திமுக கூட்டணி 210 முதல் 215 இடங்களில் வெல்லும்-ஸ்டாலின்
சென்னை & மதுரை: சட்டசரைத் தேர்தலில் திமுக கூட்டணி 210 முதல் 215 இடங்களில் வெல்லும் என்று துணை முதல்வர ஸ்டாலின் கூறினார்.
கலைஞர் தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டி:
கேள்வி: தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களுக்கு போய் வந்துள்ளீர்கள், மக்களுடைய ஆதரவு எப்படி இருக்கிறது?
பதில்: மக்களுடைய ஆதரவு நாளுக்கு நாள் பெருகிக் கொண்டே இருக்கிறது. குறைந்தது 210 முதல் 215 இடங்கள் வருவதற்கான வாய்ப்புகள் என்னுடைய கண்ணுக்கு தெரிகிறது. நிச்சயமாக திமுக ஆட்சியை முதல்வர் கருணாநிதி தலைமையில் மீண்டும் தொடர்வதற்காக மக்கள் உத்தரவிடுவதற்கு தயாராக இருக்கிறார்கள்.
கேள்வி: பல்வேறு இடங்களுக்கு போகும்போது மக்களை நேரடியாக சந்தித்து பேசுகின்றீர்கள். பல்வேறு இடங்களில் மக்கள் உங்களோடு ரொம்ப ஆதரவாக, உற்சாகமாக, அவங்க வீட்டுப் பிள்ளையாக உங்களை நினைச்சு வந்து பேசுகின்றார்கள். அப்படி பார்க்கும் போது மக்களிடம் ஒரு மிகப் பெரிய மனமாற்றம், திமுகவுக்கு ஆதரவாக ஒரு அலை பெருகியிருக்கிறது என்று நீங்கள் நினைக்கிறீங்களா?
பதில்: நிச்சயமாக கலைஞருடைய 5 ஆண்டுகால சாதனைகளும், திட்டங்களும் வெறும் திட்டங்களாக மட்டுமல்ல, சாதனைகளாக மட்டுமல்ல, அவைகள் எல்லாம் முறையாக மக்களிடத்தில் சென்றடைந்து இருக்கிறது. அதனால் மக்களிடத்தில் ஒரு பெரிய எழுச்சி, ஒரு பெரிய மகிழ்ச்சி. நிச்சயமாக இந்த தேர்தலில் ஒரு மாபெரும் வெற்றியை கலைஞருக்கு அவர்கள் வழங்க இருக்கிறார்கள்.
கேள்வி: இப்போது நீங்கள் பல்வேறு இடங்களுக்கு போகிறீர்கள். சொன்னதை செய்வோம், செய்வதை சொல்வோம் என்று சொல்லி வாக்கு கேட்கின்றீர்கள். ஆனால் ஒற்றுமையில்லாத நிலையில் எதிர்க்கட்சிகள் எப்படி வாக்கு கேட்கிறார்கள்?
பதில்: அவங்க சொன்னதையும், செய்ததையும் சொல்ல முடியாது. ஏனெனில் எதுவும் செய்யவில்லை. ஏனெனில் முதல்வர் கருணாநிதி சொன்னதையே திருப்பி சொல்லியிருக்காங்க. அதனால தான் தனிப்பட்ட முறையில் தனி நபர் விமர்சனத்தைதான் அவர்கள் திட்டமிட்டு செய்கிறார்கள். அதை மக்கள் ஏற்றுக்கொள்வதாக இல்லை. இதுதான் உறுதி.
கேள்வி: அவர்கள் கூட்டணியில் ஒற்றுமையில்லாத நிலை இருக்கு. புதன்கிழமை கூட கூட்டணி கட்சி தலைவர்கள் அனைவரும் ஒரே மேடையில் பேசினார்கள். ஆனால் விஜயகாந்த் உடம்பு சரியில்லாததால் போகவில்லை என்று சொன்னார். அப்படி சொல்லிவிட்டு இன்னொரு இடத்தில் பிரசாரம் செய்கிறார். இதை பார்க்கும்போது என்ன தெரிகிறது?
பதில்: அதாவது அந்த மேடைக்கு விஜயகாந்த் வராததால் ஜெயலலிதாவோட தலை தப்பியது. அவ்வளவுதான்.
கேள்வி: நீங்கள் போட்டியிடும் கொளத்தூர் தொகுதி பொதுமக்கள், துணை முதல்வர் போட்டியிடுகிறார் என்றும், எனவே இந்த தொகுதியை சிங்கப்பூராக மாற்றுவார் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது என்றும் சொல்கிறார்கள். உங்களுடைய பார்வையில் எப்படி இருக்கிறது?
பதில்: அதாவது தமிழ்நாடு முழுவதும் துணை முதல்வராக, அல்லது கட்சியினுடைய பொருளாளராக நான் சுற்றுப் பயணத்தை நடத்தியிருக்கலாம். ஆனால் கொளத்தூர் தொகுதி என்று வரும்போது நான் வேட்பாளராக இருக்கக்கூடிய நிலையில் மக்கள் ஆதரவு கொடுத்து என்னை தேர்ந்தெடுத்தால் இந்த தொகுதிக்கு தனிப்பட்ட முறையில் என்னால் முடிந்த எல்லா பணிகளையும், செய்வதற்கு ஒரு சேவகனாக பணிபுரிவதற்கு காத்து இருக்கிறேன். அதனால்தான் இந்த மக்கள் அந்த நம்பிக்கையோடு என்னை வரவேற்கிறார்கள். எனக்கு மகிழ்ச்சியை, ஊக்கத்தை, உற்சாகத்தை வழங்கி வருகிறார்கள்.
