For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இலங்கைத் தமிழர் நிலை... அதிர்ச்சியடைந்த இயன் போத்தம்!

Google Oneindia Tamil News

Ian Botham
மாங்குளம்: வட இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்கள், சிறுவர்கள் மற்றும் அந்தப் பகுதியின் மோசமான நிலை கண்டு தான் மிகவும் அதிர்ச்சியடைந்துள்ளதாக இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சர் இயன் போத்தம் தெரிவித்தார்.

இலங்கையின் வட பகுதியில் முத்தையா முரளிதரன் உருவாக்கவிருக்கும் சர்வதேச ஸ்போர்ட்ஸ் அகாடமி தொடர்பாக ஆராயும் நோக்கில் சர் இயன் போத்தம் மற்றும் மைக்கேல் வாகன் ஆகியோர் இலங்கைக்கு வந்துள்ளனர்.

போரில் மிகவும் பாதிக்கப்பட்ட பகுதிகளுள் ஒன்றான மாங்குளத்துக்கு இருவரும் ஹெலிகாப்டரில் சென்றனர். அங்குள்ள மக்களை, குறிப்பாக சிறுவர்களிடம் அதிக நேரம் உரையாடினார். சிறுவர்களுடன் கிரிக்கெட் விளையாடினார் போத்தம். நீண்ட நேரம் அந்தப் பகுதியைப் பார்த்தபின்னர் அவர் கூறுகையில், "இலங்கையின் வடபகுதி முற்றாக சிதைந்து போயிருக்கிறது. எங்கு பார்த்தாலும் வெறுமையான நிலங்கள், மொட்டையாக நிற்கும் மரங்கள், குண்டு துளைத்து சிதிலமான வீடுகள்... பார்க்க மிகவும் அதிர்ச்சியாகவும் வேதனையாகவும் இருந்தது.

அங்குள்ள சிறுவர்கள் மிக மோசமாக பாதித்துள்ளனர். ஒரு விளையாட்டு பொம்மையைக் கூட பார்த்தறியாத அந்த சிறுவர்கள், துப்பாக்கியைத் தூக்கினார்கள் என்பதை ஜீரணிக்க முடியவில்லை. நிச்சயம் இவர்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும். நிதி திரட்டித் தருவது பற்றி யோசித்து வருகிறேன்," என்றார்.

போத்தம் இலங்கைக்கு புதியவரல்ல. 2004-ம் ஆண்டு சுனாமியால் அந்நாடு பெருமளவு பாதித்தபோது, இயன் போத்தம் மனிதாபிமான நோக்கில் இலங்கைக்கு பயணம் செய்து பல்வேறு உதவிகளைச் செய்தார்.

பிரிட்டனில் 1000 மைல்கள் நடந்து சென்று கோடிக்கணக்கில் நிதி திரட்டிய போத்தம், உலகில் சிறுவர்கள் நலனுக்காக அதை வழங்கியது நினைவிருக்கலாம். மீண்டும் அதுபோல ஒரு முயற்சியை போத்தம் மேற்கொள்ளவிருப்பதாகத் தெரிகிறது.

முரளிதரன் உருவாக்கும் ஸ்போர்ட்ஸ் அகாடமி

போரினால் பாதிக்கப்பட்ட வட பகுதி தமிழ் சிறுவர்களின் விளையாட்டுத் திறனை மேம்படுத்தும் நோக்கில் மாங்குளத்தில் விளையாட்டு அகாடமி ஒன்றை உருவாக்குகிறார் இலங்கை அணியின் நட்சத்திர வீரரான முத்தையா முரளிதரன். பிரமாண்ட கிரிக்கெட் ஸ்டேடியத்துடன் இணைந்த விளையாட்டு வளாகமாக இந்த அகாடமி இருக்கும்.

அவரது இந்த திட்டத்தில் போத்தம் மற்றும் வாகன் இருவரும் இணைந்து செயல்படுவதாக அறிவித்துள்ளனர்.

இந்த விளையாட்டு அரங்கைக் கட்டுவதற்கான பணம் முழுவதையும் வெளிநாடுகளில் திரட்ட முரளிதரன், போத்தம் மற்றும் வாகன் திட்டமிட்டுள்ளனர்.

இதுகுறித்து முரளிதரன் கூறுகையில், " இந்த மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்பது எனது நீண்ட நாள் ஆதங்கம். போர்க் காலங்களில், நெருக்கடியான நேரத்தில் கூட இவர்கள் இலங்கை கிரிக்கெட் அணிக்கு அளித்த ஆதரவை மறக்கமுடியாது.

உலகக் கோப்பைக்குப் பிறகு, நான் ஓய்வு பெற்றதும் வட பகுதி சிறார்களுக்கு ஒரு தரமான பள்ளியை உருவாக்கவும் திட்டமிட்டுள்ளேன். மேலும் தகவல் தொழில்நுட்ப பயிற்சி மையம் ஒன்றையும், முதியோர் இல்லம் ஒன்றையும் உருவாக்கப் போகிறேன்...", என்றார்.

போர்காலத்திலும், அதற்கு பிந்தைய நாட்களிலும் தன்னை ஒரு தமிழராகவே காட்டிக் கொள்ளாமல் இருந்தவர் முரளிதரன். இப்போதுதான் முதல்முறையாக, வெளியில் வந்திருக்கிறார். இந்தத் திட்டங்களை, அரசின் ராஜபக்சே அரசின் ஆதரவோடே அவர் மேற்கொள்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தத் திட்டத்தில் இலங்கையின் முக்கிய கிரிக்கெட் வீரர்களான சமிந்த வாஸ், குமார சங்ககரா ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர்.

திட்டம் நிறைவேறும்போது அந்தப் பகுதியில் தமிழர்கள் இருப்பார்களா... அல்லது முழுமையாக சிங்கள குடியேற்றம் நடந்து முடிந்திருக்குமா என்று பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

English summary
Laureus World Sports Academy Member and England cricket legend Sir Ian Botham made an emotional visit to Northern Sri Lanka today to launch a new Laureus-supported community initiative in the heart of the former war zone.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X