர்களுக்காக என்ன செய்தார்?-கருணாநிதி கேள்வி

Subscribe to Oneindia Tamil

Karunanidhi
சென்னை: இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள கேள்வி பதில் பாணி அறிக்கை:

கேள்வி: அ.தி.மு.க. ஆட்சி அமைந்தவுடன் இஸ்லாமியர்களுக்கான இடஒதுக்கீடு உயர்த்தி வழங்கப்படும் என்று ஜெயலலிதா பேசியிருக்கிறாரே?

பதில்: யாரை ஏமாற்றினாலும் இஸ்லாமியப் பெருமக்களை ஜெயலலிதாவினால் ஏமாற்ற முடியாது. இஸ்லாமியர்களுக்கும், தி.மு.க.விற்கும் உள்ள உடன்பாடு, ஒற்றுமை என்பது அண்ணாவும் காயிதேமில்லத்தும் இருந்த காலத்திலிருந்து தொடர்ந்து வருகின்ற உடன்பாடு.

ஏன், இந்தத் தேர்தலிலே கூட இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு தி.மு.க. கூட்டணியில் முதலில் 3 இடங்கள்தான் பகிர்ந்து கொள்ளப்பட்டன. அதன் பின்னர் காங்கிரஸ் கட்சியின் சார்பில் 63 இடங்கள் வேண்டுமென்று வலியுறுத்திய நேரத்தில், தி.மு.க.விற்கு அத்தனை இடங்களை ஒதுக்க முடியாத சூழ்நிலையில் - முஸ்லீம் லீக் கட்சியின் தலைவர்களான ஈ.ஏ.அகமதுவும், காதர்மொய்தீனும் தி.மு.க. கேட்டுக் கொள்ளாத நிலையிலேயே, பா.ம.க. எப்படி தங்களுக்கு ஒதுக்கப்பட்ட 31 இடங்களில் ஓர் இடத்தை காங்கிரசுக்கு அளிக்க முன்வந்ததைப் போலவே தாங்களாகவே முன்வந்து, தங்களுக்கு ஒதுக்கப்பட்ட 3 இடங்களில் ஓர் இடத்தினை காங்கிரஸ் கட்சிக்கு முஸ்லீம்லீக் கட்சி பெருந்தன்மையோடு விட்டுக் கொடுத்தது.

அதைக்கூட ஒரு சிலர் இஸ்லாமியர்களுக்கு 3 இடங்களை தி.மு.க. முதலில் அளித்துவிட்டு, அதிலே ஓர் இடத்தைப் பறித்துக் கொண்டதாக அவதூறு செய்தார்கள். ஆனால் நானே அண்ணா அறிவாலயத்திற்கு காதர் மொய்தீனையும், தமிழ் மாநில தேசிய லீக் என்ற பெயரில் தனியாக இயங்கி வந்த திருப்பூர் அல்தாப்பையும் அழைத்து இருவருடனும் பேசி, இரண்டு இயக்கங்களையும் ஒன்றாக இணைத்து வைத்ததோடு - இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு மீண்டும் ஓர் இடத்தைச் சேர்த்து 3 இடங்களாகவே உயர்த்திக் கொடுத்தோம்.

இதையெல்லாம் இஸ்லாமிய சமுதாயத்தினர் நன்றாகவே உணர்வார்கள்.

தேர்தல் நேரத்தில் மட்டும் இஸ்லாமியர்களுக்காக நீலிக் கண்ணீர் வடிப்பவர்கள் யார் என்பது நன்றாகத் தெரியும். தேர்தல் கூட்டத்தில் அ.தி.மு.க. ஆட்சி அமைந்தவுடன் இஸ்லாமியர் களுக்கான இடஒதுக்கீட்டினை உயர்த்தி வழங்க நடவடிக்கை எடுப்பேன் என்று பேசிய ஜெயலலிதா, இதற்கு முன்பு இரண்டு முறை ஆட்சியிலே பத்தாண்டு காலம் இருந்தாரே, அப்போது ஏன் இஸ்லாமியர்களுக்கு இடஒதுக்கீடு செய்யவில்லை?

தி.மு.க. ஆட்சியிலே இருந்த போது தானே இஸ்லாமியர்களுக்கு 3.5 சதவிகிதம் இடஒதுக்கீடு வழங்கியது. அதனையும் உயர்த்த வேண்டுமென்று கோரிக்கையை இந்திய யூனியன் முஸ்லீம் லீக், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் போன்ற அனைத்து இஸ்லாமிய அமைப்புகளும் அதன் தலைவர்களும் வைத்ததையொட்டி - தற்போது தி.மு.க. சார்பில் வைக்கப்பட்ட தேர்தல் அறிக்கையில், "இஸ்லாமிய மக்களின் நீண்டகாலக் கோரிக்கையான இடஒதுக்கீட்டுக் கொள்கையை ஏற்று 3.5 சதவிகிதம் அளித்தது தி.மு.க. ஆட்சிதான்.