கேள்வி: திமுக வெற்றி இன்றைக்கு நிச்சயிக்கப்பட்டது, ஆனால் எதிர்க்கட்சி எந்த அளவுக்கு மோசமாக டெபாசிட் இழக்கிறார்கள் என்பதுதான் முக்கியம் என்று சொல்கிறார்கள். பொதுமக்கள் கருத்தும் அப்படித்தான் எதிரொலிக்கிறது. ஒட்டுமொத்த பார்வையில் தமிழகத்தில் எப்படி ஒரு நிலை இருக்கும் என்று நீங்கள் நினைக்கின்றீர்கள்?
பதில்: கொளத்தூர் தொகுதியில் மட்டும் அல்ல. ஒட்டுமொத்த தமிழ்நாட்டிலேயும் எல்லா தொகுதிகளிலும் இதே நிலைமைதான் இருக்கிறது என்பது என்னோட கணிப்பு என்றார்.
200 இடங்களுக்கு மேல் வெற்றி பெறுவோம்-அழகிரி:
திமுக கூட்டணி 200 இடங்களுக்கு மேல் வெற்றி பெறும் என்று மத்திய உரத்துறை அமைச்சர் அழகிரி கூறினார்.
நிருபர்களுக்கு அவர் அளித்த பேட்டி:
கேள்வி: இந்த தேர்தலில் திமுக- அதிமுக இடையே கடும் போட்டி நிலவி வருகிறதே?
பதில்: கடும் போட்டி இருப்பதாக நினைக்கவில்லை. ஏனென்றால், கடந்த 2006ம் ஆண்டு தேர்தலில் நாங்கள் கொடுத்த அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றி இருக்கிறோம். சாதனைகளை சொல்லி ஓட்டு கேட்கிறோம். அதனால் 200 தொகுதிகளுக்கு மேல் நிச்சயம் வெற்றி பெறுவோம்.
கேள்வி: திமுக அணி வெற்றி பெற்றால், முதல்வர் பட்டியலில் நீங்கள் இருப்பதாக தகவல் வருகிறதே?.
பதில்: நான் அப்படி எல்லாம் நினைக்கவில்லை. திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் எல்லோரும் 6வது முறையாக கருணாநிதி, முதல்வர் ஆவார் என்று கூறி உள்ளனர். ஆனால் நான் 6வது முறை மட்டுமல்ல, 7வது முறையும் அவர் தான் முதல்வர் ஆவார் என்று பொதுமேடைகளில் பேசி வருகிறேன்.
கேள்வி: இந்த தேர்தலுக்கு பின்னர், நீங்கள் மாநில அரசியலில் ஈடுபடப் போகிறீர்கள் என்ற பேச்சு அடிபடுகிறதே?.
பதில்: அதைப் பற்றி எல்லாம் நான் இப்போது எந்த முடிவும் எடுக்கவில்லை.
கேள்வி: இந்தத் தேர்தலில் 2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரம் தாக்கத்தை ஏற்படுத்துமா?
பதில்: 2ஜி ஸ்பெக்ட்ரம் பற்றி வரும் பொய்யான தகவல்களை மக்கள் நம்புவதில்லை. எதிர்க்கட்சிகள் எல்லாம், கலைஞரையும், அவர் குடும்பத்தினரையும் தாக்கிப் பேசி வருகின்றனர்.
கேள்வி: மிக்சி, கிரைண்டர் தருகிறோம் என்ற உறுதி மொழிகளை மக்கள் நம்புகிறார்களா?.
பதில்: கடந்த 2006ம் ஆண்டு தேர்தலில் சொன்னது போல, 1 ரூபாய்க்கு அரிசி, இலவச கலர் டிவி. விவசாய கடன் ரத்து போன்றவற்றை செய்து இருக்கிறோம். அதேபோல், இந்த தேர்தல் அறிக்கையில் சொல்லியிருப்பதை செய்வோம் என்று மக்கள் நம்புவார்கள். எதிர்க்கட்சிகளின் வாக்குறுதிகளை நம்ப மக்கள் தயாராக இல்லை.
கேள்வி: கோவையில் நடந்த அதிமுக கூட்டணி கட்சி கூட்டத்தில் விஜயகாந்த் கலந்து கொள்ளவில்லையே?
பதில்: இதை நீங்கள் அவரிடம் தான் கேட்க வேண்டும். இருப்பினும், ஏற்கனவே நான் சொன்னேன். அவர் அந்த கூட்டத்தில் கலந்து கொள்ள மாட்டார் என்று. ஏனென்றால், அவரிடம் அடி வாங்க ஜெயலலிதா தயாராக இல்லை.












Click it and Unblock the Notifications