ஆலங்குளம் அருகே திமுக தொண்டர் கொடூர கொலை
ஆலங்குளம்: ஆலங்குளம் அருகே முன்னாள் மத்திய அமைச்சர் ராதிகா செல்வியுடன் பிரசாரம் செய்தவர் தனியார் கல்லூரியி்ல் வெட்டி கொலை செய்யப்பட்டார். இதனால் அங்கு பதற்றம் நிலவுகிறது.
தென்காசி தொகுதியில் கடந்த இரு தினங்களாக முன்னாள் மத்திய அமைச்சர் ராதிகா செல்வி பிரசாரம் செய்து வருகிறார். அவருடன் வக்கீல் பாரிகண்ணன், பேய்குளம் ஹரிகிருஷ்ணன், வாசுதேவநல்லூர் கருப்பசாமி, தூத்துக்குடி பூதராஜ், கிருஷ்ணன், முத்தையாபுரம் பாலமுருகன் மற்றும் தூத்துக்குடி எஸ்எஸ் பிள்ளை தெருவை சேர்ந்த பாபுராஜ் ஆகியோர் தேர்தல் பணியில் ஈடுபட்டு வந்தனர்.
நேற்று இரவு இவர்கள் 7 பேரும் பிரசாரத்தை முடித்து கொண்டு ஆலங்குள்ம் அருகேயுள்ள சிவலார் குளத்தில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரியில் தங்கினர். அங்கு சாப்பிட்டு விட்டு இரவு 1 மணி வரை பேசிக் கொண்டிருந்தனர்.
பின்னர் பாபுராஜ், பாலமுருகன் ஆகியோர் மொட்டை மாடியில் படுத்து தூங்கினர். மற்றவர்கள் அங்கிருந்த அறையில் படுத்திருந்தனர். இந்நிலையி்ல் காலையில் பாபுராஜ் உடலில் ரத்த காயங்களுடன் இறந்து கிடந்தார். அவர் கழுத்து அறுக்கப்பட்டு இருந்தது.
அவரை பாலமுருகன் அரிவாளால் வெட்டிக் கொலை செய்து விட்டு தலைமறைவாகி விட்டார். தகவல் அறிந்த எஸ்பி விஜேயந்திர பிதாரி, ஆலங்குளம் டிஎஸ்பி மரியமாணிக்கம், இன்ஸ்பெக்டர் கோவிந்தன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. கல்லூரியில் படுத்திருந்த 5 பேரிடமும் விசாரணை நடத்தப்பட்டது.
பாபுராஜை பாலமுருகன் எதற்காக கொலை செய்தார், பணத்தகறாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர். பாபுராஜ் கொலையான தகவல் அறிந்த பலர் அங்கு கூடினர். அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
பாபுராஜ் உடலை படம் எடுக்க போலீசார் அனுமதிக்கவில்லை. முகத்தை மூடி ஆம்புலன்சில் ஏற்றிச் சென்றனர். கொலை செய்து வி்ட்டு தலைமறைவான பாலமுருகன் பிரபல ரவடியாவார். இவர் மீது ஏற்கனவே முத்தையாபுரம் காவல் நிலையத்தில் ஒரு கொலை வழக்கும், முக்கூடல் காவல் நிலையத்தில் கொலை முயற்சி வழக்கும் நிலுவையில் உள்ளது. திமுக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டவர் கொலையான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வாலிபர் கொலை செய்யப்பட்ட கல்லூரி அமைச்சர் பூங்கோதைக்கு சொந்தமானது எனவும் பணம் பட்டுவாடா காரணமாக இக்கொலை நடந்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
தென்காசியில் மனித நேய மக்கள் கட்சி தலைவர் கூறும்போது இக்கல்லூரியை தேர்தல் ஆணையம் சீல் வைத்து சோதனையிட வேண்டும். மேலும் இக்கொலை சம்பவம் குறித்து அமைச்சர் மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர்களிடம் விசாரணை நடத்த வேண்டும். தேர்தல் தினத்தன்று வன்முறையை திமுகவினர் ஏவி விடுவார்கள் என்பதற்கு இக்கொலை ஒரு முன்னோட்டம் என்றார்.












Click it and Unblock the Notifications