இந்த ஒதுக்கீட்டு அளவினை மேலும் உயர்த்த வேண்டுமென்ற கோரிக்கை குறித்து பரிசீலிப்போம்'' என்று எழுதப்பட்டு, படிக்கப்பட்டு அது ஏடுகளிலும் வெளி வந்துள்ளது. எனவே தேர்தலுக்காக - வாக்குக்காக சொல்வது யார், உண்மையிலேயே அக்கறையோடு செயல்படுத்துபவர் யார் என்பதை அவர்கள் நன்றாகவே அறிவார்கள்.

இஸ்லாமியர்களுக்கு இன்னும் ஞாபகப்படுத்த வேண்டுமேயானால் - கரசேவை நேரத்தில் அதனை வலியுறுத்தி தேசிய ஒருமைப்பாட்டு மன்றக் கூட்டத்தில் பேசிய ஜெயலலிதா, பெரும்பான்மையினரும் அவர்களுடைய உரிமைகளை அனுபவிக்க அனுமதிக்க வேண்டும். இந்த நாட்டு மக்கள் அயோத்தியில் கோவில் கட்டப்பட வேண்டும் என விரும்புகிறார்கள் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. இதை நமது முஸ்லீம் சகோதரர்கள் புரிந்து கொண்டு உத்தரப்பிரதேச இந்துக்களின் விருப்பத்தை நிறைவேற்ற முன்வர வேண்டும்'' என்று பேசி அப்போதே ஏடுகளில் எல்லாம் அந்தப் பேச்சு வெளியிடப்பட்டது.

அப்போது ஜெயலலிதா அளித்த பேட்டியில்,

கேள்வி: இஸ்லாமியர்களுக்கு ஆந்திர மாநிலத்தில் ஆட்சி செய்கிற காங்கிரஸ் அரசு 5 சதவிகித இடஒதுக்கீடு கொடுத்துள்ளது. நீங்கள் தேர்தலின்போது இதற்கு ஆதரவாக வாக்குறுதி கொடுத்தீர்களே?

ஜெயலலிதா: இல்லையே? அது தொடர்பாக எந்த வாக்குறுதியும் கொடுக்கவில்லையே!

கேள்வி: சிறுபான்மை சமுதாயமான இஸ்லாமியர்களுக்கு இடஒதுக்கீடு கொடுப்பது பற்றி உங்கள் கருத்து என்ன?

ஜெயலலிதா: முஸ்லீம்கள் மட்டும் சிறுபான்மையினர் அல்ல. கிறித்தவர்கள் இருக்கிறார்கள், பார்சிகள் இருக்கிறார்கள், புத்த மதத்தினர் இருக்கிறார்கள், தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் முஸ்லீம்கள், கிறித்தவர்கள் சமமாக இருக்கிறார்கள். முஸ்லீம்களுக்கு தனி ஒதுக்கீடு அளித்தால் நாளை கிறித்தவர்களும் இடஒதுக்கீடு கேட்பார்கள். அப்புறம் மற்ற சிறுபான்மையினரும் கேட்பார்கள். எனவே இவ்வாறு இடஒதுக்கீடு அளிப்பது இயலாத ஒன்றாகும். அரசியல் சட்டத்தின் அடிப்படையில் முஸ்லீம்கள் ஏற்கனவே பல சலுகைகளை அனுபவித்து வருகிறார்கள். பெரும்பான்மைச் சமூகத்தினர் அந்தச் சலுகைகளையெல்லாம் அனுபவிக்கவில்லை.

இதற்குப் பிறகு 30-7-2003 அன்று செய்தியாளர் ஒருவர் அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதை ஆதரிக்கிறீர்களா?'' என்று கேட்டபோது ஜெயலலிதா என்ன சொன்னார்? "ஆமாம், ஆதரிக்கிறேன். அயோத்தியில் ராமர் கோவில் கட்ட முடியவில்லை என்றால் வேறு எங்கே கட்ட முடியும்?'' என்று ஜெயலலிதா எதிர்க் கேள்வி எழுப்பினார்.

இப்படியெல்லாம் ஜெயலலிதா பேசியதை மறைத்துவிட்டு தற்போது இடஒதுக்கீட்டு அளவை உயர்த்துவேன் என்று தேர்தல் கூட்டத்திலே பேசினால் அதை அவர்கள் நம்புவார்களா? இன்னும் ஜெயலலிதாவிற்கு விளக்கம் சொல்ல வேண்டுமென்று விரும்பினால் தி.மு.க. ஆட்சியில் இஸ்லாமியப் பெருமக்களுக்கு என்னென்ன சலுகைகள் செய்யப்பட்டன என்பதையும் விரிவாக எழுதலாம் என்று கூறியுள்ளார் கருணாநிதி.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+