For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கிருஷ்ணகிரி காங். வேட்பாளர் ஆப்சென்ட்: ஹசீனா மீண்டும் வேட்பாளராகிறார்

By Siva
Google Oneindia Tamil News

Haseena Syed
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி தொகுதி காங்கிரஸ் வேட்பாளரான மக்பூல்ஜான் நேற்று வேட்பு மனு தாக்கல் செய்யாததால் அங்கு குழப்பம் ஏற்பட்டுள்ளது. இதனால் முதலில் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட அழகுக் கலை நிபுணரான ஹசீனா சயத்தே வேட்பாளராகக் கூடிய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

கடந்த 23-ம் தேதி வெளியிட்ட காங்கிரஸ வேட்பாளர் பட்டியலில் கிருஷ்ணகிரி தொகுதி வேட்பாளராக ஹசீனா சையத் அறிவிக்கப்பட்டார். இதற்கு கட்சியில் எதிர்ப்பு கிளம்பியது. இதற்கிடையே அவர் நேற்று முன்தினம் கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் சென்று வேட்பு மனு தாக்கல் செய்தார். அப்போது அவருடன் ஒரு காங்கிரசார் கூட வரவில்லை.

இந்நிலையில் அன்று மாலையே கிருஷ்ணகிரி வேட்பாளர் ஹசீனா சையதை மாற்றிவிட்டு மக்பூல்ஜான் என்பவரை புதிய வேட்பாளராக கட்சி அறிவித்தது.

இதற்கும் உள்ளூர் காங்கிரஸ் நிர்வாகிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.மீண்டும் வேட்பாளரை மாற்ற வேண்டும் அல்லது தேர்தல் பணிகளை ஒட்டுமொத்தமாக புறக்கணிப்பது என முடிவு செய்தனர்.

நேற்று தான் வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள். மக்பூல்ஜான் நேற்று 3 மணி வரை வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை. அவர் எங்கே என்றும் தெரியவில்லை. இதனால் குழப்பம் அதிகரித்தது.

அவர் வரவில்லை என்றால் என்னவென்று மாவட்ட காங்கிரசின் முக்கிய நிர்வாகிகள் 9 பேர் மனுதாக்கல் நேரம் முடிவதற்குள் வேட்புமனு தாக்கல் செய்தனர். இதனால் கிருஷ்ணகிரி தொகுதிக்கான காங்கிரஸ் வேட்பாளர் யார் என்று தெரியாமல் உள்ளது. வரும் 30-ம் தேதி வெளியாகும் இறுதி பட்டியலால் தான் இந்த குழப்பம் தீரும்.

இந்த குழப்பம் ஒரு புறம் இருக்க, மக்பூல்ஜான் மனுதாக்கல் செய்யவில்லை என்றதும் ஹசீனாசையதின் ஆதரவாளர்கள் அவர் தான் காங்கிரஸ் வேட்பாளர் என்று நினைத்து பெங்களூர் ரோட்டில் உள்ள மாவட்ட திமுக அலுவலகம் முன்பு பட்டாசு வெடித்து கொண்டாடினர். அப்போது வேட்பு மனு தாக்கல் செய்துவிட்டு வந்த போட்டி வேட்பாளர்களுக்கும், பட்டாசு வெடித்தவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

அங்கிருந்த மாவட்ட திமுக அலுவலகம் முன்பு நின்று கொண்டிருந்த திமுக மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் திருமலை, நகர்மன்ற உறுப்பினர் ராஜா, சுப்பிரமணி, முத்து ஆகியோர் அசீனாவின் ஆதரவாளர்களுக்கு ஆதரவாக பேசியதாக தெரிகிறது. இதைக் கேட்ட காங்கிரஸ் போட்டி வேட்பாளர்கள் தரப்பினர் கோபம் அடைந்தனர்.

இதையடுத்து இருதரப்பு தொண்டர்களிடையே கடும் மோதல் ஏற்பட்டு கைகலப்பு, அடிதடி நடந்தது. இந்த மோதலில் காங்கிரஸ் நிர்வாகி நாராயணமூர்த்தி கடுமையாக தாக்கப்பட்டார்.

தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மோதலில் ஈடுபட்டவர்களை விலக்கிவிட்டு, எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தனர்.

ஹசீனா சயத் யார்?

சென்னையைச் சேர்ந்தவரான ஹசீனா சயத், அழகுக் கலை நிபுணர் ஆவார். முன்பு ஜெயா டிவியில் அழகுக்கலை குறித்த நிகழ்ச்சியை நடத்தி வந்தார். தற்போது காங்கிரஸ் தலைவர் தங்கபாலுவின் மெகா டிவியில் நிகழ்ச்சி நடத்தி வருகிறார்.

ஏர் ஹோஸ்டஸ் பயிற்சி அகாடமியையும் இவர் நடத்தி வருகிறார். தங்கபாலுவுக்கு நெருக்கமானவர் என்பதால்தான் இவருக்கு சீட் கொடுக்கப்பட்டதாக முன்னர் குற்றச்சாட்டு எழுந்தது. தற்போது மக்பூல் ஜான் வேட்பு மனுவே தாக்கல் செய்யாததால் ஹசீனாவுக்கு மீண்டும் வாய்ப்பு கூடி வந்துள்ளது.

English summary
Congress announced Haseena Syed as Krishnagiri candidate. She also filed her nomination on march 25th. In the mean while, congress changed the candidate and gave opportunity to Makbool Jan. He didn't file the nomination. But 9 other congress functionaries filed nomination. The final list of candidates will be released on march 30th, then only this confusion will be cleared.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X