சட்டசபை தேர்தல்: அதிமுகவுக்கு மதுரை-ராமநாதபுரம் டயோசிஸ் ஆதரவு
மதுரை: வரும் சட்டசபை தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு அளிப்பதாக மதுரை-ராமநாதபுரம் டயோசிஸ் அமைப்பு முடிவு செய்துள்ளது.
மதுரையில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவைச் சந்தித்து மதுரை - ராமநாதபுரம் டயோசிஸ் அமைப்பின் நிர்வாகிகள் தங்கள் ஆதரவை தெரிவித்தனர்.
இது குறித்து அதிமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,
அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா தேர்தல் பிரசாரம் செய்வதற்காக திங்கட்கிழமை அன்று மதுரையில் இருந்து புறப்படும் போது மதுரை-ராமநாதபுரம் டயோசிஸ் அமைப்பின் உதவி தலைவர் அருட்திரு சி. ஆப்ரகாம் ரெனால்ட், செயலாளர்கள் அருட்திரு வி.ஜேக்கப், அருட்திரு எம். ஜோசப், பொருளாளர் டி. ஜான் மகேந்திரன், பேராயருடைய மகன் ஜோயல் ஆசீர், பேராலய தலைமை குரு அருட்திரு ஜெ. தசையன், பசுமலை தலைமை குரு அருட்திரு ஏ. ரிச்சர்டு, திருமங்கலம் சபை குரு அருட்திரு ஆர்.வி. சிங், மூத்த குரு அருட்திரு ஜான் நவரத்தினம் ஆகியோரும், 20 சி.எஸ்.ஐ. சபை போதகர்களும் அவரை சந்தித்தனர். அப்போது கிறிஸ்தவர்களது பிரச்சனைகள் தீர்க்கப்படுவது குறித்து அதிமுக தேர்தல் அறிக்கையிலும், புரட்சித்தலைவி அம்மா அவர்கள், தமது தேர்தல் பிரசார சுற்றுப் பயணத்தின் போது பேசிய பேச்சுக்களும் தங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிப்பதாகவும், அதற்காக தங்களது நன்றியை தெரிவித்துக் கொள்வதாகவும் கூறினர்.
மேலும் வரும் சட்டசபை தேர்தலில் அதிமுகவிற்கு ஆதரவு அளிப்பதாகவும் தெரிவித்தனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications